Published : 17 Jun 2018 11:15 AM
Last Updated : 17 Jun 2018 11:15 AM
தமிழ்க் கவிதையில் பெண் குரல்கள் தொடக்க காலத்திலிருந்தே ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பெண்களைப் பொதுச் சமூகத்தின் பார்வையுடன்தான் அணுகின. பெண்ணுக்கான ஒழுக்கங்கள், பெண் உடல் குறித்த புனிதங்கள் தீர்க்கமாக முன்னிறுத்தப்பட்டன. பெண்கள் எழுதிய கவிதைகளும் இந்த இலக்கணங்களுக்குள்தான் இயங்கின. 90-களுக்குப் பிறகு வந்த புதிய கவிதை இளவரசிகள் இந்த வரையறைகளைத் தகர்த்தெறிந்தார்கள். எந்த உடலைப் பலவீனமாகக் கருதினார்களோ, அந்த உடலையே ஆயுதமாக ஏந்தினார்கள். அவர்களில் ஒருவர் கவிஞர் சுகிர்தராணி.
புனிதங்களின் பாரம் தாங்காமல் குடைசாயும் பெண்ணுடலைக் காத்திரமாக அறிவிப்பதுதான் சுகிர்தராணியினுடைய கவிதைகளின் ஓர் ஆதாரமான அம்சம். தான் காணும் காட்சிகளையும் இந்த உடலின் அம்சமாகவே சுகிர்தராணி பார்க்கிறார். ஒரு தார்ச்சாலையை வெற்றுடம்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது அவரது ஒரு கவிதை. புறக் காட்சிகளின் பிரம்மாண்டத்தைத் திரும்பத் திரும்பக் கவிதைகளுக்குள் பெண்ணுடலாகப் பிரதிஷ்டை செய்கிறார் சுகிர்தராணி.
உடல்கள் என்றால் இந்தக் கவிதைகளில் அவை வெறுமனே உடல்களாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. உணர்ச்சியுள்ள உடல்களாக உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை சில கவிதைகளில் நீர்ச் சுனையைப் போல் பொங்கிப் பிரவாகம் எடுக்கின்றன. சில கவிதைகளில் தீக்குழம்புகள்போல் கனன்று எழுகின்றன. பெண்களின் அந்தரங்கமான அபிலாஷைகள் குறித்தும் வெளிப்படையாகச் சில கவிதைகள் பேசுகின்றன. அதுவும் ஒருவகையில் ரகசியம் கடந்து உடலை அறிவிக்கும் முயற்சிதான்.
70-களின் வலுவடைந்த நவீன தமிழ்க் கவிதையின் போக்குடன் ஒப்பிடக்கூடிய ஆற்றல் கொண்டவை சுகிர்தராணியின் கவிதைகள். தனிமனித இருப்பை மையமாகக் கொண்டு, அந்தக் காலகட்டத்தில் கவிதைகள் எழுதப்பட்டன. இந்தக் கருப்பொருளைச் சொல்வதற்கு ஒரு கூர்மையான மொழியும் உருவானது. சொற்சிக்கனமும் பொருள் கனமும் கூடிய அந்த மொழியைப் போன்றது சுகிர்தராணியின் மொழி. கட்டுக்கோப்பான வார்த்தைப் பிரயோகமும் அதிலிருக்கும் உண்மை ஒளியும் வாசகனை நெருங்கச் செய்கின்றன.
‘மாதத்தின் ரத்த நாட்களைப் போல்/ மீண்டும் சில ரகசியங்கள் மேலோடாய்ப் படிகின்றன’ என்பதுபோன்ற வியப்பூட்டும் உவமையும் ‘வார்த்தையின் புறமுதுகு’, ‘பகலின் மார்பு’ என்பனபோன்ற கிளர்ச்சியூட்டும் உருவகமும் அவரைப் பெண் கவிஞர்களுள் தனித்துவமானவர் ஆக்குகின்றன. உவமையும் உருவகமும் இல்லாமல் சுகிர்தராணியின் கவிதைகள் இல்லை எனலாம். அப்படி அதீதப் ப்ரியத்துடன் உவமைகளும் உருவகங்களையும் கையாள்கிறார். அவரது அரசியல் கவிதைகளில் இந்தத் தன்மையிலானவை அல்ல. கதை கூறும் தன்மையிலான சில கவிதைகளிலும் எளிமையையைக் கடைப்பிடிக்கிறார்.
முத்தம் என்பது சொல்லாக சுகிர்தராணியின் கவிதைகளில் அடிக்கடி வருகிறது. ஆனால் பெரும்பாலான முத்தங்கள், முத்தத்துக்கு முந்தைய, முத்தத்துக்குப் பிந்தைய எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையுமே சொல்கின்றன. முத்தத்தை ‘நான்கு உதடுகள்’ என ஒரு கவிதையில் சுகிர்தராணி சொல்கிறார். அந்த உதடுகள் வெட்டி எறியப்படுகின்றன. இந்த முத்தங்கள் புரிந்துகொள்ளப்படாத காதலின் வேதனையாகப் பல கவிதைகளில் திரும்பத் திரும்ப வருகிறது. சுகிர்தராணியின் ஒரு கவிதை நூலின் தலைப்பே ‘தீண்டப்படாத முத்தம்’.
சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு அம்சம், தலித் அரசியல். தனது முதல் தொகுப்பிலிருந்து இதைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார். மொழியின் கூர்மை கொண்ட அவரது மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டவை இந்தக் கவிதைகள். நேரடிக் கூற்றாக அமைந்த இவை, அலங்காரங்கள் அற்றவை. ‘செத்துப்போன மாட்டை அப்பா தோலுரிக்கும்போது காகம் விரட்டும் ஒரு சிறுமி’யின் குரலில் இந்தக் கவிதை விவரிக்கப்பட்டுள்ளது. தனது தலித் அடையாளத்தை மறைத்து நடந்த அந்தச் சிறுமி, பெரியவளாகிவிட்டாள். இப்போது ‘யாரேனும் கேட்க நேர்ந்தால்/ பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்/ பறச்சி என்று’ எனக் கவிதையை முடிக்கிறார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆணவக் கொலைகளையும் சுகிர்தராணியின் கவிதைகள் கூர்ந்து கவனித்துள்ளன. ‘ஒடுக்கப்பட்ட தோற்பறையிலிருந்து/ விடுதலையின் மாஇசையை/ மீட்டெடுக்கவும் பழகிக்கொண்டோம்’ என்கிறார் ஒரு கவிதையில். இவை அல்லாமல் ஒரு வெள்ளந்திச் சிறுமிபோல் சுகிர்தராணி சில கவிதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார். பாடலுடன் ஒரு மழையைப் பற்றி, செருப்புக் கடையில் விற்கப்படாமல் இருக்கும் செருப்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.
சுகிர்தராணியின் கவிதைகளில் உடல் என்னும் சொல், மொழியிலும் ஒன்றுடன் ஒன்றாகக் கலந்துள்ளது. மரத்தை, நிலத்தை, ஒரு காட்சியை, மனத்தை உறுத்தும் சந்தோஷத்தை, குதூகலத்தை என எதை வெளிப்படுத்துவதற்கும் உடல்களையே உவமையாகக் கொள்கிறார். ‘ஊமத்தையாய்ப் பூத்திருந்தது பகலின் மார்பு’ என்கிறது ஒரு கவிதை. கவிதையின் மூலம் உடலையும் இயற்கையையும் இணைக்கப் பார்க்கிறார் சுகிர்தராணி. ‘பருத்த தண்டுடைய பெருமரம்’ எனத் தன்னையே ஒரு இடத்தில் உருவகம் செய்துபார்க்கிறார்.
அவரே இயற்கையின் ஓர் அம்சமான பிறகு, அவரே ஒரு பூவைப் போல் ஒரு கவிதையில் பூக்கிறார். ‘இறுதியில் இயற்கை என் உலகாகிக் கிடக்கிறது’ என அவரே ஒரு கவிதையில் சொல்கிறார். ‘மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்/ அழிக்கப்படாத காடுகளைப் போல் கம்பீரம் வீசுகிறது’ என்ற கவிதை, பெண்ணுடலை இயற்கையின் பரிசுத்தத்துடன் ஒப்பிட்டு விவரிக்கிறது; இயற்கை சிதைக்கப்படுவதுபோல் திருமணம் என்னும் அமைப்பால் பெண்ணுடல் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதை ரத்தமும் சதையுமாக விவரிக்கிறது.
இந்தப் பெண்ணுடலையே ஆயுதமாக்கி ஆண்களின் இயலாமைகளைக் கண்டு கன்னச் சதை வலிக்கப் பரிகசித்துச் சிரிக்கிறது; வன்முறைக்கு எதிராக மூர்க்கம் கொள்கிறது; ஒரு அரசியல் முழக்கமாகவும் சில இடங்களில் எழுகிறது. தன்னைத் தானே கொண்டாடும் அந்த உடல் புறக்கணிப்பின் வேதனையையும் பாடுகிறது. நூற்றாண்டு காலமாகப் புரிந்துகொள்ளப்படாத உடல்களின் வேதனைப் பாடல்கள் என இவரது இந்தக் கவிதைகளை வரையறுத்துப் பார்க்கலாம்.
இரவு மிருகம்
பருவப் பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்.
கதவடைத்துவிட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்.
அப்போதுதான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது.
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்.
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT