Published : 10 Jun 2018 11:22 AM
Last Updated : 10 Jun 2018 11:22 AM
டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டியென மூன்று வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய வீராங்கனைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் அஞ்சும் சோப்ராவும் ஒருவர். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஏராளமான ‘முதல்’ சாதனைகளுக்கு வித்திட்ட அவர், பெண் ‘கிரிக்கெட் கடவுள்’ என்று சிறப்புக்கும் சொந்தக்காரர்!
விளையாட்டு மீது காதல்
டெல்லியில் பிறந்த அஞ்சும் சோப்ராவுக்கு சிறு வயது முதலே விளையாட்டு மீது தீராக் காதல். அவரது குடும்பமே விளையாட்டுத் துறையில் கோலோச்சிய குடும்பம் என்பதால் வந்த காதல் இது. அவருடைய தாத்தா வேத் பிரகாஷ் தடகள வீரராகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்தவர்; அவருடைய தந்தை கிஷன் பால் கோல்ஃப் வீரர்; அவருடைய சகோதரர் நிர்வன் கிரிக்கெட் வீரர்.
வீட்டிலேயே இத்தனை விளையாட்டுப் பிரியர்கள் இருந்ததால், சிறு வயது முதலே நீச்சல், கூடைப் பந்தாட்டத்தில் அஞ்சும் ஆர்வம் காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் அவரது கவனம் குவிந்தது. முதன்முறையாக மட்டையைத் தூக்கிக்கொண்டு அவர் மைதானத்துக்குச் சென்றபோது, அவருக்கு வயது ஒன்பதுதான். ஆனால், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் அவர் கிரிக்கெட்டில் உச்சத்தை அடைந்தார்.
கிரிக்கெட் மைல்கல்
கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது முதலே அஞ்சும் ஜொலிக்க ஆரம்பித்தார். இடது கை அதிரடி பேட்ஸ்வுமான உருவெடுத்த அவர், வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் அசத்தினார். அவரது அதிரடியான ஆட்டம் கிரிக்கெட்டில் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பள்ளி, கல்லூரி, மாவட்டம் என எல்லா அணிகளிலும் அஞ்சும் சோப்ராவின் பெயரும் மறக்காமல் இடம்பெற்றது. ஆல்ரவுண்டராக ஜொலித்ததால், 15 வயதுக்கு உட்பட்ட டெல்லி அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிவந்த அஞ்சும் சோப்ராவுக்கு, 1995-ம் ஆண்டு மறக்க முடியாதது.
அந்த ஆண்டு இந்திய மகளிர் அணி நியூசிலாந்து சென்றது. ஒரு நாள் தொடருக்கான அணியில் அஞ்சும் சோப்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அப்போது அவருக்கு வயது 17தான். 16 வயதில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சச்சின் டெண்டுல்கர் எப்படி இந்திய கிரிக்கெட்டின் முகமாக மாறினோரோ, அவரைப் போலவே மகளிர் அணியில் அஞ்சும் சோப்ரா உருவெடுத்தார். கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஆட்டக்காரராக அவர் களமிறங்கினார். ஆனால், எந்த நிலையில் இறங்கினாலும் சூழ்நிலைக்கேற்ப விளையாடுவதில் அவருக்கு நிகர் அவரே.
1995-ல் இங்கிலாந்து மகளிர் அணி இந்தியா வந்தபோது டெஸ்ட் அணியிலும் அஞ்சும் சோப்ராவுக்கு இடம் கிடைத்தது. மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஞ்சும் சோப்ரா, 4 அரை சதம் உட்பட 548 ரன்களை எடுத்திருக்கிறார்.
1990-களில் அறிமுகமான பல வீரர்களுக்கு இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் மகளிர் அணியில் அறிமுகமான அஞ்சும் சோப்ராவுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2006-ல் முதல் டி-20 போட்டியில் விளையாடிய அவர், இதுபோல் 18 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 127 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஞ்சும் சோப்ரா, 1 சதம், 18 அரை சதங்கள் உட்பட 2,856 ரன்களையும் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இதில் அவர் அடித்த முதலும் கடைசியுமான சதம் மிகவும் சிறப்பானது. 1999-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சவுதாம்டனில் 100 ரன்களை அஞ்சும் சோப்ரா விளாசியபோது, அது அவர் அடித்த முதல் சதம் மட்டுமல்லாமல், ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவரின் முதல் சதமாகவும் அமைந்தது.
தொடர் சாதனைகள்
2002-ல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தபோது, அவர் புரிந்தார். அவரது தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் அது. பாரல் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெளிநாட்டில் இந்திய மகளிர் அணி வென்ற முதல் டெஸ்ட் தொடர் என்ற சிறப்பு கிடைத்தது.
இந்தச் சாதனை மட்டுமல்ல, 2002-ல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 5-0 என்ற கணக்கில் அஞ்சும் சோப்ரா தலைமையில் இந்திய அணி வீழ்த்தியது. ஒரு கேப்டனாக எதிர் அணியை அனைத்து போட்டிகளிலும் வீழ்த்திய முதல் இந்திய பெண் கேப்டன் என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது. 100 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை, 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய வீராங்கனை (50 ஓவர் உலகக் கோப்பை 4; 20 ஓவர் உலகக் கோப்பை 2) என ஏராளமான ‘முதல்’ சாதனைகளுக்கு அன்ஜும் சோப்ரா சொந்தக்காரர்.
இன்று வர்ணனையாளர்
இவரைத் தேடி வராத விருதுகளே இல்லை. அஞ்சும் சோப்ராவின் நீண்ட கிரிக்கெட் பயணத்தில் ஏராளமான விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். 2000, 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சி. சிறந்த வீராங்கனை விருதைப் பெற்ற அவர், 2007-ல் அர்ஜுனா விருதையும் 2014-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.
1995-தொடங்கிய அஞ்சும் சோப்ராவின் கிரிக்கெட் பயணம், 2012-முடிவுக்கு வந்தது. ஒரு வீராங்கனையாக, கேப்டனாக மட்டுமே அறியப்பட்ட அஞ்சும் சோப்ரா, எழுத்தாளராகவும் உருவெடுத்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ‘விமன்ஸ் கிரிக்கெட் வேர்ல்ட்’ என்ற நூல் அவர் எழுதியதுதான்.
தற்போது 41 வயதாகும் அன்ஜும் சோப்ரா, இன்று விளையாடவில்லை என்றாலும், கிரிக்கெட் உடனான தன் உறவை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுள்ளார். தற்போது உலக ஆண்கள் கிரிக்கெட் வர்ணனையாளராக அவர் உள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டில் வர்ணனை செய்யும் முதல் இந்திய வீராங்கனையும் அவர்தான்!
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT