Published : 22 Sep 2024 07:01 AM
Last Updated : 22 Sep 2024 07:01 AM
பெண்கள் எவ்வளவுதான் முன்னேறினாலும் சமுதாயத்தில் அவர்களுக்கான போராட்டங்களுக்கு முடிவே இல்லை. பாதுகாப்பும் சமத்துவமும் பெண்களுக்கான சலுகை அல்ல. அவை அவர்களின் உரிமை என அனைவரும் உணரும் வரை இந்தப் போராட்டம் தொடர்கதையே.
பெண்களை மதிக்காத எந்தக் குடும்பமும் சமூகமும் முன்னேற்றம் காண முடியாது. பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்களோ அந்தத் தரத்தில்தான் குடும்பமும் சமுதாயமும் இருக்கும். அன்றைய ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளை இன்றைய பெண்கள் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ஆண்களைப் போல உடையணிவது, அதிகாரம் செய்வது, முரட்டுச் சாகசங்கள் செய்வது போன்றவற்றால் மட்டுமே சுதந்திரம் பெற்றவளாக உணர்வேன் என்பது பெண் சுதந்திரத்தை வேடிக்கையான விஷயமாக ஆக்கிவிடும்.
‘ஆண்களைப் போல்’ நடந்துகொள்வதில் பெண்ணுக்கு என்ன பெருமை? அவர்களின் மறுபிரதிகளாக, பிம்பங்களாக மாறுவதில் எங்கிருக்கிறது சுதந்திரம்? அப்படியென்றால் பெண்களைவிட ஆண்களே உயர்வானவர்கள், அந்த உயரத்தை நான் எட்டிப்பிடித்துவிட்டேன் பார்’ என்று நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதாகத்தானே பொருள். இதில் நம் தனித்தன்மை, மேன்மை எங்கிருக்கிறது?
ஆண் அறிவுப்பூர்வமாகவும், பெண் அறிவுடன் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்போது, இருவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றினால் மாபெரும் உயரங்களைத் தொடலாம். ‘ஆணை வெல்கிறேன்’ என்கிற போட்டியால் விளைவது அல்ல பெண்ணின் வளர்ச்சி. இயற்கையாகவே பெண்ணுக்குள் இருக்கும் பலத்தை உணர்ந்து ஆரோக்கியமான முறையில், நாம் நாமாகவே வாழ்ந்து காட்டுவதே பெண்ணின் வெற்றி.
பெண் வேலைக்குப் போவதும், சம்பாதிப்பதும், தன் காலில் நிற்பதும், பல சாதனைகள் செய்வதும் ஆணின் மதிப்பைப் பெறவோ, ஆணின் அடக்குமுறையை வெற்றிகொள்ளவோ அல்ல. இவை எல்லாமே பெண்களின் சுயமரியாதை சார்ந்தவை. பெண்கள் தங்கள் வெற்றியால், சாதனையால், வளர்ச்சியால், ஆணை வெல்லவில்லை. ஆண்டாண்டு கால அடக்குமுறையை அவர்கள் வெல்கிறார்கள். ‘ஆம், நான் பெண். பலமான சக்தி. மனதில் பலமும் மூளையில் திறனுமே என் மூலதனம்’ என்கிற தன்னம்பிக்கையே பெண் சுதந்திரத்துக்கு அடிப்படையே தவிர, ஆணை வெல்வது அல்ல. பாரதி பாடியதுபோல் விண்ணையளக்கும் விரிவே சக்தி, பெண் சக்தி.
நீங்களும் சொல்லுங்களேன்...
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT