Last Updated : 15 Sep, 2024 07:12 AM

 

Published : 15 Sep 2024 07:12 AM
Last Updated : 15 Sep 2024 07:12 AM

அன்பால் வெல்வோம்: மன்னிப்பு எனும் மாமருந்து

செப்டம்பர் 1 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் இடம்பெற்ற ‘உறவுகளைப் பலப்படுத்துவோம்’ அனுபவக் கட்டுரையைப் படித்ததும் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

எனது இரண்டாவது பிரசவத் தின்போது தாய் வீட்டுக்குச் செல்ல வில்லை. என்னைக் கவனித்துக் கொள்வதற்காக என் அம்மாதான் என் புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். தினமும் காலையில் எழுந்தது முதல் அவருக்கு ஓயாத வேலை. மாமியார் துரும்பைக்கூடக் கிள்ளிப்போட மாட்டார். நானும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

என் அம்மா தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருப்பதைப் பார்த்த பக்கத்துவீட்டுப் பெண், என் மாமியாரிடம் அதைப் பற்றிச் சொன்னார். மாமியாரோ, “பெண்ணைப் பெத்திருக்காங்கல்ல. அந்தப் பாவத்துக்கு இதையெல்லாம் செய்துதானே ஆகணும். அதுதானே அவங்க தலைவிதி” என்று சொன்னார். அதை என் அம்மா கேட்டுவிட்டார்போல. தாங்க முடியாமல் என்னிடம் சொன்னார். எனக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை. மாமியாரைக் கடிந்துகொண்டாலோ இதைப் பற்றிக் கணவரிடம் புகார் சொன்னாலோ தேவையில்லாத பிரச்சினைதான் ஏற்படும். குடும்ப அமைதி கெடும். அதற்காக அம்மாவை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை. ஒருவழியாக அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டு அடுத்த வாரமே ஊருக்கு அனுப்பிவிட்டேன்.

நான் பெரிதாகச் சண்டை போடுவேன், ஏதாவது கேட்பேன் என்று எதிர்பார்த்திருந்த மாமியாருக்கு என் மௌனம் பலத்த அதிர்ச்சி. என்னிடம் கேட்கவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டார். கைக்குழந்தையோடு நானே எல்லா வேலைகளையும் செய்தேன். அவருக்கு எந்தக் குறையும் வைக்காமல் கவனித்துக்கொண்டேன். அதன் பிறகு மாமியாருக்கு என்ன தோன்றியதோ சிறு சிறு வேலைகளைச் செய்தார். பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் என்னைப் பற்றிப் பெருமையாக வேறு சொல்லியிருக்கிறார்! “நான் பேசியதை என் பையனிடம் சொல்லியிருந்தால் இந்நேரம் வீடு ரெண்டாகியிருக்கும். ஆனால், என் மருமகள் அப்படிச் செய்யவில்லை. நானும் அன்னைக்கு என் சம்மந்தியை அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது” என்று சொல்லி வருத்தப்பட்டாராம். அந்தப் பெண் என்னிடம் இதைச் சொன்னபோது புன்னகைத்துக் கொண்டேன். என் மாமியார் அடிப்படையில் கெட்டவர் அல்ல. அன்றைக்கு ஏதோ அப்படிப் பேசிவிட்டார். அதைப் பேசிய அவர் மட்டுமே என் மாமியார் அல்லவே. இத்தனை நாள்கள் எனக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் இருப்பவரும் அவர்தானே. அதனால், மனதுக்கு வருத்தம் அளித்த அந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். புறக்கணிப்பும் மன்னிப்பும்கூடச் சிலநேரம் உறவுகளை வலுப்படுத்திவிடுவதைப் புரிந்துகொண்டேன்.

- நித்யா, சென்னை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x