Published : 10 Jun 2018 11:21 AM
Last Updated : 10 Jun 2018 11:21 AM
நெல்லை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய நாட்களில் எங்களோடு கரம்கோத்த 20 ஆயிரம் தொண்டர்களில் 15000 பேர் பெண்கள்! “இத்தனை நாளாக நீங்க எல்லாம் எங்கேதான் இருந்தீங்க?” என்று அறிவொளி இயக்கப் பெண்கள் மாநாடு ஒன்றில் முனைவர் வசந்திதேவி கேட்டார். தமிழ்ச் சமூகத்தில் கோயில், வழிபாடு இவற்றுக்கு அடுத்தபடியாகப் படிப்பதற்கும் கல்வி தொடர்பான செயல்பாடுகளுக்கும் பெண்களை வெளியே அனுப்புவதில் குடும்பங்களுக்குப் பெரிய மனத்தடைகள் இல்லை. அந்த மனநிலை, அறிவொளி இயக்கத்துக்குப் பெண்களைக் கொண்டுவர சாதகமாக இருந்தது.
சாதியிடம் தோற்கும் கல்வி
பொதுவாகப் பெண் குழந்தைகளைப் படிக்க கவைக்கும் ஆர்வமும் அக்கறையும் கடந்த பல பத்தாண்டுகளைவிட இன்று மிகவும் அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் இதைக் கேள்விக்கிடமற்ற அறிக்கையாகச் சொல்லிவிட முடியவில்லை. எனக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை நல்ல மதிப்பெண்கள் எடுத்துப் பட்டப்படிப்பு முடித்துவிட்டாள். விஞ்ஞானியாக வேண்டும் என்பது அவள் கனவு.
பள்ளிக்கல்விவரை மட்டுமே படித்த அவளுடைய பெற்றோருக்குத் தங்கள் குழந்தையைக் காலாகாலத்தில் ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பதே கனவாக இருக்கிறது. அவள் சக மாணவர்களோடு கலகலப்பாகப் பேசிப் பழகுபவள். இது பெற்றோருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜோசியன் வேறு வருகிற தை மாதத்துக்குள் அவளுக்கு மணம் முடிக்கவில்லை என்றால் வடக்குத் திசையிலிருந்து வரும் வேற்று ஜாதி, வேற்று மத பையனுடன் அவளுக்குப் பிணைப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட்டான்.
ஆகவே, தன் படிப்புக்காக அவள் பெற்றோரிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறாள். சில முக்கியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு எழுதித் தகுதியும் பெற்றிருக்கிறாள். ஆனாலும் அவளை ஊருக்குப் பக்கமாக இருக்கும் ஒரு தரமற்ற கல்லூரியில் சேர்த்து, மாப்பிள்ளை பார்க்கும் படலத்தையும் அந்தக் குடும்பம் தொடங்கியிருக்கிறது. அந்தக் குழந்தையின் கனவை நிறைவேற்ற சமூக ஏற்பாடு எதுவுமில்லை.
அரசின் கல்வித்துறையிலோ மகளிர் ஆணையம் போன்றவற்றிலோ இதுபோல் குடும்பங்களின் அறியாமையாலும் பிற்போக்கான பார்வையாலும் கல்வியை இழக்கும் பெண் குழந்தைகளுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தி அது குடும்பங்களின் முடிவுகளில் தலையிடும் உரிமைகொண்டதாக உருவாக்க முடியாதா?
“இது எங்கள் குடும்பப் பிரச்சினை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்று குடும்பங்கள் இழுத்து மூடுகிற பெரிய கதவுகளை, உடைத்துத் திறந்து பெண் குழந்தைகளை விடுதலை செய்து பறக்கவிடுகிற வல்லமை சமூகத்துக்கு இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது. ஆண்களோடு இயல்பாகப் பேசிச் சிரிக்கும் காரணத்தாலேயே கல்வியை மறுக்கும் சாதிய மனோபாவத்தை நாம் இன்றுவரை (பெற்றோருக்கு) வழங்கிய கல்வியால் உடைக்க முடியவில்லையே? சாதியிடம் தோற்று நிற்கும் பரிதாபகரமான நோஞ்சான் கல்விமுறை பலப்படுவது எக்காலம்?
அறிவுத் தேரை இழுத்த பெண்
அறிவொளி இயக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒளி மிகுந்த கண்களுடன் அந்த ஊரையே கலக்கிக்கொண்டிருந்த பெண் தொண்டர்களை நாங்கள் சந்தித்தோம்.
சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ஒரு கிராமத்தில் மங்களம் என்றோர் இளம்பெண் அறிவொளித் தொண்டராக இருந்தார். நாலு அண்ணன்மாருடன் கடைக்குட்டியாக அவள் பிறந்ததால் வீட்டுக்கு அவள் செல்லப் பிள்ளை. அறிவொளியில் அவள் செய்த அர்ப்பணிப்பு மிக்க பணியால் ஊருக்கே செல்லப் பிள்ளையாக அவள் மாறினாள். ஒவ்வோர் இரவும் வீடு வீடாகச் சென்று பெண்களை அறிவொளி மையத்துக்கு அழைத்து வருவாள்.
சமையலை முடிக்காமல் பெண்கள் கிளம்ப முடியாது என்பதால் இவளும் அந்தப் பெண்களுக்கு உதவியாகச் சமையல் வேலைகளில் கூடமாட இருந்து முடித்து வைத்து அழைத்து வருவாள். தண்ணீர்க் குழாய் ரிப்பேர் என்பதால் பெண்கள் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டியிருந்தது. அண்ணன்களின் துணையுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தோடு போராடி தண்ணீர்க் குழாயைச் சரி செய்து வைத்தாள்.
எதெல்லாம் பெண்கள் வகுப்புக்கு வரத் தடையாக இருக்கிறதென்று அந்தக் கிராமத்துப் பெண்கள் சொன்னார்களோ, அவற்றையெல்லாம் சரி செய்துதர முயன்றாள். அதெற்கெல்லாம் தானே பொறுப்பு என்பதாக ஓர் உணர்வு அவளுக்கு இருந்தது. அண்ணன்கள் நாலு பேரும் அவள் பெற்றோரும் அவள் சொன்னதையெல்லாம் செய்தார்கள். அவள்தான் அங்கே அரசாங்கம் என்பதுபோல இருந்த காட்சியைக் காண எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
விதியின் சதிராட்டம்
அறிவொளி இயக்கம் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பின் ஒரு நாள் சேரன்மகாதேவி அஞ்சலகத்தில் வைத்து மீண்டும் அவளைச் சந்தித்தேன். கடந்து சென்ற அந்தப் பத்தாண்டுகள் அவள் முகத்திலிருந்த சிரிப்பையும் பெருமித உணர்வையும் வெளிச்சத்தையும் பறித்துவிட்டிருந்தன. புனையா ஓவியம் என்று சொல்வார்களே அப்படி அவள் நின்றாள். அவள்தான் அரசாங்கமே என்ற நிலை இருந்ததே, அதெல்லாம் அவள் முகத்தில் வரையப்பட்ட வெறும் புனைவா, பூச்சா என்று என் மனத்தில் துக்கம் கசிந்தது.
அப்பா இறந்துவிட்டார். அண்ணன்கள் நாலு பேருக்கும் கல்யாணமாகித் தனித்தனியாகப் போய்விட்டார்கள். இவளுக்கும் தூரத்து ஊரில் சொந்தக்காரப் பையனுடன் கல்யாணமானது. போகப் போகத்தான் அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பது தெரிந்தது. ஐந்தாண்டுகள் போராடித் தோற்றுப்போன மங்களம் இப்போது பிறந்த வீட்டில் தனித்திருக்கும் தன் தாயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
“அறிவொளியில் எப்படி வேலை பார்த்தோம்? ஒரு வேலை வாங்கிக்கொடுக்க முடியுமா சார்?” - கண்ணீர் இல்லாமல் தன் கதையைச் சொல்லி முடிக்குமளவுக்கு மங்களம் பக்குவப்பட்டிருந்தாள். ஆனால், என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. வேலை வாங்கித்தர நம்மால் முடியாதே என்ற இயலாமை உணர்வே என் கண்களில் கசிந்தது. அவளோடு சேர்ந்து ஒரு தேநீர் அருந்தி அவளை அனுப்பிவைக்க மட்டுமே என்னால் முடிந்தது.
பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கமா?
தன் மீது எந்தக் குற்றமும் இல்லாமல் கணவன் செய்யும் தவறுகளுக்காக இயல்பு திரிந்து வாழ நேரும் பெண்கள் எத்தனை பேர்? வாழ்வையே இழந்தவர்கள் எத்தனை பேர்?
என் இணையருடன் பள்ளியில் வேலைபார்த்த ஆசிரியை ஒருவர் அன்பான கணவர், நான்கு குழந்தைகளுடன் நல்லபடியாக வாழ்ந்துகொண்டிருந்தார். கணவர் அவரைச் செல்லமாக ‘வாடா போடா’ என்றுதான் அழைப்பார். அதில்தான் எத்தனை கர்வம் அவருக்கு! ஒரு நாள் திடீரென்று கணவரைக் காணவில்லை. மாலைதான் தெரிந்தது, அவர்கள் வீட்டில் வேலைபார்த்த பெண்ணையும் காணவில்லை என்பது.
அவர்களின் கதையை இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால், குடை பிடித்துக் கம்பீரமாக எங்கள் தெருவில் நடந்துபோன அந்த ஆசிரியையின் நடை மாறிவிட்டது. நடுவீதியில் நிமிர்ந்த நன்னடை போட்ட அவர், இப்போது தெருவின் இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரத்துக்கும் அந்த ஓரத்திலிருந்து இந்த ஓரத்துக்குமாக நிதானமிழந்த ஒரு நடைக்கு வந்துவிட்டார். ஆண்கள் செய்யும் தவறுகளைச் சுமக்க மாட்டாமல் இயல்பிழந்து தள்ளாடும் பெண்களாகவே மேற்சொன்ன மூவரையும் பார்க்க வேண்டும். அவர்கள் இழைத்த குற்றமென்ன? அவர்கள் ஏன் இயல்பிழக்க வேண்டும்?
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT