Published : 15 Apr 2018 12:49 PM
Last Updated : 15 Apr 2018 12:49 PM
த
மிழில் பாரதி காலத்திலிருந்தே வசனக் கவிதை முயற்சிகள் தொடங்கின. அதற்குப் புதுக் கவிதை எனப் பெயரிட்டவர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன். அதற்கான உத்தேசமான இலக்கணங்களும் இந்தக் காலக்கட்டத்தில் முன்மொழியப்பட்டன. இதே காலகட்டத்தில் பெண்களும் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டனர். பூரணி, மீனாட்சி, திரிசடை என அந்தத் தொடர்ச்சி வரிசை இன்றுவரை நீண்டுவருகிறது. இவர்களுள் விசேஷமான கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்.
புதுக் கவிதை தொடங்கிய காலத்தில் அதன் வடிவமைப்பு குறித்துத் தீவிரமான விழிப்புணர்வு இருந்தது. கவிதைக்குள் என்னவெல்லாம் சொல்ல முடியும், அதைச் சொல்வதற்கான மொழி, ஓசை போன்றவை எல்லாம் விவாதிக்கப்பட்டன. அதனால் கவிதைக்குள் ஒரு வெகுளியான தன்மை இல்லாமல் ஆனது. கவிதையை விழிப்புணர்வுடன் எழுதுவதால் அதன் உண்மை ஒளி குன்றிப்போனது.
பேச நிறைய உண்டு
இந்தப் பின்ணியில் அணுகும்போது சுகந்தியின் கவிதைகள் பறவையின் சுதந்திரத்தையும் குழந்தைகளின் வெகுளித்தன்மையையும் ஆதாரமாகக் கொண்டவை. அவர் தன் வீட்டு ஜன்னல் வழியாகக் காணும் காட்சிகளை எல்லாம் கவிதைக்குள் ஆவலுடன் சொல்ல முயன்றிருக்கிறார்.
சுகந்தி, கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஆலந்துறையில் பிறந்தவர். அங்கு உயர்நிலைக் கல்வி பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. கணவருக்கு, செகந்திராபாத்தில் வேலை. பள்ளிக் கல்விகூட முடித்திராத ஒரு சின்னஞ்சிறு கிராமத்துப் பெண், மொழியறியாத ஒரு பிரதேசத்துக்குப் புலம்பெயர்கிறார். புது இடத்தை அணுகுவதில் உள்ள சுவாரசியம், பதற்றம் இரண்டும் இவரது கவிதைகளில் இருக்கின்றன.
மொழியறியாத அந்த ஊரில் அவருக்கு சிநேகிதிகள் கிடைத்ததை, சந்தோஷத்துடன் அவரது கவிதையில் சொல்கிறார். ‘பச்சை மிளகாய் இல்லாத எதிர் வீட்டுக்காரி அவளின் பாஷையுடன் அறிமுகமானாள்’ எனத் தொடங்கும் அந்தக் கவிதையில், சர்க்கரை, காபித் தூள், தக்காளி என ஒவ்வொரு பொருளையும் கேட்டுத் தோழிகள் பெருகுகிறார்கள். ‘பாஷைகளை மீறி பேச நிறைய இருக்கிறது’ என முடிகிறது அந்தக் கவிதை. இதில் பெண்களுக்குள் எனச் சேர்த்து வாசித்துப் பார்த்தால் அவரது உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.
எளிய மொழியின் ஒளி
சுகந்தியின் கவிதைகளின் தனித்துவம், ஒரு மாபெரும் புரட்சியைக்கூட தாழ்ந்த தொனியில் சொல்வது. ஒரு சாதாரண பெண் காய்கறி நறுக்கும்போது பகிரும் விஷயத்தைப் போல் சுகந்தி தன் கவிதைகள் வழியாக பெண்ணின் பிரச்சினைகளைப் பகிர்ந்திருக்கிறார். பெண்களுக்கு இயற்கையாக வரும் மாதவிடாய் காலத்தில் அவள் நடத்தப்படும் விதத்தை, ‘தனியிடம் உருவானது இங்கே, நீ புதிதாய் வயதுக்கு வந்ததற்கு. குறைந்தபட்சம் நீ ஒரு குட்டிப் பிச்சைக்காரி ஆகிவிடுகிறாய்’ என்ற அவரது ஒரு கவிதை, அதனால் ஏற்படும் நிவாரணமில்லாத வயிற்றுவலியையும் கால்குடைச்சலையும் அவல நகைச்சுவையுடன் சொல்கிறது.
கணவர், பாட்டி, தோழிகள் என அவரது கவிதைக்குள் மனிதர்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் அல்லாமல் பிச்சைக்காரி, பெரியம்மா போன்ற சில கவிதை மாந்தர்களும் வருகிறார்கள். நிஜமான மனிதர்களைக் கவிதைக்குள் சுகந்தி அழைத்துவந்திருப்பது வாசகர்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கவிதைக்கும் உண்மை ஒளியை ஏற்றுகிறது. பொதுவாகக் கவிதைகள் என்றவுடன் அந்நியமான கற்பனைகளை வார்த்தைகளாகத் தொடுக்காமல் தன்னையும் தன் சுற்றத்தையும் எளிய மொழியில் சுகந்தி சொல்லியிருக்கிறார். கவிதையை ஒரு குரோட்டன்ஸ் செடியைப் போல் தன் அறைக்குள்ளேயே வளர்த்திருக்கிறார்.
பெண்களின் உலகைச் சொல்லும் ஒரு கவிதையில், அவரது ஊரின் ஆறு எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனக் கேட்கிறார். அவரது பாட்டி ஆற்றங்கரைக்குக் கூட்டிப் போயிருக்கிறார். ஆனால் பெரிய பெண்ணானதும் சுவருக்குள் மட்டும் என்றாகிவிடுகிறது வாழ்க்கை. ஆற்றை வேடிக்கைகூடப் பார்க்க முடிவதில்லை. திருமணம் ஆனவுடன் சிறு சுதந்திரம் கிடைக்கிறது. ஆறு எதுவரை போகிறது எனக் கணவரிடம் கேட்கிறார். அவரும் ஒரு 50 மைல் தள்ளி ஆற்றின் அணையைக் காட்டுகிறார். ஆறு அதுவரை மட்டுமா போகிறது? ‘ஆனாலும் ஆறு போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார். சுகந்தியின் கவிதைகள் பெண் என்ற தன்னியல்பை மீறியும் சில இடங்களில் பாய்ந்திருக்கின்றன. பொதுவாக அவரது கவிதைகளில் காணப்படும் கதைத்தன்மை, அவரது இம்மாதிரியான கவிதைகளில் இல்லை. அவை முழு வீச்சுடனும் திடகாத்திரமான மொழியுடனும் வெளிப்பட்டுள்ளன. சுகந்தியின் இந்த வகைக் கவிதைகள் தம் இருப்பையே கேள்வி கேட்பவை.
கவிதையே விடுதலை
எழுதுவது அவருக்கு மாபெரும் சுதந்திரத்தை அளித்திருக்கிறது என்பதை அவரது கவிதைகள் மூலம் உணர முடிகிறது. அவரது அறையைத் தாண்டி, கவிதையின் வழியாகப் பயணிக்க முடிந்திருக்கிறது. ‘சுதந்திரம் என்பது கலை, கவிதைகளை உருவாக்கும்’ என்கிறது அவரது ஒரு கவிதை.
இருத்தல் குறித்த கேள்விகளை எழுப்பிய அவரது கவிதைகளுக்கு, அதற்கு ஏதுவாக மரணத்தைக் குறித்த ஆவலும் இருந்திருக்கிறது. ‘சுத்தமான மனசுக்குள் சங்கல்பமாகும் சுதந்திரம் நம்மை நம்மிடமிருந்து விடுவிக்கும்’ என்கிற அவரது கவிதைபோல் 2009-ல் ஒரு மனநல விடுதியில் இந்த உலக இருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் சுகந்தி.
ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்
எத்தனை வீர சாகசம் பெண்ணே!
முதல் வரியில் வந்தது
குழந்தைச் சிரிப்பு மனதில்
இரண்டாவதில் தண்ணீர் பிடிச் சண்டைகள்
மூன்றாம் வரியில் குளிரில் விறைத்துச்
செத்த லட்சுமி கிழவி
நான்காவதில் கேஸ் தீர்த்த அலுப்பில்
ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்
ஐந்தாம் வரியில்
ஓசியில் டிவி சினிமாவுக்கு
அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்
ஆறாவதாய் சின்னம்மாவின்
மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்
ஏழாவது வரியில்...
இன்னும் சமையல் ஆகவில்லை
இன்னொரு கடைசி வரியாய்
கவிதையை முடிக்க ஒரு வரி
சொல்லேன் பெண்ணே!
(பயணம் நீளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT