Published : 03 Aug 2014 10:10 AM
Last Updated : 03 Aug 2014 10:10 AM
காலப்போக்கில் நாம் எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் நெருங்கிய உறவில் உள்ள பையன்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து சுற்றுவது இன்னும் அலுக்காத அனுபவமே.
ஒரு நாள் கார் பயணத்தில் என் பெற்றோரும் நானும் எங்களது ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரிகள் எத்தனை பேர் என்று கணக்கிட்டோம். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நெருங்கிய வட்டத்திலயே 30 முதல் 40 பேர் வந்துவிட்டனர். அடுத்த நிலையில் எண்ணிப் பார்த்தால் எண்ணி மாளாதவர்கள் இருந்தனர். எனக்கு நெருங்கிய உறவில் பத்துப் பேர் மட்டும்தான். அடுத்த நிலையில் சித்தி, பெரியப்பா, அத்தை, மாமா மகன்கள், மகள்கள் என்று 100 பேர் வரை வந்தனர். எனது மகளுக்கு நெருங்கிய உறவில் இரண்டு பேர் மட்டுமே. அடுத்த நிலையில் எட்டுப் பேர். இந்த எண்ணிக்கை கூடும். ஆனால், பெருக வாய்ப்பேயில்லை.
நமது நவீன, நகர்ப்புற வாழ்க்கை முறையின் யதார்த்தம் இதுதான். நமது குடும்பங்கள் வேகமாகச் சுருங்கிவருகின்றன. அத்துடன் உறவுகளும். எனது சகோதரர்களின் குழந்தைகள் ஒன்றுகூடச் சென்னையிலோ இந்தியாவிலோ இல்லை. எனது பெற்றோரைப் பொருத்தவரை உறவுக்காரப் பிள்ளைகளுடன் கூடி வாழும் வகையிலேயே அவர்களது குழந்தைப் பருவம் இருந்துள்ளது. என்னைப் பொருத்தவரை உறவுக்காரக் குழந்தைகள் அனைவரும் கோடை விடுமுறையில் கூடுவது வழக்கமாக இருந்தது.
எனது குழந்தைக்கோ இந்த ஆண்டுவரை உறவுக்காரர்களுடனான தோழமை என்பதை அறியவே இயலாத நிலைதான் இருந்தது. அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியும். அவர்களைப் புகைப்படங்களில் பார்த்திருக்கிறாள். அவளுக்கு அவர்களது பெயர்கள் தெரியும். ஸ்கைப் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் ஹாய்கூட சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் டீகோ மற்றும் பெப்பா பிக்கின் சகோதரன் ச்லோவைத் தெரிந்தளவு கூட உறவுக்காரப் பிள்ளைகளைத் தெரியாது என்பதுதான் சோகமானது.
எனது சகோதரியின் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா வரும் வரை இந்த நிலைதான் நீடித்தது. சென்ற முறை அவர்கள் வந்தபோது, எனது மகள் பச்சிளம் குழந்தையாகவே இருந்தாள். அதனால் இந்த முறைதான் அவளது அண்ணன்களுடன் ‘சரியான’ அறிமுகம் கிடைத்தது. குழந்தைகளுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பாட்டி தாத்தாக்களுக்கும் அவர்கள் சேர்வது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையில் எனது மகள் தனது அண்ணன்களைப் பெரிதாக அங்கீகரிக்கவில்லை. எனது கால்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சங்கோஜமாகத்தான் அவர்களைப் பார்த்தாள்.
அவளது அண்ணன்களில் சிறியவன் விடாமுயற்சி செய்து, என் குட்டிப் பெண்ணைப் பிடிவாதமாக நட்பாக்கிக் கொண்டான். அடுத்து அவர்கள் இந்தியாவில் இருந்தவரை என் மகள் அவர்களைவிட்டுப் பிரியவேயில்லை. ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும், “அண்ணா எங்கே?” என்ற கேள்வியுடனேயே எழுந்தாள். “அண்ணனுடன் விளையாடப் போகலாமா?” என்று கேட்பாள். அண்ணனின் மடியில் உட்கார்வது, தலையில் ஏறுவது என அவனைச் சோதித்தாலும், அவன் பொறுமையைக் கைவிடவேயில்லை.
அவளுடைய மூத்த அண்ணனுடனான இணக்கம் அவனது அமைதியான ஆளுமைக்கேற்ப மெதுவாகவே சாத்தியமானது. அவளுடைய 13 வயது அண்ணனிடம் ‘ராக் பேப்பர் சிசர்ஸ்’ விளையாட்டைக் கற்றுக்கொண்டதை நேரில் பார்த்த அனுபவம் அவ்வளவு அலாதியானது.
இதையெல்லாம் பார்த்த பின்னர்தான், எத்தனை நவீன மாற்றங்கள் வந்தாலும் சில விஷயங்கள் மாறாது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. குடும்பங்கள் சிறிதாகலாம், சிதறிப் போகலாம், உறவுக்காரக் குழந்தைகள் சந்திப்பது அரிதான ஒன்றாகக்கூட ஆகிப் போகலாம். ஆனால், இன்னும் உறவுக்காரக் குழந்தைகள் சேர்ந்து திரிவதும் விளையாடுவதும் குழந்தைப் பருவத்தின் மறக்க இயலாத நினைவாகவே இருக்கிறது. பெரியவர்கள் கூடுதலாக முயற்சியெடுக்கும்போது அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் முடியும்.
ஆம், அவளது அண்ணன்மார்கள் இருவரும் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டார்கள்தான். அவர்கள் இனிமேல் சந்தித்துக் கொள்ள இரண்டு வருடங்கள்கூட ஆகலாம். ஆனால், இனிமேல் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன்கள் என்பவர்கள் அந்நியர்கள் அல்ல. இப்போது ஸ்கைப்பில் அவர்களுடன் உரையாடும்போது எனது மகளும் அண்ணன்களுடன் உரையாடுகிறாள்.
ஒன்றிரண்டு தலைமுறைக்கு முன்னர் உறவுக்காரக் குழந்தைகளின் எண்ணிக்கை இருந்த அளவுக்கு இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் வளரும் தொழில்நுட்பம் மற்றும் விடாப்பிடியான பிடிவாதம் இருந்தால் போதும்! இந்தக் குழந்தைகளுக்கு மறக்க முடியாத நினைவுகளை நாம் ஒரு பரிசாக உருவாக்க முடியும்.
©தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT