Last Updated : 26 May, 2018 06:21 PM

 

Published : 26 May 2018 06:21 PM
Last Updated : 26 May 2018 06:21 PM

பக்கத்து வீடு: பெற்றால்தான் பிள்ளையா?

சீ

னாவைச் சேர்ந்த லு லிஜிங், தன்னலமற்ற சேவையால் உயர்ந்துநிற்கிறார். உடல்நலக் குறைபாடு அல்லது பிறவிக் குறைபாடு காரணமாக ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் குழந்தைகளைப் பராமரிக்கும் சேவையை கடந்த 12 ஆண்டுகளாக செய்துவருகிறார். பீஜிங்கில் வசிக்கும் லு லிஜிங் கடந்த 2006-ல் ‘Dew Drops Little Flower’ என்ற குழந்தைகளுக்கான காப்பகத்தை உருவாக்கினார். ஆண்டுதோறும் குறைந்தது 150 முதல் 200 குழந்தைகள்வரை இந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டதன் விளைவாக 12 ஆண்டுகளில் 2,247 குழந்தைகளைச் சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி இருக்கிறார் லிஜிங்.

பெரிய லட்சியம் எதுவும் இல்லாமல் மனிதநேயத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயணம் இது என்று சாதாரணமாகக் கூறுகிறார் அவர். தொடக்கக் காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்ட லிஜிங், பின்னர் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் அவர்களது நலனுக்காக ஏதாவது செய்தே தீர வேண்டும் எனவும் நினைத்தார். அதன் விளைவாக உதயமானதுதான் இந்தத் தொண்டு நிறுவனம். நோயின் காரணமாக அவதிப்படும் குழந்தைகளைப் பாதுகாப்பதே இவருடைய முக்கிய குறிக்கோள்.

கலங்கடித்த சிறுவன்

இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளைக் காப்பாற்றியிருந்தாலும் ஒரு சிறுவன் தனது சிந்தனையைக் கலங்கடித்துவிட்டதாக லிஜிங் சொல்கிறார். கேம் என்ற அந்தச் சிறுவனுக்கு குடல் தொடர்பான நோய் இருந்தது. ஆனால், அத்தனை துயரத்திலும் அவன் கண்களில் இருந்த அமைதியும் நம்பிக்கையும் லிஜிங்கை அதிசயிக்கவைத்தன. அதிலும் அந்தச் சிறுவனின் பரிசுத்தமான கண்களைப் பார்த்தபோது, ‘எனக்கு உதவுங்கள்’ எனக் கெஞ்சுவது போலவே இருக்கும் என்கிறார் லிஜிங்.

அதற்காகவே மரணத்தின் பிடியில் இருந்து அவனைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடினார். அவரது முயற்சி வீண் போகவில்லை. இன்று அந்தச் சிறுவன் மூன்றரை வயதைக் கடந்து, அமெரிக்காவில் தன் வளர்ப்பு பெற்றோருடன் வாழ்ந்துவருகிறான்.

27chbri_dew drops 1

இப்படிப் பல குழந்தைகளைக் காப்பாற்றி உலகம் முழுவதும் தத்துக்கொடுத்துள்ள லிஜிங், இப்போதும் சுமார் 75 குழந்தைகளை தனது காப்பகத்தில் பராமரித்துவருகிறார். தன்னார்வலர்களின் மூலம் நிதி திரட்டி நிலைமையைச் சமாளித்துவருகிறார். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காகவே 12 ஆண்டுகளைக் கழித்துவிட்ட லிஜிங், தனக்கென ஒரு வாழ்க்கையை இதுவரை அமைத்துக்கொள்ளவில்லை.

பெற்றால்தான் பிள்ளையா எனக் கேட்கும் லிஜிங்கிற்கு உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கானோர் உதவிக்கரம் நீட்டிவருகிறார்கள்.

காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் குறித்து அவரது அமைப்பின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும், உலகெங்கும் இருந்து உதவிகளைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையின் குண நலன்கள், நோயின் தன்மை ஆகியவை விரிவாகத் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் உலகெங்கும் இருந்து இணையம் மூலமாக நன்கொடைகளும் குவிகின்றன. எவ்வளவு பணம் குவிந்தாலும், உயிருக்குப் போராடும் குழந்தைகளின் மனதில் அன்னையின் நேசத்தை உருவாக்கப் பாடுபடும் லிஜிங்கின் தன்னலமற்ற தாயன்பு விலைமதிக்க முடியாதது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x