Published : 26 May 2018 06:20 PM
Last Updated : 26 May 2018 06:20 PM

சாகசம்: இது பெண்களின் கடல்வலம்

டலை அன்னையாகச் சித்தரித்துப் போற்றினாலும் நிஜத்தில் பெண்கள் இருப்பது என்னவோ கரைகளில்தான். கடல் ஆணுக்குரியதாகவும் கரை பெண்ணுக்குரியதாகவும் கற்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கற்பிதங்களை நவீனப் பெண்கள் உடைத்துவரும் நிலையில் இந்தியக் கப்பல் படையைச் சேர்ந்த ஆறு பெண்கள், வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளனர்.

உலகளாவிய பயணம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி கோவா மாநிலத்தில் இந்தியக் கப்பல் படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ்வி தாரிணி படகில் லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி. சுவாதி, லெப்டினென்ட்ஸ் எஸ். விஜயா தேவி, பி. ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் அடங்கிய மகளிர் குழுவினர் உலகளாவிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்கள்.

இந்தியக் கப்பல் படை வரலாற்றில் மகளிர் குழுவினர் தனியாக உலகளாவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது இதுவே முதன்முறை. இதற்காக ஒராண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவாவில் தொடங்கிய பயணம் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அண்டார்ட்டிக் பெருங்கடல் ஆகிய மூன்று பிரம்மாண்ட கடல்களையும் நான்கு கண்டங்களையும் கடந்துள்ளனர். சுமார் 254 நாட்களுக்கு நீண்ட இந்தச் சாதனை பயணத்தில் மொத்தம் 21, 600 நாடிக்கல் மைல் (சுமார் 40,000 கிலோ மீட்டர்) பயணித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபால்க்லேண்டு தீவு, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

நான்கு நாடுகளுக்கு மட்டுமே செல்வதாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்க நாட்டின் கேப்டவுன் நகரிலிருந்து கோவா திரும்புவதற்கு முன்பு சுமார் இரண்டாயிரம் மைல் தூரத்தில் தாரிணி படகின் ஸ்டியரிங் கியரில் பழுது ஏற்பட்டது. இந்தப் பழுதைச் சரிசெய்ய மொரிஷியஸ் நாட்டுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பயண தூரத்தின் அளவு நீடித்ததுடன் திட்டமிட்ட தேதியில் நாடு திரும்ப முடியாமல் போனது. எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கோவாவுக்குத் திரும்பினர்.

படகை மூழ்கடிக்க வந்த அலை

கடுமையான குளிர், புயல் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களுக்கிடையே இந்தக் குழுவினர் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தனர். பயணத்தின்போது அவ்வப்போது செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் வழிகாட்டியான லெப்டினென்ட் கமாண்டர் சுவாதி, பசிபிக் பெருங்கடலில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை புயலைச் சந்திக்க வேண்டியிருந்ததாகப் பதிவுசெய்திருந்தார். அப்போது வெப்பநிலைய மைனஸ் ஐந்து டிகிரிக்கும் கீழே சென்றுவிட்டதாம்.

கை, கால்கள் உறைந்த நிலையில் படகைச் செலுத்துவது அவருக்குச் சவாலாக இருந்துள்ளது. புயலின்போது படகையே மூழ்கடிக்கும் அளவுக்குப் பத்து மீட்டர் உயரத்துக்குக் கடல் அலைகள் மேலெழுந்துள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயலை எதிர்கொண்ட தாரிணி குழுவினர் படகின் கட்டுப்பாட்டை இழக்காமல் இருப்பதற்காக ஒருவர் பின் ஒருவர் உட்கார்ந்துகொண்டு படகைச் செலுத்தினார்களாம்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்தநாள் என அனைத்தையும் கடல் நடுவே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதேபோல் பசிபிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது புள்ளிச் சுறா ஒன்று இவர்கள் படகு அருகே வந்ததை ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார்கள்.

கடலையே பார்க்காதவர்கள்

கோவாவில் தரையிறங்கிய பிறகு தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி, “இந்த நீண்ட பயணம் என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழுவில் உள்ள இரண்டு பேரைத் தவிர நானும் மற்ற மூவரும் மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடலைப் பார்ப்பதே அரிதாக இருந்த எங்களுக்கு இந்த சாகசப் பயணம் வாழ்நாளில் மறக்க முடியாதது.

மற்றவர்கள் நம் திறமையைச் சோதிக்கும் போதுதான் நாம் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பயணத்தின்போது கற்றுக்கொண்டேன். குழுவாக இணைந்து செயல்படுவதில் உள்ள சவால்கள், ஒற்றுமையின் முக்கியத்துவம் என அனைத்தையும் புரிந்துகொண்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

கடுமையான புயலின்போதும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைக் கச்சிதமாக முடித்துள்ளனர். இந்த 254 நாட்கள் பயணத்தில் அனைவருக்கும் சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கமாண்டர் பிரதிபா ஜம்வால், “எங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடு வந்தால்கூட, அதை லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி பொறுமையாகக் கேட்டுத் தீர்த்துவைப்பார்.

ஒவ்வொருவருக்கும் சமமான பணிகள் கொடுக்கப்படும். படகைச் செலுத்துவது, வானிலையைக் கண்காணிப்பது, புயலை எதிர்கொண்டு துரிதமாகச் செயல்படுவது, கழிப்பறையில் உள்ள கழிவை வெளியேற்றுவது உட்பட அனைத்து வேலைகளையும் நாங்கள் அனைவரும் செய்திருக்கிறோம்” என்கிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x