Last Updated : 06 May, 2018 11:23 AM

 

Published : 06 May 2018 11:23 AM
Last Updated : 06 May 2018 11:23 AM

பெண் சக்தி: மனதில் வாழும் ராஜகுமாரி

 

சு

தந்திர இந்தியாவில், நேருவின் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் இடம்பெற்றவர்; நாடு விடுதலைப் பெற்றபின் முதல் பெண் அமைச்சர்; முதல் சுகதாரத் துறை அமைச்சர் என்று பல ‘முதல்’களுக்கு ராஜகுமாரி அம்ரித் கௌர் சொந்தக்காரர். அவரை இந்திய வரலாற்றிலிருந்து அவ்வளவு எளிதில் அகற்றிவிட முடியாது. ஏனென்றால், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் எழுச்சியிலும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

06CHMMH_AMRITKAUR2 அமரித் கௌர்

கபூர்தலாவின் சீக்கிய மகாராஜாவின் மகனான ஹர்னம் சிங்கின் ஒரே மகள் அம்ரித் கௌர். பகட்டு ராஜ வாழ்க்கை சிறு வயதிலேயே அவருக்குக் கிடைத்தது. இங்கிலாந்தில் படித்தார். சொல்லப்போனால் அவரது பதின்பருவ வாழ்க்கை முழுவதும் இங்கிலாந்தில்தான் கழிந்தது. மேட்டுக்குடி வாழ்க்கையின் அனைத்து சௌகரியங்களும் அவருக்கு அங்கே கிடைத்தன. அவரிடம் இயற்கையாகவே தலைமைப் பண்பு மிகுந்திருந்தது.

ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். பள்ளி நாட்களில் சிறந்த பியானோ இசைக் கலைஞராகவும் இருந்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தபின், 1918-ல் இந்தியா திரும்பினார். அப்போது ரௌலத் சட்டத்தால் பஞ்சாப் முழுவதும் பதற்றம் நிலவியது. அமிர்தசரசில் மக்களுக்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்து பெரும் கலவரமாக உருமாறியது. 1919-ல் ஆங்கிலேயர்கள் அரங்கேற்றிய ஈவிரக்கமற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையும் நாட்டின் ஆன்மாவையே உலுக்கியது.

அரண்மனையிலிருந்து பொது வாழ்வுக்கு

இவையெல்லாம் சேர்ந்து சம்பிரதாயங்கள் மிகுந்த அரண்மனை வாழ்க்கை அர்த்தமற்றது என்னும் புரிதலை அம்ரித் கௌரிடம் ஏற்படுத்தின. மக்களின் துயர் மிகுந்த அடிமை வாழ்வு அவரைப் பெரிதும் பாதித்தது. அடிமைத்தளையிலிருந்து அவர்களை விடுவிப்பது குறித்தும் அவர்களது சுயகௌரவத்தை மீட்டெடுப்பது குறித்தும் யோசித்தார். தன் தந்தையின் நெருங்கிய நண்பரும் இந்திய தேசிய காங்கிரஸின் முக்கியத் தலைவருமான கோகலேவைச் சந்தித்தார்.

நாட்டின் மீதும் மக்கள் மீதும் கோகலே கொண்டிருந்த அர்ப்பணிப்பு உணர்வு அம்ரித் கௌரையும் தொற்றிக்கொண்டது. காந்திக்குக் கடிதம் எழுதியவர் பிறகு அவரை நேரிலும் சந்தித்தார். ஆனால், பெற்றோரின் விருப்பத்தை முதலில் நிறைவேற்றுமாறு அம்ரித்திடம் காந்தி கூறினார். அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகளுக்கு காந்தியின் அந்த அறிவுரையை அம்ரித் கௌர் மீறவேயில்லை. பெற்றோருடன் இருந்தபடியே தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

1926-ல் பெண்களின் உரிமைக்காக அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்குக் கிடைத்த ஆதரவை பால்ய விவாக முறை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு போன்ற சமூக மாற்றங்களுக்கு அவர் மடை மாற்றினார். அவரது தீவிர பிரச்சாரத்தால் பெண்களின் திருமண வயதை 14-லிருந்து 18-க்கு அரசு உயர்த்தியது.

06CHMMH_AMRITKAUR3rightஅரசியல் பங்களிப்பு

தன் தந்தை 1930-ல் மறைந்தவுடன் அரண் மனையை விட்டு வெளியேறி விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். நாட்டையே புரட்டிப்போட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். தண்டி யாத்திரையிலும் கலந்துகொண்டார். 1936-ல் மும்பைக்கு அருகில் உள்ள காந்தியின் சேவா கிராமம் ஆசிரமத்தில் குடியேறினார்.

ஆசிரமத்தில் அம்ரித் கௌர், காந்தியின் காரியதரிசி ஆனார். 1947 ஆகஸ்ட் 16 அன்று நேருவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்கும்வரை அந்தப் பதவியில்தான் அவர் நீடித்தார். விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியுடன் மூன்று ஆண்டுகள் சிறையிலும் அவர் இருந்துள்ளார்.

நேருவின் வேண்டுகோளை ஏற்று அமைச்சராக அவருக்கு விருப்பமில்லை. காந்திஜியின் வற்புறுத்தலால்தான் அவர் அதை ஏற்றார். “ஏன் எப்போதும் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்” என்று காந்தியிடம் அப்போது கேட்டுள்ளார். அம்ரித் கௌர் அமைச்சராகப் பதவியேற்ற மறு ஆண்டு காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் நேருவின் அரசுக்கு உறுதியான தூணாக அம்ரித் கௌர் இருந்துள்ளார்.

1950-களில் ஆசியாவின் கடும் ஆட்கொல்லி நோயாக மலேரியா இருந்தது. அப்போது அது ஆண்டுக்கு பத்து லட்சம் பேரை இந்தியாவில் காவு வாங்கியது. அம்ரித் கௌர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மலேரியாவைக் கிட்டத்தட்ட ஒழித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது தீவிர முயற்சியால் 1955-ல் மலேரியாவால் தாக்கப்பட்ட சுமார் நான்கு லட்சம் பேர் சாவின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டனர்.
 

06CHMMH_AMRITKAUR5சுகாதார சேவை

இந்தியக் குழந்தைகள் நல வாரியத்தைத் தோற்றுவித்து, அதன் முதன் தலைவராகவும் அம்ரித் கௌர் இருந்துள்ளார். இந்திய தொழுநோய் சங்கத்துக்கும் இந்திய காசநோய் சங்கத்துக்கும் முதல் தலைவராக இருந்ததுடன் செஞ்சிலுவை சங்கத்தின் துணைத்தலைவராகவும் அம்ரித் கௌர் இருந்துள்ளார். இந்தியாவின் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவைக்கு முதன்மை ஆணையராகவும் இருந்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய குழுவை சுமார் நான்கு ஆண்டுகள் வழிநடத்தியவர், 1950-ல் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவராகவும் இருந்துள்ளார். 1956-ல் அமெரிக்கா சென்றபோது ராஜகுமாரி அம்ரித் கௌருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கியது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம். அதே ஆண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (AIIMS) தில்லியில் தொடங்கிவைத்தார். 1957 ஏப்ரல் 16-ம் தேதியோடு தனது அமைச்சர் பணியை முடித்துக்கொண்டார். AIIMS-ல் பணிபுரியும் மருத்துவர்களும் செவிலியர்களும் ஓய்வெடுப்பதற்கு சிம்லாவில் இருந்த தனது பூர்வீக இல்லத்தை நன்கொடையாக வழங்கினார்.

அம்ரித் கௌர் ஒருபோதும் தன் வாழ்க்கையை ராஜவாழ்க்கையின் வசதிகளுக்குள் சுருக்கிக்கொள்ளவில்லை. வறியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆற்றிய சேவைகளின் மூலம் தன் வாழ்வை விரிவாக்கிக்கொண்டே இருந்தார்.

முடியாட்சி முறை அழிந்த பின், ராஜகுமாரிகளின் வாழ்வு பெரும்பாலும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியது. ஆனால், கபூர்தலாவின் ராஜகுமாரி அம்ரித் கௌரின் வாழ்க்கை இதற்கு விதிவிலக்கு. 1964 பிப்ரவரி ஆறாம் தேதி 75 வயதில் மறைந்தவருடைய பெயரும் புகழும் ‘ராஜகுமாரி’ என்ற அடைமொழியும் வரலாற்றில் நிலைத்து நிற்பதே அதற்குச் சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x