Last Updated : 20 May, 2018 09:52 AM

 

Published : 20 May 2018 09:52 AM
Last Updated : 20 May 2018 09:52 AM

பெண் திரை: சாவித்ரியின் கீர்த்தி!

காவியங்களுக்கென்று உலகெங்கும் பொதுவாக ஒர் இயல்பு உண்டு. அதன் மையக் கதாபாத்திரம் மற்றவர்களால் எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிட்டு இறுதியில் மற்றவர்களால் விழ முடியாத பள்ளத்தில் விழுந்துவிடும். 18, 19-ம் நூற்றாண்டுகளில் ரஷ்யாவிலும் பிரான்ஸிலும் ஏராளமான காவிய நாவல்கள் எழுதப்பட்டன. அதன் நாயகியர் பலரும் தேவதைகள். கற்பனை வானத்தில் உயரப் பறந்த அந்தத் தேவதைகள் அந்தக் காவியங்களின் முடிவில் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்வார்கள்.

அல்லது, தங்களது துயர முடிவுக்குத் தாங்களே காரணமாவார்கள். அதற்குச் சான்றாக லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’வின் நாயகி அன்னாவை நாம் நினைவுகூரலாம். இந்தக் காவிய நாவல்களின், நாடகங்களின் தாக்கத்தால் அந்தக் காலத்தில் அந்த நாடுகளின் பெண்களில் கணிசமானோர் காதலில் விழுந்தது மட்டுமல்லாமல் தங்கள் காதலைக் காவியமாக்கிக்கொள்ளத் தற்கொலையும் செய்துகொண்டார்கள்.

நடிகையே காவியமாக

ஆனால், நடிகை சாவித்ரி தன் வாழ்க்கையைக் காவியமாக்கிக்கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. அவரது வாழ்க்கையை அவர் மிகவும் பிடிவாதமாக வாழ்ந்தார். தான் செய்யும் சரி, தவறு இரண்டுக்கும் தானே பொறுப்பாக வேண்டும் எனும் பிடிவாதம். இதனால்தான் நம் சிந்தனையில், கற்பனையில் சாவித்ரி ஒரு காவியமாக ஏற்கெனவே உருவாகிவிட்டார். நம் மனத்தில் உள்ள ‘சாவித்ரி காவிய’த்தின் தொடர்ச்சிதான் ‘நடிகையர் திலகம்’ படம்.

கீர்த்தி சுரேஷின் நடிப்பில் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்தபோது, மனத்தில் சாவித்ரியின் வாழ்க்கை மட்டும் ஓடவில்லை. சாவித்ரியாக நடித்தவரின் வாழ்க்கையைப் பற்றிய அச்சமும் ஓட ஆரம்பித்துவிட்டது. சாவித்ரியை உச்சத்தில் தூக்கிவைத்து, அதன் பிறகு அவரைக் காவுவாங்கிய அதே தொழிலில்தான் கீர்த்தியும் இருக்கிறார். சுதாரிப்பாக இல்லையென்றால் எல்லா நடிகைகளையும் சாவித்ரியின் முடிவை நோக்கித் தள்ளக் காத்திருப்பது சினிமா உலகம். அப்படிப்பட்ட சினிமா உலகத்தில் சாவித்ரியின் ஆன்மாவைத் தன் நடிப்பில் சரியாகப் பிடித்து, திரையில் நமக்கு சாவித்ரியைக் காண்பித்த கீர்த்தி சுரேஷை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒற்றுமையும் வேற்றுமையும்

படத்தில் ஒரு காட்சியில் தனது புகழ்பெற்ற தெலுங்குப் படத்தைத் தமிழில் மறு உருவாக்கம் செய்வதற்கான உரிமையைத் தான் வாங்கியிருப்பதாக சாவித்ரி, ஜெமினியிடம் சொல்லும் காட்சி வரும். அப்போது, ஜெமினி கணேசன் ஆப்த வாக்கியம்போல் ஒன்றைச் சொல்வார், “கிளாஸிக்ஸை டச் செய்யக் கூடாது, அம்மாடி” என்று. சாவித்ரியும் ஒரு ‘கிளாஸிக்’தான். அப்படிப்பட்ட கிளாஸிக்கைத் தொட்டுவிட்ட அச்சம் கீர்த்தி சுரேஷுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதனால்தான், “சாவித்ரி வேடத்தில் நடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவர் குறைந்த காலமே வாழ்ந்தாலும் அவரது வாழ்க்கையில் பல முக்கிய விஷயங்கள் நடந்துள்ளன. பொழுதுபோக்குத் துறை நம்மைத் தனிமைப்படுத்திவிடும் என்று தெரிந்தது. தனது வாழ்க்கையிலும் தொழிலிலும் சாவித்ரிம்மா செய்த தவறுகளை நான் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன்” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி கூறிஇருக்கிறார்.

சாவித்ரிக்கும் கீர்த்திக்கும் உருவ ஒற்றுமை எவ்வளவோ இருக்கின்றன என்று பலரும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை இருப்பதுபோல் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. என்றாலும், சாவித்ரியாய் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் ஒரு சில நிமிடங்களில் உருவ ஒற்றுமை, வேற்றுமை எல்லாம் மறைந்துபோய்த் திரையில் சாவித்ரி நடமாட ஆரம்பித்துவிடுகிறார்.

மகா நடிகை

‘மிஸ்ஸியம்மா’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘பாசமலர்’ போன்ற திரைப்படங்களின் மூலமும் பத்திரிகைச் செய்திகளின் மூலமும் பிறகு தொன்மமாகவும்தான் நமக்கு சாவித்ரியின் வாழ்க்கையைப் பற்றித் தெரியும். இவற்றால் தன் இதயத்துக்கும் செயலுக்கும் இடையில் இடைவெளி வைத்துக்கொள்ளாதவர் என்ற பிம்பம் நம்மிடையே சாவித்ரியைப் பற்றி உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் கதையமைப்பும் கீர்த்தி சுரேஷின் நடிப்பும் அதையே நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

வெகுளித்தனமாகவும் மனத்தில் பட்டதைப் பேசிவிடுபவராகவும், அதனால் நல்ல பெண் இல்லை என்று குடும்பத்தினராலும் சமூகத்தாலும் கருதப்படும் ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கும் சாவித்ரிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அந்தப் பாத்திரத்தின் வெகுளித்தனம் பின்னாட்களில் லைலா, ஜெனிலியா போன்ற ‘லூசுப்பெண்’ கதாபாத்திரங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது. சாவித்ரியின் வெகுளித்தனமும் வெடுக்குத்தனமும் கீர்த்தி சுரேஷிடம் எவ்வித முயற்சியுமில்லாமல் இயல்பாக வெளிப்படுகின்றன.

ஒரு மிமிக்ரி கலைஞர் இதைவிட கச்சிதமாக ஒரு நடிகரைப் போலி செய்துகாட்டிவிட முடியும். அது கலை அல்ல. பாத்திரத்தின் ஆன்மா நடிகைக்குள் இறங்கிவிட்டால் தத்ரூபமாகச் செய்திருக்கிறாரா என்று பார்ப்பதை விட்டுவிட்டு, உறைந்துபோய்தான் நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அதுதான் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாய்த் திரையில் தோன்றும் காட்சிகளில் நமக்கும் நிகழ்கிறது. சாவித்ரியைத் தன் ஆன்மாவில் உணராத ஒருவரால் இதைச் செய்யவே முடியாது.

 

சாவித்ரிக்கு அவர் பிறந்த மாநிலம் அருமையான அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது. சாவித்ரி நிறைய சம்பாதித்ததுபோலவே நிறைய கொடுத்திருக்கிறார் என்று சொல்வார்கள். அவர் இறந்த பின்னும்கூட கொடுப்பதை நிறுத்தவில்லை. இதோ, கீர்த்தி சுரேஷ் எனும் ‘மகாநடிகை’யைக் கொடுத்திருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x