Published : 17 Aug 2014 12:42 PM
Last Updated : 17 Aug 2014 12:42 PM
இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுடன் மொத்தம் எட்டு முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். மக்களவையில் இவர்தான் மூத்த பெண் உறுப்பினர். முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியவர். முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு அடுத்தபடியாக 16-வது லோக்சபாவில் சபாநாயகர் பதவி வகிக்கும் சுமித்ரா மகாஜனின் (71) பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பது, இசை, நாடகம் மற்றும் சினிமா.
பதற்றப்படாமலும் பொறுமையுடனும் மிக்க மன உறுதியோடும் அவை நடவடிக்கைகளை இவர் நடத்திச் செல்கிறார். முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழையும் எம்.பி.க்களுக்கு ‘பீரோ ஆஃப் பார்லிமென்டரி ஸ்டடீஸ் அண்ட் ட்ரெய்னிங்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் இரண்டு பயிற்சி முகாம்களை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அவையில் உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளுடன் வேறு பல அத்தியாவசியமான விஷயங்களையும் புதிய உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்.
நான் பிறந்தது மகாராஷ்டிரா ரத்னகிரி மாவட்டத்தில். எட்டு வயதில் என் அம்மா இறந்துவிட்டார். நான் மாமாவிடம் வளர்ந்து, படிப்பை முடித்தேன். என் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. கணவர் ஜயந்த் மஹாஜன் 2001-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எங்களுக்கு இரு மகன்கள். இப்போது நான் மூன்று பேரக் குழந்தைகளின் பாட்டி.
உங்களின் அரசியல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
அரசியலில் நுழையும்போது எனக்கு 39 வயது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரின் துணை மேயர் பதவியில் பணியாற்றினேன். பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் 1999 ல் இருந்து 2004-ம் ஆண்டுவரை இணை அமைச்சராகப் பல்வேறு இலாகா பொறுப்புகளையும் ஏற்றேன். அது சிறந்த அனுபவமாக அமைந்தது.
அரசியல் வாழ்க்கையில் உங்களுக்கு அறிவுரை வழங்கியவர் யார்?
மிகுந்த அனுபவமும் நிறைந்த நம்பிக்கையும் கொண்ட அறிவுரையாளர் எனது மரியாதைக்குரிய குஷபாவ் தாக்கரே. முன்பெல்லாம் இப்போது காணப்படுவதைப்போல் தேர்தல்களில் போட்டியிட கட்சி டிக்கெட்டுகளுக்காக, உறுப்பினர்கள் ஓடி ஓடி துரத்தித் துரத்தித் தேடி அலைந்தது கிடையாது. அப்போதெல்லாம் கட்சி உறுப்பினர்களைக் காட்டிலும், கட்சி என்பதுதான் எங்களுக்கெல்லாம் அதிமுக்கியமான, முதல் முன்னுரிமை பெறும் அம்சமாக இருந்துவந்தது.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் நிலை என்ன?
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அணுகினால், கண்டிப்பாக இந்தப் பிரச்சினை பற்றி ஆலோசிக்கத் தயார்.
உங்களால் மறக்க முடியாத சம்பவம் என்ன?
அது 1989-ம் ஆண்டு. எனது கன்னிச் சொற்பொழிவை நிகழ்த்த, நாடாளுமன்றத்தின் நூலகத்திற்குச் சென்று, குறிப்புகளைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். உருப்படியான ஒரு உரையாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் கவனமாக அதைத் தயாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்தில் நின்றுகொண்டு அதனைக் கவனித்துக்கொண்டிருந்தார் லால் கிருஷ்ண அத்வானி. பின்னர் மக்களவையில் அந்த உரையைக் கேட்ட அவர், சொற்பொழிவு பிரமாதம் என்று கூறிப் பாராட்டியது மறக்க முடியாத ஒரு தருணம்.
இன்றைய சமூக வாழ்க்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
சமூகரீதியிலான உறவுமுறைகள் தற்போது இருந்த இடமே தெரியாத அளவுக்குச் சீர்கெட்டுவிட்டன. அந்தக் காலத்தில் செழிப்புடன் வளர்ச்சி கண்ட கூட்டுக் குடும்பம் எனும் பொன்னான கருத்தும், குடும்ப நல்லுறவும் சிறப்பான ஒற்றுமை உணர்வும் பெருமளவுக்கு சிதைந்து சீர்கெட்டுவிட்டன. சமுதாயத்தில் கூட்டுக் குடும்பம் என்ற கருத்தே இல்லாமல் போய்விட்டது. இப்போது அனைவரும் தனித்தனியே பிரிந்துபோய்விட்டபடியால், ஒற்றுமை என்ற சொல்லுக்கே விளக்கம் காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கடவுள் பக்தி உண்டா?
இந்த உலகில் நம் அனைவரையும் மீறிய ஒரு அதீத சக்திதான் கடவுள். அந்தக் கடவுளிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT