Published : 04 Aug 2024 07:07 AM
Last Updated : 04 Aug 2024 07:07 AM
மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘இந்தியன்-2’ திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டது. இந்தப் படத்தின் தோல்விக்கு அதில் ஒரு துணைக் கதாபாத்திரமாக நடிகை பிரியா பவானிசங்கர் நடித்திருந்ததுதான் காரணம் என்று மீம்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பலர் பகிர்கின்றனர்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரியா பவானிசங்கர் நடித்த படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. இதை வைத்து அவர் ‘ராசி’ இல்லாத நடிகை என்பதுதான் ‘இந்தியன் 2’ படத்தின் தோல்விக்குக் காரணம் என்னும் அற்பமான கருத்தை இவர்கள் பரப்புகின்றனர். அதேநேரம் இதுபோன்ற மீம்களுக்கு சிலர் ஆற்றிவரும் எதிர்வினை சற்று ஆறுதல் அளிக்கிறது. மோசமான உள்ளடக்கத்தின் காரணமாகவே படங்கள் தோல்வி அடைகின்றன என்றும் அவற்றில் நடித்த நடிகையை அதற்குப் பொறுப்பாக்குவது தவறு என்றும் பலர் கூறுவதையும் காண முடிகிறது.
நடிகைகளும் ராசியும்
சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. அதேபோல் திரைப்படத் துறையில் நிலவும் பிற்போக்குத்தனங்களால் குறிப்பாக ராசி குறித்த கற்பிதங்களால் திறமை, உழைப்பு என வெற்றிக்குத் தேவையான அனைத்தும் இருந்தும் நல்ல வாய்ப்புகளைப் பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் நடிகைகள் பலர்.
‘பெரிய ஹீரோ’ என்று அறியப்படும் முதல் நிலை ஆண் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று அந்தப் படங்களும்கூட வெற்றிபெற்றால் மட்டுமே ஒரு நடிகை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். திரைப்படத் துறையில் நடிகைகளுக்கான பல தடைகளைத் தகர்த்து 20 வருடங்களாக முன்னணி நடிகைகளாக நீடிக்கும் த்ரிஷா, நயன்தாரா போன்றோர் தொடக்கக் காலத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்ததால்தான் நிலைக்க முடிந்தது.
ஆனால், ஒரு படம் வெற்றிபெறுவது நடிகை யின் கையில் இல்லை. அவர் அந்தப் படத்தில் தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் எல்லைகளுக்குள்தான் தனது பங்களிப்பை ஆற்ற முடியும். ஆனாலும் படங்கள் தோல்வி அடைந்தால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர் அதில் நாயகியாக நடித்த பெண்தான். அவர் ‘ராசி’ இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஓரம் கட்டப்படுவார்.
தவிர்க்க முடியாத இடம்
சில நடிகைகள் ‘பெரிய ஹீரோ’ படங்களில் முதன்மை நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெறாவிட்டாலும் தமது திறமையாலும் தொழில் சார்ந்த அறிவினாலும் நிலைத்து நின்றுவிடுவார்கள். நல்ல கதை, கவனிக்கத்தக்க கதாபாத்திரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி சிறிய, நடுத்தர பட்ஜெட் படங்களிலும் இரண்டாம் நிலை நாயகர்களுடனும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமது திறமையை சரியாக வெளிப்படுத்துவார்கள். இதன் மூலம் திரைத்துறையிலும் ரசிகர்கள் மனங்களிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுவார்கள். அண்மைக் காலங்களில் அப்படியோர் இடத்தைப் பெற்றிருப்பவர்தான் பிரியா பவானிசங்கர்.
கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த ‘மேயாத மான்’ திரைப்படத்தின் கதாநாயகியாகத் திரைத் துறையில் கால்பதித்தார் பிரியா பவானிசங்கர். அந்தப் படம் வெற்றிபெற்றது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நட்சத்திர நடிகர் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நாயகனை ஒருதலை யாகக் காதலிக்கும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் வெற்றிபெற்றது.
தொடர்ந்து ‘மான்ஸ்டர்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘ஹாஸ்டல்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘யானை’ போன்ற படங்கள் பிரியா பவானிசங்கருக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்தன. ‘ரத்னம்’, ‘பத்து தல’ போன்ற தோல்வி அடைந்த படங்களில்கூட ப்ரியா பவானிசங்கர் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருந்தார்.
கண்ணியமான தேர்வுகள்
பாலியல் உணர்வைத் தூண்டும் மலினமான கவர்ச்சியை அவர் வெளிப்படுத்தியதே இல்லை. பெண்களை இழிவுபடுத்தும் கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. தமிழ் சினிமாவால் உருவாக்கப் பட்ட - நிஜ உலகத்தில் இருக்கவே முடியாத ‘லூசுப் பெண்’ணாக ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. வெற்றிப் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பிடிப்பதை முதன்மைப்படுத்தாமல் தனது சுயமரியாதையையும் பெண்களின் கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்காத ப்ரியா பவானிசங்கரின் கதாபாத்திரத் தேர்வு சார்ந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது.
அதேபோல் திரைக்கு வெளியிலும் மதிப்புக் குரிய செயல்களைச் செய்துள்ளார். திரைத் துறையில் மிக எளிமையானவராகவும் பழகுவதற் கும் பணியாற்றுவதற்கும் இனியவராகவும் அறியப்படுகிறார். திரைத் துறையில் நிலவும் பிற்போக்குத்தனங்கள் குறித்து நேர்காணல்களில் வெளிப்படையாகப் பேசுகிறார். சமூக ஊடகங்களில் ட்ரோல்களை துணிச்சலுடன் கையாள்கிறார். இன்ஸ்டகிராமில் ஒருவர் அவரது மார்பின் அளவைக் கேட்டபோது, அதை வெளிப்படையாகக் குறிப்பிட்டதோடு மட்டு மல்லாமல் “நான் எனது மார்பகங்களை வேறோரு கிரகத்திலிருந்து பெறவில்லை சகோதரா. உங்கள் வாழ்வில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கின்றன” என்று கூறியிருந்தார். தன்னைப் பாலியல்ரீதியாக இழிவுபடுத்த முயன்றவருக்குத் தக்க பதிலடி கொடுத்ததோடு பெண்ணின் மார்பகமும் கை, கால் போன்ற உடல் உறுப்புதான் என்று பெண்ணுடல் மீதான கற்பிதங்களை இயல்பாகத் தகர்த்திருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தபோது சமூக ஊடகத்தில் பிழையற்ற தமிழில் அவர் எழுதிய அஞ்சலிப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது.
மாற்றத்துக்கான தொலைவு
தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது. பெண்கள், பால்புதுமையரை இழிவுபடுத்தும் சித்தரிப்புகள், உடல் எடை, நிறம் சார்ந்த உருவக் கேலி ஆகிய வற்றைக் கண்டிக்கும் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டனர். சமூகத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களைத் தமிழ் சினிமாவும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் நடிகைகளை அவர்களின் நடிப்புக்காக அல்லாமல் ‘ராசி’ போன்ற அறிவுக்குப் புறம்பான விஷயங்களை வைத்து மட்டம்தட்ட நினைப்போர் சமூக மாற்றத்தின் பயணத்தில் நாம் கடக்க வேண்டிய தொலைவை நினைவுபடுத்துகின்றனர்.
அறிவையும் உழைப்பையும் நம்பும் பிரியா பவானிசங்கர் போன்ற கலைஞர்கள் முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பார்கள். ஆனால், செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் ‘ராசி’ போன்ற அறிவுக்குப் புறம்பான விஷயங்களை வைத்து அவரை இழிவுபடுத்துவோர் குட்டைபோல் அங்கேயே தேங்கிவிடுவார்கள்.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT