Last Updated : 06 May, 2018 11:25 AM

 

Published : 06 May 2018 11:25 AM
Last Updated : 06 May 2018 11:25 AM

பக்கத்து வீடு: பேசு பெண்ணே பேசு!

ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதித்து வருகின்றனர். தொழில்நுட்ப உலகமும் இதற்கு விதி விலக்கு அல்ல. மென்பொருள் வல்லுநராகவும் Coding நிபுணராகவும் பல பெண்கள் வெற்றித் தடம் பதித்துள்ளனர். ஆனால், தங்களிடம் உள்ள திறமையை வெளிப் படுத்தி, அதன் மூலம் பிறருக்கு பயிற்றுவிக்கும் விஷயத்தில் தொழில்நுட்ப உலகில் இருக்கும் பெண்கள் இன்னும் முன்னேற வேண்டியிருப்பதாகக் கருதுகிறார் மும்பையைச் சேர்ந்த மஞ்சுளா துபே.

‘புக் மை ஷோ’ இணையதளத்தில் சீனியர் டெவலப்பர் ஆகப் பணியாற்றும் மஞ்சுளா, ‘ஜாவா’-வில் கில்லாடி. பல்வேறு தொழில்நுட்பக் கருத்தரங்குகளுக்குச் சென்று உரையாற்றி, தங்களிடம் உள்ள தொழில்நுட்பம்மூலம் என்னென்ன மாதிரியான முன்னேற்றங்களை டெவலப்பர் துறையில் கொண்டு வர முடியும் என எடுத்துரைத்து வருகிறார்.

manjula dube book my show1பெண்கள் ஏன் தொழில்நுட்ப பேச்சாளராக கூடாது?

மும்பையில், தொழில்நுட்ப கருத்தரங்குகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும், மஞ்சுளா செல்லும் பெரும்பாலான கருத்தரங்குகளில், அவர் மட்டுமே பெண் பேச்சாளராக இருப்பார். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், அது பற்றி எடுத்துப் பேசவும், தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப் படுத்தவும் ஏன் பெண்கள் தயங்குகிறார்கள் என்ற கேள்வி மஞ்சுளாவை மனதளவில் புரட்டிப் போட்டது. அனைத்துத் துறை களிலும் தடம் பதிக்கும் பெண்கள் தொழில்நுட்பப் பேச்சாளராக முடியாதா? என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பினார். அதன் விளைவு, தொழில்நுட்ப உலகில் இன்று ஏராளமான பெண் பேச்சாளர்களை உருவாக்கியிருக்கிறார் மஞ்சுளா.

இணைய வழி சேர்த்த கூட்டம்

ஆரம்பக் காலத்தில் ட்விட்டர் மூலம் தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த பெண்களைத் தொடர்புகொண்ட மஞ்சுளா, அவர்களை மேடையேற்றிப் பேச்சாளர்களாக மாற்றினார். இப்படிப் படிப்படியாகப் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த மஞ்சுளா. meetup.com இணையதளத்தில் Mumbai Women Coders என்ற தனி பக்கத்தை உருவாக்கி அசத்தி வருகிறார். இந்தப் பக்கத்துக்கு கூகுள் நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் வழங்கியிருக்கிறது.

இது மட்டுமின்றி, கூகுள் நிறுவனம் நடத்தி வரும் Women Tech Makers என்ற செயல்பாட்டையும் மஞ்சுளா முன்னெடுத்து வருகிறார். ஃபிளிப்கார்ட், யாத்ரா போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண்கள் மஞ்சுளாவின் ஃபேஸ்புக் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களையும் விட்டு வைக்காத மஞ்சுளா, சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்குகளில் பேசும் அளவுக்குத் தயார்படுத்தியிருக்கிறார்.

மனத்தடையை தகர்ப்போம்

இது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டால், மஞ்சுளாவின் பதில் மிகச் சாதாரணமாக இருக்கிறது. தொழில்நுட்பத் துறையில் திறமைமிக்க பல பெண்கள் இருக்கிறார்கள். டீம் லீடர் ஆக இருந்து கொண்டு பல சவால்களைச் சமாளிக்கும் திறமை மிக்க பெண்கள்கூட, கருத்தரங்குகளில் பேசுவதற்கு அழைத்தால் தயங்குவார்கள் என்கிறார். எனவே, அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு, அவர்களின் பேசுவதற்கு உள்ள மனத் தடைகளைப் பற்றிக் கேட்டறிந்தாலே, பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்பது மஞ்சுளாவுக்கு அனுபவம் தந்த பாடம்.

பொதுவாக, தொழில்நுட்பப் பேச்சாளர்களாக உருவெடுக்கும் பெண்களுக்கு மனதளவிலான சிக்கல் என்னவென்றால், நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்பார்களா? என்பதுதான். அந்த எண்ணத்தை மாற்றுவதுதான் மஞ்சுளாவின் முதல் வேலை. ஜாவா-வில் நிபுணராக விளங்கும் மஞ்சுளா, பிற Coding மொழியில் திறமைமிக்க பெண்களும் பேச்சாளர்களாக உருவெடுக்க உதவுகிறார். அவரைப் பொறுத்தவரை, பெண்கள் மனதில் இருக்கும் விதை, வேர் விடத் தொடங்கிவிட்டாலே போதும், நாளுக்கு நாள் அது கிளைகளாகப் பிரிந்து முடிவில் விருட்சமாக வளர்ந்துவிடும்.

manjula dube book my show3rightநம்பிக்கையின் பரிசே மாற்றம்

தொழில்நுட்ப உலகில் பெண் பேச்சாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டதா என்று மஞ்சுளாவிடம் கேட்டால், ‘நிச்சயம் ஆரோக்கியமான மாற்றம் உருவாகத் தொடங்கியிருக்கு. ஆனால், இன்னும் நீண்ட தொலைவு பயணிக்கணும். பெண்களை முன்னிலைப்படுத்த ஆண்களின் உதவியும் தேவைப்படுது.

காரணம், பல நேரம் பெண்களுக்கு என்ன தெரியும்? என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாறணும், தொழில்நுட்ப உலகில், ஆணுக்குப் பெண் நிகர் என்று அவர்கள் நினைக்கத் தொடங்கணும். பெண்ணும் அதை நம்பணும். அப்பத்தான் ஆச்சரியமிக்க மாற்றம் ஏற்படும்’ என்கிறார் மஞ்சுளா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x