Published : 20 May 2018 09:51 AM
Last Updated : 20 May 2018 09:51 AM

முகம் நூறு: உழைப்பால் இணைந்த கைகள்

ரண்டு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட சாலையில் சென்றால் பழமையான பாணியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயில் வரவேற்கிறது. சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின் (ஐசிஎப்) கதவுகள் பலத்த பாதுகாப்புக்கிடையே திறக்கப்படுகின்றன. நெருப்பால் உருவான ஒளி வெள்ளத்தின் நடுவே அமர்ந்து ரயில் பெட்டியின் பாகங்களைப் பற்றவைத்துக் கொண்டிருந்தனர் பாதுகாப்புக் கவசம் அணிந்த ஊழியர்கள். அந்தக் கவசங்களுக்குப் பின்னால் உழைத்துக்கொண்டிருந்தவர்களில் பெண்கள் சிலரும் இருந்தார்கள்.

மகிழ்வை அளிக்கும் ‘மகிளா’

நீண்ட ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபட்டுவருவது, முன்னேற்றத்தின் குறியீடாகவே தெரிகிறது. சென்னை ஐசிஎப்பில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ரயில் பெட்டிகளைத் தயாரிப்பது போன்ற கடினமான பணிகளில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்நிலையில் 2018 மகளிர் தினத்தை முன்னிட்டு ஐசிஎப் தொழிற்சாலையில் பெண்களை மட்டும் கொண்ட ‘மகிளா’ என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த 30 பெண்கள், பயணிகள் ரயிலின் ஒரு முழுப் பெட்டியைத் தயாரித்து இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தக் குழுவுக்குப் பொறுப்பாளராக இருக்கிறார் முதுநிலைப் பகுதிப் பொறியாளர் சாருலதா. சமீபத்தில்தான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சிறப்பாக முடிப்பதுடன் குழுவினரை ஒன்றிணைத்துச் செயல்படுவதிலும் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்தக் குழுவில் 27 வயதிலிருந்து 57 வயதுவரையுள்ள முதுநிலைப் பொறியாளர்கள், வெல்டர்கள், ஃபிட்டர்கள், உதவியாளர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட பெண் ஊழியர்கள் உள்ளனர். இந்த உற்சாகமான பெண்கள் அணியைச் சந்திக்கச் சென்றபோது ரயில் பெட்டியின் கனமான ஒரு பாகத்தை வெல்டிங் செய்வதற்காகத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்தார் 57 வயதாகும் வசந்தா.

வெல்டிங் லேடி

வெல்டிங் பிரிவில் வயதில் சீனியரான வசந்தாவை அங்குள்ள அனைத்து ஊழியர்களும் ‘வசந்தாம்மா’ என்று அன்பாக அழைக்கிறார்கள். கணவர் இறந்த பிறகு அவருடைய வேலை வசந்தாம்மாவுக்குக் கிடைத்துள்ளது. முதலில் ரயில்வே உணவகத்தில் பணியாற்றிவந்த வசந்தாம்மா பின்னர் ரயில் பெட்டிகள் செய்யும் தொழிற்சாலையில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். கடந்த 2014 முதல் வெல்டராகப் பணியாற்றிவருகிறார்.

“நான் உதவியாளரா இருந்தப்ப மத்தவங்க வெல்டிங் செய்யறதை ஆசையா பார்ப்பேன். அப்போதிருந்தே வெல்டிங் மேல ஆர்வம் ஏற்பட்டுப்போச்சு. இந்த வயசுல வீட்டுல இருந்தா சோம்பேறியா ஆகிடுவோம். வேலை செய்யறதுக்கு உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உழைச்சிட்டே இருக்கணுங்கறதுதான் என் ஆசை” என்று சிரித்தபடியே சொல்கிறார் வசந்தா. ஒரு முறை வெல்டிங் செய்துகொண்டிருந்தபோது வசந்தாவின் புடவையில் தீப்பிடித்துக்கொண்டது. இதனால் அவருடைய கால் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த விபத்து நடந்த இரண்டே மாதத்தில் புல்லட் ரயில்போல் அவர் வேலைக்குத் திரும்பியதை மற்ற ஊழியர்கள் ஆச்சரியத்துடன் நினைவுகூர்கிறார்கள்.

ஃபிட்டர் முனீஸ்வரி

ஒரு ரயில் பெட்டியில் நூற்றுக்கணக்கான துணை பாகங்கள் ஒன்றிணைக்கப்படும். ஒவ்வொரு பாகத்தையும் கச்சிதமாக இணைப்பதில் பலரது பாராட்டையும் பெற்றவர் ஃபிட்டராகப் பணிபுரிந்துவரும் முனீஸ்வரி. ரயில் பெட்டியைத் தயாரிக்கும் இடத்தில் முனீஸ்வரி இருந்தால் வெல்டரின் பணி சுலபமாகிவிடுமாம். ஃபிட்டராக வேலை செய்வதற்கு முன்பு ஐசிஎப்பில் துப்புரவுப் பணியாளராக இருந்துள்ளார். இங்கு ஃபிட்டராகப் பணியாற்றிவந்த அவருடைய தந்தை மரணமடைந்த நிலையில் அந்த வேலை முனீஸ்வரிக்குக் கிடைத்தது.

“இதெல்லாம் ஆம்பளைங்க செய்யற வேலை, உனக்கெல்லாம் இது எதுக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா எனக்கு இந்த மாதிரி வேலைதான் பிடிச்சிருக்கு. கஷ்டப்பட்டு வேலை செஞ்சாதான் வேலை பார்த்த மாதிரி இருக்கும். அதேபோல் இங்க எங்ககூட வேலை செய்யற ஆண்கள் எல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பா இருக்காங்க. இங்க இருக்கிற பெண்கள் எல்லாம் தைரியமா வேலை செய்றோம்னா அதுக்கு ஆண் ஊழியர்களோட பங்கு முக்கியமானது” என சக ஊழியர்களைப் பற்றிச் சொல்கிறார் முனீஸ்வரி.

அன்னை அமைத்துக்கொடுத்த பாதை

‘மகிளா’ குழுவில் மிகவும் இளையவரான கலைவாணி, ஐசிஎப்பில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் படித்தவர். ரயில்வே தேர்வில் வெற்றிபெற்று நான்கு ஆண்டுகளாக வெல்டராகப் பணியாற்றிவருகிறார். “நான் ஸ்கூல் படிச்சபோது ஐசிஎப் பத்தி எதுவும் தெரியாது. என் அம்மாதான் இதைப் பத்தி எடுத்துச் சொன்னாங்க. அவங்க எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. கட்டிட வேலைக்குப் போய் எங்களைப் படிக்க வச்சாங்க. அம்மாதான் நிறைய பேர்கிட்ட விசாரிச்சு ரயில்வே தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கறதுக்கு என்னைச் சேர்த்துவிட்டாங்க. நான் இன்னைக்கு இந்த அரசாங்க வேலையில் இருக்கேன்னா, அதுக்கு எங்க அம்மாதான் காரணம்” என்கிறார் கலைவாணி.

தற்போது இந்தப் பெண்கள் குழுவினர் ‘Train 18’ என்ற புதிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட ரயிலைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் வெற்றி நிச்சயம் என்பதை அவர்களது செயலில் வெளிப்படும் வேகம் உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x