Published : 26 May 2018 06:36 PM
Last Updated : 26 May 2018 06:36 PM
பி
ரியா, நவயுகப் பெண். குடும்பத்தினரின் உடல்நலத்திலும் உணவிலும் மிகுந்த அக்கறை காட்டுபவர். உணவில் சுவையைவிடச் சத்துக்கே அதிக முக்கியத்துவம் தருவார். தினமும் பால், கீரை, காய்கறிகள், பயறு வகைகள், சத்தான நொறுவை எனப் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறார். தவிர குடும்பத்தில் உள்ளவர்களை, குறிப்பாகத் தன் மகனை தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளச் செய்கிறார். அதற்கு அவரே முன்மாதிரியாகவும் இருக்கிறார். இதையெல்லாம் மீறி, அவருடைய மகன் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.
சண்முகப்பிரியாவுக்கு (40) சென்னைதான் பூர்விகம். ராயப்பேட்டையில் வசிக்கும் அவர், தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர். ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதுதான் அவரது மிகப் பெரிய கவலை.
“என் மகன் என் அளவுக்கு உயரமாக இருக்கிறான். வகுப்பிலேயே உயரமானவனாக இருந்து என்ன செய்ய? உடலில் சதைப் பிடிப்பின்றி நோஞ்சானைப் போலதான் இருக்கிறான். ஊட்டச்சத்து மிகுந்த உணவையும் பானங்களையும் அவனுக்குத் தேவைக்கு அதிகமாகவே தருகிறேன். ஆனால், எதுவுமே அவன் உடம்பில் ஒட்டவே மாட்டேங்குது” என்று கவலையுடன் சண்முகப்ரியா சொல்கிறார். கர்ப்ப காலத்தில் அவர் முறையாகச் சாப்பிடாததால், அவருடைய மகன் எடை குறைவாகப் பிறந்தது இதில் கவனத்துக்குரியது.
ஒட்டாத உணவு
உடல் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பழங்களிலும்ம் காய்கறிகளிலும் உள்ளன. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ஆய்வுகளும் அதை உறுதிசெய்கின்றன. ஆனால், நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துகள் அனைத்தையும் நம் உடல் கிரகித்துக்கொள்வதில்லை. 10 சதவீதம் முதல் 90 சதவீதம்வரை ஊட்டச்சத்தை நம் உடல் ஏற்றுக்கொள்கிறது. கிரகிக்கும் அளவு தெரியாமல் அளவுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவது நன்மைக்குப் பதில், தீமையையே விளைவிக்கும். ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டும், சிலர் ஆரோக்கியமற்று இருப்பதற்கான காரணமும் இதுதான்.
உடலின் கிரகிக்கும் அளவைக் கண்டறிவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு, ஒரு வாழைப்பழத்தில் 420 மி.கி. பொட்டாசியம் இருக்கும். ஆனால், நாம் அதைச் சாப்பிட்டவுடன், அதிலிருந்து எத்தனை மி.கி. பொட்டாசியத்தை நம் உடம்பு கிரகித்துக்கொண்டிருக்கும் என்பதை எப்படிக் கண்டறிவது? நம் வீட்டில் என்ன சோதனைச்சாலையா இருக்கிறது? நாம் அந்த அளவுக்குச் செல்லத் தேவையில்லை. உடலின் கிரகிக்கும் ஆற்றலை அதிகரிக்கும் முறைகளில் கவனம் செலுத்தினாலே போதும்.
ஊட்டச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பல காரணங்களைப் பொறுத்து மாறுபடும். வயது, வைட்டமின்களையும் தாதுக்களையும் நம் உடல் கிரகித்துக்கொள்வதைத் தடுக்கும் முக்கிய காரணிகள் உணவுப் பழக்கம், மன அழுத்தம், வாயு போன்றவை என வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தினமும் உடற்பயிற்சி செய்வது, நேரத்துக்குச் சாப்பிடுவது, முழுமையான உணவைச் சாப்பிடுவது, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்வது போன்றவை நம் உடலின் கிரகிக்கும் ஆற்றலை மேம்படுத்த உதவும். முக்கியமாக உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. குறிப்பாக மது, புகையிலை, காபி, தேநீர் போன்றவற்றை உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
பகட்டு விளம்பரங்களின் மூலம் நம் மேல் திணிக்கப்படும் சத்து பானங்கள் தேவையற்றவை; பிரபலங்கள் விளம்பரப்படுத்தும் உணவு முறைகளும் தேவையல்ல. மேலே குறிப்பிட்ட எளிய பயிற்சிகளும் பழக்கவழக்க மாற்றங்களுமே போதும்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே நம் நாட்டில் அதிகமாக இருப்பது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. ஊட்டச்சத்தின்மை குழந்தைகளின் உயிர் வாழும் திறனையும் சாத்தியத்தையும் குறைக்கிறது. அது குழந்தைகளை எளிதில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக்கி, அவர்களின் கற்றல் திறனைப் பாதிக்கிறது. அது அவர்களின் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி, அவர்களது எதிர்கால வாழ்வைச் செழிப்பற்றதாகவும் வளர்ச்சியற்றதாகவும் மாற்றுகிறது.
இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு பெரும்பாலும் பேறுகாலத்திலும் குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்களிலும் ஏற்படுகிறது. ‘இந்தியாவில் தாய்மார்கள் பெரும்பாலும் இளம்பருவத்தினராகவே உள்ளனர். அவர்களில் 75 சதவீதத்தினர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதனால் கர்ப்ப காலத்தில் சராசரியாகப் பத்து கிலோ அளவுக்கு அதிகரிக்க வேண்டிய நிலையில், அவர்களது எடை வெறும் ஐந்து கிலோ மட்டுமே அதிகரிக்கிறது’ என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
நாட்டுக்கும் கேடு
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, சீனாவைவிட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியக் குழந்தைகளில் கிட்டதிட்ட ஐம்பது சதவீதத்தினர், அதாவது 60 லட்சம் குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர். 45 சதவீத இந்தியக் குழந்தைகள் வளர்ச்சி குன்றி, குள்ளமாக உள்ளனர். 20 சதவீதத்தினர் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையற்றவர்களாக உள்ளனர். மேலும் இந்தியாவில் 75 சதவீத குழந்தைகள் ரத்தசோகையுடன் உள்ளனர்.
பொருத்தமற்ற உணவுமுறை, குழந்தை வளர்ப்பில் உள்ள குறைபாடுகள், சுகாதாரக் குறைபாடு, மக்கள்தொகை பெருக்கம் என ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான காரணங்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால் கல்வியறிவு நிறைந்த, வேலைக்குச் செல்லும், தன்னிறைவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாடு அற்றவர்களாக இருப்பதை உலக வங்கி சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உடல்நலத்திலும் கல்வியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் ஊட்டச்சத்தின்மை செலுத்தும் தாக்கத்தின் காரணமாக மனிதவள மேம்பாட்டில் அது முக்கியத் தடையாகக் கருதப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு தனி மனிதனை மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கிறது. இதை முறையாகக் கவனித்து உடனடியாகக் களையாவிட்டால், அது நம் உடல்நலனை மட்டும் அல்லாமல், நாட்டையே மீள முடியாத வீழ்ச்சியில் தள்ளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT