Published : 13 May 2018 11:02 AM
Last Updated : 13 May 2018 11:02 AM
நா
ட்டிய மேதை பாலசரஸ்வதியிடம் நாட்டியம் பயின்ற முதன்மையான சீடர்களில் நந்தினி ரமணி முக்கியமானவர். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர், கலை விமர்சகர், பத்திரிகையாளர் எனப் பல தளங்களில் எல்லைகளை விரித்த நந்தினி ரமணியிடம் பாலசரஸ்வதியின் நாட்டிய மேதைமையைப் பற்றிக் கேட்டோம்:
# சங்கீதத்தில் இருக்கும் புலமை நாட்டியத்தில் வெளிப்படுவது அவசியம். சங்கீதம் நன்றாகத் தெரிந்தால்தான் நாட்டியம் பரிமளிக்கும் என்ற கருத்து பாலாம்மா பாணிக்கு அடிப்படை.
# பாலாம்மா தரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர், எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காதவர். சென்னை சங்கீத வித்வத் சபையில் நடந்த பாலசரஸ்வதியின் நாட்டியப் பள்ளியின் முதல் மாணவி நந்தினியின் மூத்த சகோதரி பிரியம்வதா சங்கர். நந்தினி ரமணி, உமா-ரமா, சசிகலா, சியாமளா, சந்திரகலா, மாதங்கி, உமா, ரஞ்சனி, பாலாம்மாவின் மகள் லக்ஷ்மி நைட் ஆகியோர் பாலாம்மாவின் மாணவிகள். தற்போது அந்த பரம்பரையில் அநிருத்தா ஆடல் கலைஞராக இருக்கிறார். பாலசரஸ்வதிக்கு வெளிநாட்டு மாணவிகள் பலரும் உண்டு.
# பாலசரஸ்வதியின் ஆடற்கலை கோயிலிலிருந்து மேடைக்கு வந்த ஒரு சம்பிரதாய வழி. பரதநாட்டியத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் ரசிகர்கள் உணர வேண்டும் என்று அவருடைய தாயார் விரும்பினார். ஒருமுறை முருகன் கோயிலில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் முருகன் எதிரில் பரதநாட்டிய உருப்படிகளில் ஒன்றான ‘சப்தத்தை’ ஆடி முடித்தார். அதன்பின் முருகன் அருளால் படிப்படியாக வாய்ப்புகள் பெருகியதாக பாலாம்மா நம்பினார்.
# 60-களில் முதன்முதலாக எடின்பரோ விழாவில் கலந்துகொண்டு, தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் பரதநாட்டியக் கலையின் மேன்மையைக் கொண்டு சென்ற பெருமை பாலாம்மாவையே சாரும்.
# மார்க்கத்தை எந்தவிதமான கலப்பும் இல்லாமல் அதற்குரிய சம்பிரதாயத்தோடு கடைசிவரையில் ஆடியவர் பாலாம்மாதான். குருவிடம் அசாத்தியமான பக்தி, கலையில் இருந்த ஆழமான ஈடுபாடு ஆகியவை பாலாம்மாவின் கொள்கைகளாக இருந்தன.
# பக்தியை மையப்படுத்தி ஆடினாலும், நாட்டியத்துக்கு முக்கியமான சிருங்கார ரசத்தை மிகவும் லாகவமாகக் கையாண்டவர் பாலாம்மா.
# கவுரியம்மாள், லக்ஷ்மி நாராயண சாஸ்திரி போன்ற மேதைகளிடம் அபிநய நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் சுயமேதாவிலாசமும் கொண்டவர் பாலம்மா. காலத்தைக் கடந்து அவரது கலை நிற்பதற்கு இந்த சுய மேதாவிலாசமே காரணம்.
# இசையோடு சேர்ந்த அபிநயம் பாலாம்மாவுடையது. தஞ்சை நால்வரின் தியாகராஜர் குறித்த வர்ணத்தில் ‘நாகரிகமான’ என்னும் ஒரு வரியை எடுத்துக்கொண்டால், அதை விதம்விதமாக அபிநயம் பிடித்துக் காண்பிப்பார். ‘வந்தது வராமல்’விதம்விதமாக அபிநயங்களைக் கையாளுவார். அவரது அபிநய கோப்பே ஒரு குறுங்கதையைப் போல் இருக்கும்.
# மனோதர்மத்துடன் அபிநயங்களை வெளிப்படுத்தும் திறமை பெற்றவர். குரு கந்தப்பா பிள்ளையின் நிருத்தத்தைச் சுத்தமாகப் பின்பற்றினார்.
# பாலம்மாவின் ‘வருகலாமோ’ அபிநயம் நந்தனையே நம் கண்முன்னால் கொண்டு வந்துவிடும். அவருடைய நிகழ்ச்சிகளை அன்றைக்கு முன்னணியில் இருந்த கலைஞர்களான பாலக்காடு மணி அய்யர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, பிருந்தா, முக்தா, ருக்மணி தேவி, எம்.எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாசய்யர் போன்றவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து ரசிப்பார்கள்.
# ரசிகர்களுக்கு உயர்ந்த கருத்துகளைச் சொல்வதற்குத்தான் பரதக் கலை என்பதில் மிகுந்த கவனமாக இருந்தவர் பாலாம்மா.
# ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி பரதக் கலையை வளர்த்தவர் ருக்மணி தேவி. தானே ஒரு ஸ்தாபனமாக உயர்ந்தவர் பாலாம்மா. கலை தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே மேடையில் விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் அவரவர் வழியில் பணிசெய்து கொண்டிருந்தார்கள்.
தகவல் உதவி: பாலசரஸ்வதியின் மாணவி நந்தினி ரமணி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT