Published : 26 May 2018 06:37 PM
Last Updated : 26 May 2018 06:37 PM

களத்தில் பெண்கள்: கொன்றது ஜனநாயகத்தையும்தான்!

 

ஸ்

டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரும் போராட்டத்தைக் காரணமாக வைத்து 13 உயிர்களை அரசே எடுத்திருக்கிறது. அதில் இரண்டு பேர் பெண்கள். பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு, கல்லூரிக் கனவில் இருந்த ஸ்னோலின், நான்கு குழந்தைகளின் தாயான ஜான்சி இருவரும் தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களின் எழுச்சி

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு என்பது வெறுமனே கடந்து சென்றுவிடக் கூடிய செய்தியல்ல. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் மையப்புள்ளியில் நின்றவர்கள் பெண்களே. ஆனால், காவல்துறையோ பெண்களையும் குழந்தைகளையும் முன்னால் நிறுத்திவிட்டு, பின்னால் கிளர்ச்சி நடந்தது என்று கூறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி திடீரெனப் புறப்பட்டு பேரணியாக அவர்கள் வந்துவிடவில்லை. 99 நாட்கள் ஜனநாயகத்தின் விளிம்பில் நம்பிக்கை விதை பிடித்துக் காத்திருந்து, அலுத்துப்போன பின்பே களத்துக்கு வந்தனர்.

“எலே அந்த பக்கம் போகாதல… செனக் கூட்டம் இருக்கும்… போலீஸ்…கீலீஸ் நிப்பாமுல” எனப் பிள்ளைகளைப் பாதுகாக்கத் துடிக்கும் தாய்மார்களுக்கு மத்தியில், “இந்த ஆலை இங்கன இருந்துச்சு, நம்ம சந்ததியையே அழிச்சு போடுமுடே”ன்னு ஆவேசமாகக் களம் இறங்கினர் தூத்துக்குடி பெண்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரத்தில் போராட்டம் தொடங்கியபோதும் கடந்த மார்ச் 24-ம் தேதி ஆலையை மூடக் கோரி மொத்த தூத்துக்குடியும் திரண்டு வந்தபோதும், அதில் பாதிக்கும் மேல் பெண்களே நிறைந்திருந்தனர்.

தானாகத் திரண்ட பெண்கள் படை

இந்த ஆலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு பெண்கள் அழைத்து வரப்படவில்லை. தன்னெழுச்சியான உந்தித்தள்ளல் இருந்ததைத்தான் அந்தப் பெரும் கூட்டம் உணர்த்தியது. பெண்களுக்கு ஏன் இத்தனை ஆத்திரம் என்ற கேள்விக்கு, குமரெட்டியாபுரத்தில் போராட்டம் நடந்தபோது நான் சந்தித்த பெண்கள் சொன்ன ஒற்றை வார்த்தையே பதில்.

புற்றுநோய் அச்சம் தொடங்கி, நச்சுப்புகை வெளியேற்றம்வரை பலவகையான குற்றச்சாட்டுக்கள் பொதுவெளியில் புழங்கினாலும் பெண்கள் முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டு முக்கியமானது. ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாயிலும்கூட சிக்கல் இருப்பதாக, அவர்கள் சொல்லும் ஒற்றை குற்றச்சாட்டு போதாதா பெண்ணிணம் களத்துக்கு வந்து போராடுவதற்கும் நீதி கேட்பதற்கும்.

சிதைக்கப்பட்ட கனவு

கடந்த 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மாணவி ஸ்னோலினுக்குத் தன் எதிர்காலம் குறித்து எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும். சீறிப் பாய்ந்து வந்த அந்தத் தோட்டா ஸ்னோலினின் வாய்க்குள் புகுந்து வெளியேறியிருக்கிறது. “நாம போராட்டத்துக்குப் போறோம், ஆலையை மூடுறோம்…” எனத் தன் தோழிகளிடம் பேசியபடி போராட்டக் களத்துக்கு வந்த அந்தப் பெண், தான் இப்படிச் சுடப்பட்டுக் கொல்லப்படுவோம் என நினைத்திருப்பாரா?

வளமான வாழ்க்கை, நிறைவான எதிர்காலம் என எதையும் அனுபவிக்காமல் போராட்டக் களத்திலேயே உயிரை விட்டுள்ளார் ஜாக்சன் என்னும் கடலோடியின் மகள் ஸ்னோலின். ஸ்னோலினின் மரணத்தால் அவரது ஊரான திரேஸ்புரமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

மீனவ கிராமமான திரேஸ்புரத்தில்தான் ஜான்சி என்னும் இன்னொரு பெண்ணையும் சுட்டு வீழ்த்தியுள்ளது காவல்துறை. திரேஸ்புரம் செல்லும் வழியில்தான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் முகாம் இல்லம் இருக்கிறது. காலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்பு, “இப்படி செஞ்சுட்டீங்களே” என ஆவேசமாக எஸ்.பி. வண்டியைத் தடுத்து நிறுத்தியதால் ஜான்சி வீழ்த்தப்பட்டதாகத்தான் தூத்துக்குடியில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்குத் தகவல் வந்தது.

ஆனால், ஜான்சியின் உறவினர்களோ, வேடிக்கை பார்க்கப்போனவரைச் சுட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியே எஸ்.பி. வாகனத்தை தடுத்திருந்தாலும் தங்கள் பகுதி மக்களின் வாழ்வுரிமைக்காக நிராயுதபாணியாக நின்று போராடிய ஒரு பெண்ணின் உயிரைப் பறிப்பதுதான் அரசாங்கத்தின் கடமையா?

குலையாத உறுதி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தும் பேராசிரியர் பாத்திமா பாபு தொடங்கி, வீட்டில் கணவருக்கும் குழந்தைகளுக்கும் சமைத்து வைத்துவிட்டு ஆலையை மூடுவார்கள், நம் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் என்ற நம்பிக்கையோடு களம்கண்ட பெண்கள்வரை ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பே பிரதானம்.

இதில் இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டியது அவசியம். துப்பாக்கிச் சூட்டில் பலியான இரு பெண்களுமே விளிம்பு நிலையில் வாழும் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தங்கள் வீட்டு ஆண்களுக்கு கடலுக்குள் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது, எல்லை தாண்டியதாகச் சொல்லி யாரும் சுட்டுவிடக் கூடாது என்றெல்லாம் பனிமய மாதாவின் முன்பு கரம் கூப்பி நின்ற பெண்கள், ஒரு நாள் தங்கள் வீட்டுப் பெண்களும் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என நினைத்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆயிரம் சமாதானம் சொன்னாலும், ஆற்றுப்படுத்த முடியாத வரலாற்று தவறாகவே இது நினைவுகூரப்படும். இப்படியான படுகொலைகளால் தங்களை வீழ்த்திவிட முடியாது என்பதையே துப்பாக்கிச் சூட்டுக்குப் பிந்தைய பெண்களின் உறுதி உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x