Last Updated : 20 May, 2018 09:52 AM

 

Published : 20 May 2018 09:52 AM
Last Updated : 20 May 2018 09:52 AM

வண்ணங்கள் ஏழு 05: உறவென்னும் புதிய வானில்...

பொ

ண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்

அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு போட்டா மாட்டிக்கணும்

- என்னும் அந்தக் காலத்து திரைப்படப் பாடல்கள் தொடங்கி, நேற்றுவந்த,

‘வீட்டு குத்துவிளக்கு

நீ கெடைச்சா என் வாழ்க்க கெத்து’

- என்ற பாடல்வரை பெண்ணை ஆணுக்கு மணம் முடித்து வைப்பதற்கு இந்தச் சமூகம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேர்கோட்டுச் சிந்தனையை மறுத்து உலகின் பல பகுதிகளிலும் ஆண்களிடமும் பெண்களிடமும் புறப்பட்டதுதான் ‘பால் புதுமைக் கோட்பாடு’.

டாக்டர் எத்திங்கர், ஜுடித் பட்லர், ஈவ் செட்விக், கிறிஸில்டா போல்ஸ்கி ஆகிய பெண்ணியவாதிகள்தாம் பால் புதுமைக் கோட்பாட்டை 1980-களில் வடிவமைத்தனர். மருத்துவம், சமூகவியல், அறிவியல் போன்ற பல துறைகளை அடிப்படையாகக்கொண்டு, சமூகத்தில் நிலவும் பாலின இருமைக் கொள்கைக்கு எதிரான கோட்பாட்டை இவர்கள் முன்னெடுத்தனர். பால் புதுமைப் பிரிவினரில் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட பாலினங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், பைசெக்ஷுவல் (bisexual) எனப்படும் இருபால் உறவாளர்களுக்கும் பேன்செக்ஷுவல் (pansexual) எனப்படும் பலர்பால் உறவாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, தன்பால் ஈர்ப்பு இயற்கையானதுதான் என்பதைப் பல்வேறு உதாரணங்களோடு உலகப் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து ஒரு பேச்சுப் போட்டியில் பேசினேன். அந்த வயதில் நான் பேசிய அந்த உரைக்கு ஆசிரியர்கள் பலரிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. விதிவிலக்காகச் சில ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்தது” என்கிறார் பேன்செக்ஸுவாலிடி எனும் பாலின அடையாளத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நமீதா.

என்னுள்ளே ஏதோ…

நமீதாவுக்கு இப்போது 24 வயது. உடன் படிக்கும் மாணவிமீது முதல் ஈர்ப்பு வந்தபோது அவருக்கு 12 வயது இருக்கும். இன்னொரு பெண் மீதும் ஆண் மீதும் ஈர்ப்பு கொண்டிருந்ததை அவர் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறார். அதைப் பற்றித் தெளிவடைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சியின் போதுதான் பைசெக்ஸுவல் பற்றி முதலில் நமீதா அறிந்துகொண்டார்.

“அதன் பிறகு தீவிரமாக என்னைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் எனக்கு ஆண், பெண் தவிர திருநங்கை, திருநம்பி, ஏ-ஜென்டர் (பால் இல்லாதவர்கள்) என எல்லோரின் மீதும் ஈர்ப்பு இருப்பது தெரிந்தது. நான் ஒரு பேன்செக்ஸுவல் என்பதைக் கல்லூரி நாட்களில்தான் உணர்ந்தேன். என்னுடைய காதல் இனப்பெருக்க உறுப்புகளைச் சார்ந்தது இல்லை. அளவு கடந்த அன்பையும் நேசத்தையும் பிணைப்பையும் எதிர்நோக்குவதே” எனத் தன் காதலுக்குப் புது பரிமாணம் காட்டுகிறார் நமீதா.

புதிய வெளிச்சம்

சமூகவியலில் முதுகலை படித்தபோது பயிற்சி மாணவியாக ‘நிறங்கள்’ என்ற தன்னார்வ அமைப்பில் நமீதா இருந்திருக்கிறார். அப்போது மாற்றுப் பாலினத்தவர் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. படிப்பு முடிந்தவுடன் தொடர்ந்து இன்றுவரை அந்த அமைப்பிலேயே தன்னார்வலராக நமீதா செயல்பட்டு வருகிறார்.

“மனித உரிமைச் சட்ட மையத்தின் மாநாடு மகாராஷ்டிரத்தில் பஞ்சகனி எனும் இடத்தில் நடந்தது. அந்த மாநாட்டில் பங்கெடுத்தது எனக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அந்த நான்கு நாட்களில் பாலினச் சிறுபான்மையைச் சேர்ந்த பல்வேறு நபர்களைச் சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் வலி மிகுந்த ஒரு சோகக் கதை இருந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஆராயவைத்தன. அவற்றுள் பாலின அடையாளம், பால் ஈர்ப்பு சார்ந்த பல உண்மைகள் புரிந்தன” என்கிறார் நமீதா.

‘ஷாக்’ கொடுத்தால் பாலினம் மாறுமா?

பெண்ணை அடிமையாகவே வைத்திருப்பதற்கான உத்தியாகவே திருமணத்தை அவர் குறிப்பிடுகிறார். தான் ஒரு பேன்செக்ஸுவலாக இல்லாமல் இருந்தால்கூட, திருமணம் வேண்டாம் என்பதே அவரது முடிவு என்கிறார். வீட்டிலும் யாரும் இந்த விஷயத்தில் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.

“சரியான புரிதல் இல்லாமல் மருத்துவத்தின் மூலமாக இந்த உணர்வுகளை மாற்றிவிடலாம், ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுத்தால் சரியாகிவிடும், வலுக்கட்டாயமாக வல்லுறவுக்கு ஆளாக்கும்போது பெண் குணமாகிவிடுவாள் என்றெல்லாம் பல கொடுமைகளைப் பெற்றோர்களே தங்களுடைய பிள்ளைகளுக்கு நடத்துவதும் நம் சமூகத்தில் உண்டு. இவையெல்லாம் மாற, சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர் குறித்தும் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட பாலினங்களைக் குறித்தும் புரிதல் ஏற்பட வேண்டும்” என்கிறார் நமீதா.

உரிமையைப் பறிக்கும் சட்டம்

தனி மனித உரிமைக்கு எதிரான 377-வது சட்டப் பிரிவை நீக்கினால்தான் மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள் மீட்கப்படும்; தங்களது பாலின அடையாளங்களுடன் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தடையாக இருப்பது அந்தச் சட்டம்தான் என்கிறார் நமீதா. சமூகத்துக்குப் பயந்தே மாற்றுப் பாலினத்தவரின் மரணங்கள்கூட மூடி மறைக்கப்படுகின்றன. ஆனால், சமூகம், சட்டம் போன்றவை எதுவும் செய்ய முடியாததைப் பெற்றோரின் அரவணைப்பு செய்யும். “உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி, எந்தப் பாலினத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்களைப் புறக்கணிக்காதீர்கள்” என்று பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறார் நமீதா.

அம்மாவின் பரிவு

ஒருமுறை உடல்நலம் சரியில்லாதபோது நடந்த திருநங்கைகள் போராட்டத்தில் நமீதாவால் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டதைப் பார்த்த நமீதாவுடைய அம்மா, “நான் போய் அவர்களைப் பார்த்துவருகிறேன்” என்று சொல்லி அங்கே சென்று அவர்களுக்கு வேண்டிய சாப்பாடு, குடிநீர் போன்றவற்றை வழங்கிவந்தார்.

“இந்தச் சம்பவத்தைத் திருநங்கைகள் எல்லோரும் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டனர். என்னோட பாலின அடையாளத்தையும் என் நண்பர்களையும் என் அம்மா ஏற்றுக்கொண்டதை நினைத்து நானும் மகிழ்ந்தேன்” என்று பூரிப்புடன் சொல்கிறார் நமீதா.

(புரிந்துகொள்ள முயல்வோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x