Last Updated : 20 May, 2018 09:53 AM

 

Published : 20 May 2018 09:53 AM
Last Updated : 20 May 2018 09:53 AM

ஆடும் களம் 06: ராக்கெட் ராணி!

ந்திய பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இன்று வீராங்கனைகளுக்குப் பஞ்சமே இல்லை. நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீராங்கனைகளுக்கும் குறைவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பாட்மிண்டன் மகளிர் பிரிவின் முகமாக மட்டுமல்ல, நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே வீராங்கனையாகவும் வலம்வந்தவர் அபர்ணா போபட். மும்பையைச் சேர்ந்த இவர், தேசிய அளவிலான பாட்மிண்டன் தொடர்களில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தைத் தொட்டவர். இதனாலேயே ‘இந்திய பாட்மிண்டன் ராணி’ என்ற சிறப்புக்கும் சொந்தக்காரனார்.

முதல் முத்திரை

சிறுவயதிலிருந்தே டென்னிஸ் மீது தீராத ஆசைகொண்டிருந்த அபர்ணா, பாட்மிண்டன் பக்கம் திரும்ப அவருடைய பாட்மிண்டன் பயிற்சியாளர் அனில் பிரதான்தான் காரணம். அபர்ணா டென்னிஸில் லாகவமாகவும் வேகமாகவும் பந்தை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, பாட்மிண்டன் விளையாட்டு சரியாக இருக்கும் என்று கணித்தவர் அவர்தான். அவரது வழிகாட்டுதல்படி எட்டு வயதில் பாட்மிண்டனில் காலடி எடுத்துவைத்த அபர்ணா, பின்னர் பாட்மிண்டனில் சாதித்தது வரலாறு.

தொடக்கத்தில் அனில் பிரதான் மூலம் பாட்மிண்டன் விளையாடக் கற்றுக்கொண்ட அபர்ணா, 1994-ல் ‘பிரகாஷ் படுகோன் பாட்மிண்டன் அகாடமி’யில் சேர்ந்து தனது திறமையைக் கூர்தீட்டிக்கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாட்மிண்டனின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தேசிய போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 1989-ல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து அவரது பாட்மிண்டன் பயணம் தொடங்கியது. முதல் தொடரிலேயே முத்திரை பதித்து வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு 11 வயது.

சாதனை மேல் சாதனை

1996-ல் முதன்முதலாக சீனியர் பிரிவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். அந்தத் தொடரிலிருந்து அபர்ணாவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. 1997 தொடங்கி 2006 வரை தேசிய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார் அபர்ணா. இந்தக் காலகட்டத்தில் அவர் தொடர்ச்சியாக ஒன்பது முறை பட்டம் வென்றார். இதுவரை எந்த இந்திய பாட்மிண்டன் வீராங்கனையும் செய்யாத சாதனை இது. அத்துடன் இந்திய பாட்மிண்டனின் பிதாமகன் என்றழைக்கப்படும் பிரகாஷ் படுகோனின் சாதனையைச் சமன் செய்தார்.

சர்வதேச அளவிலும் அவர் முத்திரை பதித்தார். 1996-ல் டென்மார்க்கில் நடைபெற்ற உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பினார். இதேபோல 1998-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை அவரைத் தேடிவந்தது. 2004 மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். 2000, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். உலகத் தரவரிசைப் பட்டியலில் 16-வது இடம் வரை முன்னேறினார்.

எமனாக வந்த காயம்

2005-ல் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம், கொஞ்சம் கொஞ்சமாகக் கடுமையாகி அபர்ணாவின் பாட்மிண்டன் வாழ்க்கையை முடிக்கக் காத்திருந்தது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடிய அபர்ணா, காயத்துடனே விளையாடி 2006-ல் தேசிய சீனியர் பட்டத்தை வென்றார். அபர்ணா வென்ற கடைசி தேசிய சீனியர் பட்டம் இதுதான். இந்தப் பட்டத்தை வென்றபோது அபர்ணாவுக்கு 27 வயது. இறுதிப் போட்டியில் இவர் வீழ்த்தியது யாரைத் தெரியுமா? இன்று பாட்மிண்டனில் நட்சத்திர வீராங்கனையாகத் திகழும் சாய்னா நேவாலைத்தான் தோற்கடித்தார். அப்போது சாய்னாவுக்கு 15 வயது.

2006-ல் நடைபெற்ற மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிக்கு இந்தியா தயாரானது. ஏற்கெனவே மணிக்கட்டு வலியுடன் இருந்த அபர்ணா, காமன்வெல்த் போட்டிக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மணிக்கட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு காமன்வெல்த் போட்டிக்குத் தயாரானார். அந்தத் தொடரில் தனிநபர் பிரிவில் அபர்ணாவால் சாதிக்க முடியவில்லை. ஆனால், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அந்தத் திருப்தியோடு நாடு திரும்பிய அவர், பாட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். மணிக்கட்டுக் காயம் தீவிரமடைந்ததால் இந்த முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஓய்வு பெறும்போது தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் அவர் இருந்தார்.

ஊக்க மருந்து சர்ச்சை

பத்தாண்டு பாட்மிண்டன் பயணத்தில் கரும்புள்ளியாகத் தோன்றும்வகையில் அபர்ணாவின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் 2000-ல் நடந்தது. அப்போது டெல்லியில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அபர்ணா ஊக்க மருந்து உட்கொண்டதாக முடிவுவந்தது. சளித் தொந்தரவுக்காக அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், ஊக்க மருந்து உட்கொண்டதாகத் தோற்றம் தந்து சர்ச்சையானது. ஆனால், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு அபர்ணாவுக்கு மூன்று மாதத் தடை விதித்தது. இதனால், அந்த ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஒரு நிகழ்வைத் தவிர அபர்ணா போபட்டின் பாட்மிண்டன் பயணம் சிறப்பாகவே இருந்தது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது 2005-ல் அபர்ணாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது 40 வயதாகும் அபர்ணா போபட் மும்பையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். இந்திய பாட்மிண்டன் லீக்கில் ‘மும்பை மாஸ்டர்ஸ்’ அணியின் பயிற்சியாளராகவும் அவ்வப்போது இருந்துவருகிறார்.

அபர்ணா அன்று பாட்மிண்டனில் பெற்ற ஒவ்வொரு வெற்றியும் இந்த விளையாட்டின்பால் பெண்களை ஈர்த்தது. பாட்மிண்டனில் பல வீராங்கனைகளுக்கும் வழிகாட்டியானார். இவரைப் பின்பற்றி ஏராளமான இளம் பெண்கள் பாட்மிண்டனில் காலடி எடுத்துவைத்தனர். அப்படி வந்த வீராங்கனைகள் மூலம் இன்று இந்திய பாட்மிண்டன் மகளிர் குழு உச்சத்தில் இருக்கிறது. அதற்கெல்லாம் விதையாக இருந்தவர் அபர்ணா போபட்!

(வருவார்கள் வெல்வார்கள்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x