Published : 20 May 2018 09:52 AM
Last Updated : 20 May 2018 09:52 AM
ஈராக்கில் செங்கொடி பறக்கவிட்ட முதல் பெண்
ஈராக்கின் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தத் தேர்தலில், ஈராக்கின் புனித நகரான நஜாபில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாப் அல் கதீப் எனும் பெண் வெற்றிபெற்றுள்ளார்.
அத்துடன், 2008-ல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராகக் காலணி வீசிய பெண் பத்திரிகையாளர் மும்தாஸ அல் செய்தி என்பவரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இஸ்லாமிய நாட்டில், அதுவும் அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்படும் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது ஆட்சியாளர்கள் மீதான மக்களின் வெறுப்பையும் எதிர்காலத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.
ரயில்களில் பெண்களுக்கான அபாய பொத்தான்
ரயிலில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் தொந்தரவுகளும் அதிகரித்துவருகின்றன. அதைக் கருத்தில்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வடகிழக்கு ரயில்வே முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக இரவு ரயில்களில் பெண் பாதுகாவலர்களை அனுப்பவும் பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதைத் தெரிவிப்பதற்கு ஆபத்தை உணர்த்தும் பொத்தான்களை ரயில் பெட்டிகளில் நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொத்தான், பெண்களால் எளிதில் இயக்கப்படும்வகையில் இருக்கைகளுக்கு அருகில் பொருத்தப்படும். இதை அழுத்தினால் அந்த ரயிலில் பாதுகாவலர்கள் அமர்ந்திருக்கும் பெட்டியில் ஒலியெழுப்பும். இனி, பெண்கள் பாதுகாப்புக்காக அவசர எண்ணையோ அபாயச் சங்கிலியையோ மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை.
கருக் கலைப்பால் பெண் மரணம்
சேலம் அருகில் இருக்கும் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் 23 வயதான லட்சுமி. நான்கு மாத கர்ப்பிணியான அவர், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பாலினம் கண்டறியும் சோதனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனைக்குப் பிறகு, லட்சுமியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். பெண் சிசு என்று தெரிந்ததும் தன் வயிற்றில் வளரும் கருவை லட்சுமி கலைக்கச் சொல்லியிருக்கிறார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர் உதவியோடு கரு கலைக்கப்பட்டது.
அப்போது நேர்ந்த அசாம்பாவிதத்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயக்கமடைந்த லட்சுமி, இறந்துவிட்டார். அந்த மருத்துவமனையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இதுபோன்ற கருக்கலைப்பு சம்பவங்கள் நடந்துவருவது பின்னர் தெரியவந்தது. வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவது சட்டப்படி தவறு. அதை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், பெண் கருக்கள் கலைக்கப்படுவதும் அதைச் சுமக்கும் தாய்மார்களின் உயிரிழப்பும் தொடர்கின்றன.
போலந்து ஓவியருக்கு மரியாதை
புகழ்பெற்றவர்களின் உருவப் படங்களை ரசனையோடு வரைந்து 1920-களில் உலகையே தன் பக்கம் திருப்பிய பெண் ஓவியர் தமரா டி லேம்பிக்கா. அவர் வரைந்த நிர்வாணச் சித்திரங்கள் புரட்சிகரமானவை. 1896 மே 16 அன்று போலந்தில் தமரா பிறந்தார். அவருடைய தந்தை ரஷ்யாவைச் சேர்ந்த யூத வழக்கறிஞர். முதல் உருவப் படத்தை தமரா வரைந்தபோது, அவருக்கு 10 வயது. ஓவியத்தின் மீதான தமராவின் காதல், இத்தாலியில் அவருடைய பாட்டியுடன் வசித்தபோது செழித்து வளர்ந்தது. அவருடைய பெற்றோரின் மணவாழ்வு முறிந்த பின், 1915-ல் தன் அத்தையைப் பார்க்க செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றுள்ளார்.
அங்கு ததேஸ் லாம்மிப் என்பவர் மேல் காதல்கொண்டவர், அதே ஆண்டில் அவரைத் திருமணமும் செய்துள்ளார். 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சி தமராவையும் அவருடைய கணவரையும் அகதிகளாக்கியது. அதன் பிறகு ஓவியத்தை முழுநேரத் தொழிலாகக்கொண்டு காலத்தால் மறையாத அற்புதமான ஓவியங்களை தமரா தீட்டினார். 1930-களில் அவரது படைப்புத் திறன் உச்சத்தில் ஜொலித்தது. 1980 மார்ச் 18 அன்று 81-வது வயதில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அவரது 120-வது பிறந்தநாள். அதைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு சிறப்பு டுடூலை கூகுள் வெளியிட்டது.
எண்ணமும் பேச்சும்: நாங்கள் சபிக்கப்பட்டவர்கள்
இந்தத் தலைமுறை நடிகைகள் சபிக்கப்பட்டவர்கள். ஹாலிவுட்டில் 40 வயதைத் தாண்டிய நடிகைகள்தாம் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. குஷ்பு, ரேவதி, நதியா போன்றோர் நாயகிகளாக இருந்தபோது பெண் கதாபாத்திரங்கள் வலுவாக இருந்தன. ஆனால், தற்போது நாயகிகள் நடனத்துக்கு மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். முன்னணி நட்சத்திர நடிகைகள் கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இயக்குநர்கள், நடிகைகளுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும். ‘அறம்’, ‘அருவி’ போன்ற படங்களைப் போல நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும்.
- ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT