Published : 09 Jun 2024 08:45 AM
Last Updated : 09 Jun 2024 08:45 AM

பெண்கள் 360 டிகிரி: வரலாற்று வெற்றி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பிரதிபலித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர் தனித்துக் கவனம் பெற்றுள்ளனர்.

குஜராத்தின் பனாஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஜெனிபென் தாகுர், குஜராத் மாநிலத்தில் வென்ற பாஜக அல்லாத ஒரே வேட்பாளர். கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் குஜராத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் நபர் என்கிற வரலாற்றையும் ஜெனிபென் படைத்திருக்கிறார். பனாஸ்கந்தா தொகுதியில்தான் இருபெரும் தேசியக் கட்சிகளின் சார்பில் இரண்டு பெண்கள் எதிரெதிர் அணியின்கீழ் போட்டியிட்டனர்.

அரசியல் அறிவியல் பட்டதாரியான ஜெனிபென், இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் பலம்வாய்ந்த மூத்தத் தலைவர்களைத் தோற்கடித்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரச் செலவுக்குக் கட்சியில் நிதியில்லை என்று காங்கிரஸ் தெரிவித்த பிறகு மக்களிடம் திரள் நிதி பெற்றுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெனிபென். “பனாஸ்கந்தா தொகுதி மக்கள் ஒவ்வொருவரிடமும் 111 ரூபாய் கேட்டோம். இந்த வெற்றி மக்களின் வெற்றி. தேர்தல் பிரச்சாரத்தில் ஜெனிபென்னோடு தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால், இந்தத் தொகுதி மக்கள் இருந்தனர்” எனப் பிரச்சாரத்தின்போது ஜெனிபென்னுடன் இருந்த தொண்டர் ஒருவர் தெரிவித்ததாக ‘தி பிரின்ட்’ செய்தி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. தான் போட்டியிட்ட தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தது, அந்த மக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்திய ஜெனிபென்னின் செயலும் வெற்றிக்குக் காரணம். அதனால்தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வாக்குகள் ஜெனிபென்னுக்கு அதிகமாகக் கிடைத்தன.

முதல் அதிபர்

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மெக்சிகோ நகர மேயராக ஐந்து முறை பதவி வகித்த இவர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2023இல் மேயர் பதவியில் இருந்து விலகினார்.

கிளாடியா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுற்றுச்சூழல் பொறியாளராகவும் ஐ.நா.வின் பருவநிலை விஞ்ஞானிகள் குழுவிலும் பணியாற்றியுள்ளார். இடதுசாரி சிந்தனை கொண்ட இவர் சமூக நீதிக்கான தேடல் கொண்டவர். சட்ட விரோதக் குடியேற்றம், போதைப்பொருள்களும் துப்பாக்கிகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாவது, ஊதிய வரையறை - ஓய்வூதியம் உள்ளிட்ட முன்னாள் அதிபரின் பொருளாதாரக் கொள்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவை கிளாடியா முன் இருக்கும் பெரிய சவால்கள். மெக்சிகோ நகர மேயராக அவர் இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டதைப் போலவே இந்தச் சிக்கல்களையும் சமாளிப்பார் என்று கிளாடியாவின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

- க்ருஷ்ணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x