Published : 01 Apr 2018 11:19 AM
Last Updated : 01 Apr 2018 11:19 AM
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி, அதீத ரத்தப்போக்கு, உடல் சோர்வு ஆகிய பிரச்சினைகளைச் சமாளித்துக்கொண்டு அன்றாடப் பணிகளை எப்பாடுபட்டாவது பெண்கள் செய்து முடிப்பார்கள். ஆனால், மெனோபாஸ் பருவத்தில் ஹார்மோன் குறைபாடு காரணமாக உருவாகும் ‘ஹாட் ஃபிளாஷ்’ (Hot Flashes) பெண்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினை 45 வயது முதல் 55 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது நோயல்ல
ஹாட் ஃபிளாஷ் என்பது நோயல்ல. பெண்களுக்கு வயதாகும் காரணத்தால் கருப்பையினுள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவாகச் சுரக்கும். இந்த ஹார்மோன் குறைபாடு காரணமாகப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைதான் ‘ஹாட் ஃபிளாஷ்’.
பொதுவாக மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் இருக்கும். இந்த மெனோபாஸ் பருவத்தில்தான் பல பெண்களுக்கு ‘ஹாட் ஃபிளாஷ்’ எனும் பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு மெனோபாஸ் முடிவுக்கு வந்ததில் இருந்து ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள்வரையோ இதன் பாதிப்பு தொடரக்கூடும்.
இந்த பாதிப்பின்போது உள்ளங்கை, கழுத்து, மார்பின் மேல் பகுதி, கால் பாதம் ஆகிய பகுதிகளில் உஷ்ணம் அதிகரித்து வியர்த்துக் கொட்டுவதோடு காலும் மரத்துப்போகும். அந்த நேரத்தில் பெண்கள் படபடப்பாக இருப்பார்கள். நெருப்பின் மீது நிற்பதைப் போலவோ பச்சை மிளகாயை உடலில் தேய்த்தது போலவோ உடலில் உஷ்ணம் இருக்கும். அதனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் அவதிப்படுவார்கள். இந்த உடல் உஷ்ணம் பெண்களின் உடல் தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஆனால், இதுபோன்ற அறிகுறிகள் அனைத்துப் பெண்களுக்கும் இருக்காது.
“ஹாட் ஃபிளாஷ் காரணமாக அவதியுறும் பெண்கள் தண்ணீரையோ ஐஸ்பேக்கையோ பயன்படுத்தி அதன் பாதிப்பைச் சற்று தணித்துக்கொள்ளலாம். அதேபோல் உஷ்ணம் அதிகரிக்கும்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, வெளியே விட வேண்டும். அடர்த்தியான துணிகளுக்கு பதில் லேசான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்” என்கிறார் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா.
பரிசோதனை அவசியம்
நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் ‘ஹாட் ஃபிளாஷ்’ஷின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். “இது போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் மெனோபாஸ் பருவத்தின் அறிகுறி தெரிந்தவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் மாரடைப்பு ஏற்படும்போதும் அதிகமாக வியர்த்துக்கொட்டுவது, மூச்சு வாங்குவதுபோல் இருக்கும். முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள முடியாதவர்கள் குறைந்தபட்சம் ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. ஆகியவற்றை எடுத்துப் பார்த்துக்கொள்வது நல்லது. மேலும், மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக எலும்புத் தேய்மானமும் உருவாகக் கூடும். இதனால் மாதவிடாய் நிற்கும் நேரத்தில் பெண்கள் கீழே விழாமல் கவனமாக இருக்க வேண்டும். எலும்புத் தேய்மானத்தைச் சரிசெய்ய மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் மருத்துவர் அனுரத்னா.
சிகிச்சை முறைகள்
“பொதுவாக ‘ஹாட் ஃபிளாஷ்’ மெனோபாஸ் முடிந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் தானாகவே சரியாகிவிடும். எனவே, அதன் பாதிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் சிகிச்சைஅளிப்பார்கள். ஆனால், மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகுதான் இந்தச் சிகிச்சையை அளிக்க முடியும். ஏனென்றால், மாதவிடாய் நிற்பதற்கு முன்பே ஹார்மோன் தெரபி கொடுத்தால், மீண்டும் பழைய மாதிரி மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் வரத் தொடங்கிவிடும். இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் உண்டு என்பதால் இந்த தெரபி எடுத்துக்கொள்ளும்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். பெண்கள் அவ்வப்போது சுயமாகவும் மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இந்த ஹார்மோன் தெரபியை ஒரு வருடம் முதல் இரண்டு வருடம்வரை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் பெண்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் உண்டாகும். அதிக மன அழுத்தம், அதிக அளவு உடல் உஷ்ணத்தை உண்டாக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்” என்கிறார் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பொதுநல மருத்துவர் அபூர்வா.
அனுசரணையே ஆறுதல்
‘ஹாட் ஃபிளாஷ்’ காரணமாக உடல் உஷ்ணம் அதிகரிப்பதற்கு உணவுப் பழக்கமும் முக்கியக் காரணம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு சில உணவு வகைகள்கூட உடல் உஷ்ணத்தை அதிகரித்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உதிரப்போக்கு ஏற்படும்போது மட்டுமல்லாமல் உதிரப்போக்கு இல்லாத நேரத்திலும் ‘ஹாட் ஃபிளாஷ்’ வரும். குறிப்பாக சமையல் செய்யும்போதும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போதும் டென்ஷனாக இருக்கும்போதும் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அதேபோல் ஒரு சிலருக்கு காபி குடித்த அடுத்த நிமிடமே உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சிலருக்கு சிக்கன், மட்டன் போன்ற உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டாலும் ‘ஹாட் ஃபிளாஷ்’ உண்டாகும். நாம் எந்த உணவைச் சாப்பிடும்போது உஷ்ணம் அதிகரிக்கிறது என்பதைக் கவனித்து அதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
“மெனோபாஸ் பருவத்தில் பெண்கள் நீர்ச்சத்துள்ள பழங்களையும் காய்கறி களையும் முக்கியமாக ஈஸ்ட்ரோஜன் சத்து நிறைந்த சோயா பாலையும் சோயா பீன்ஸையும் சாப்பிடுவது உஷ்ணத்தைக் குறைக்கும்” என்கிறார் மருத்துவர் அபூர்வா.
மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் நிலையைப் புரிந்துகொண்டு குடும்பத்தினர் அனுசரணையாக அன்புடன் அரவணைத்துச்செல்ல வேண்டும். அனுசரணையுடன் கூடிய அன்பைவிடப் பெரிய ஆறுதல் இருக்க முடியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT