Published : 21 Apr 2014 01:36 PM
Last Updated : 21 Apr 2014 01:36 PM
இவர் லட்சாதிபதி அல்ல, ஆனால் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தவர். மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத்தில், சுமார் 450 ஏக்கருக்கும் அதிகமான சாகுபடி செய்யத்தக்க நிலப்பரப்பிற்குச் சொந்தமான குடும்பத்தின் மூத்த மகனான டாக்டர் பாபா ஆம்தே என்று அழைக்கப்படும் முரளிதர் தேவதாஸ் ஆம்தேயின் மருமகள்தான் மந்தாகினி பிரகாஷ் ஆம்தே.
டாக்டர் பாபா ஆம்தேவிற்கு அறிமுகமே தேவையில்லை. அவர் ஒரு மருத்துவர், வழக்கறிஞர், சுதந்திரப்போராட்ட வீரர், சமூக நல நோக்குடைய பெரும் செயல் வீரர். பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகவும் அவர்களின் துயர் துடைப்பிற்காகவும், அவர்கள் வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டவர் பாபா ஆம்தே. அவருடைய மூத்த மகன் பிரகாஷ் ஆம்தேயும் டாக்டர் மந்தாகினியும் நாக்பூர் மருத்துவக் கல்லூரியில் படித்தார்கள். நாக்பூரில் பிறந்த மந்தாகினி, எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பின் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) பிரிவில் ஓராண்டு டிப்ளோமா பட்டமும் பெற்றார்.
டாக்டர் மந்தாகினி, நோயாளி ஒருவருக்கு அனஸ்தீஷியா செலுத்திக்கொண்டிருந்த சமயத்தில் அதே நோயாளிக்கு, அவருடைய ஜூனியர் டாக்டர் ஒருவர் அறுவைசிகிச்சை செய்துகொண்டிருந்தார். அந்த ஜூனியர் டாக்டர்தான் பிரகாஷ். அந்தத் தருணத்தில்தான் மந்தாகினி - பிரகாஷ் ஆம்தேயின் காதல் மலர்ந்தது. 1972-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது.
இன்று இந்த டாக்டர் தம்பதியின் பெயரே பல நோயாளிகளுக்கு அருமருந்தாக மாறியுள்ளது.
டாக்டர் பட்டம் கிடைத்த பின்னர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மனிதகுல நலனுக்காகச் சேவை செய்ய விரும்புவதாய் பிரகாஷ் கூறியதுமே, அவரோடு தோளோடு தோள் கொடுத்துத் தானும் தொண்டுசெய்யத் தயார் என்று மந்தாகினியும் உறுதியளித்தார். காட்டுப் பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடி இனத்தவர்களின் நலவாழ்விற்காகத் தங்களின் மருத்துவ படிப்பு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற மன உறுதியுடன் இந்தத் தம்பதியினர்களத்தில் இறங்கினர்.
ஒரு காட்டில் வசிப்பது எப்படி இருக்கும் என்பது பற்றித் தனக்கு அப்போது எதுவுமே தெரியாது என்கிறார் ‘மந்தா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் மந்தாகினி. டாக்டர் படிப்பு முடிந்தபின் அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவில் அநேகமாக அனைவருமே வெளிநாடு செல்லத் துடித்துக்கொண்டிருந்தார்கள். டாக்டர் மந்தாவுக்கும்கூட, அயல்நாட்டு மோகத்தை உதறித்தள்ளுவது என்பது சற்றுக் கடினமாகவே இருந்தது. என்றாலும் அந்த எண்ணத்தை அவர் கைவிட்டுவிட்டார்.
20 ஆண்டுகளுக்குமேல் மந்தாகினியும் பிரகாஷும் ஏறத்தாழ நூறு சதுரமைல் பரப்புக்கு மட்டுமே வைத்திய உதவி அளித்துவந்தனர். ஆனால், இன்றோ இந்த தம்பதியின் மருத்துவ உதவி, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பரந்து விரிந்துள்ளது. அரசாங்கத்தின் எத்தனையோ பல உடல்நல மையங்கள், இன்று தொடக்கப்பட்டுவிட்ட போதிலும், பழங்குடி மக்கள் பலரும் இன்றும் டாக்டர் மந்தா - பிரகாஷ் தம்பதி மீது வைத்துள்ள நம்பிக்கையும் பாசமும் கொஞ்சமும் குறையவே இல்லை.
ஒரு முறை ஒரு பழங்குடிப் பெண்ணைக் காட்டு விலங்கு தாக்கிவிட்டது. பாதிக்கப்பட்ட அப்பெண், தன்னந்தனியே சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தது மட்டுமல்லாமல், துண்டிக்கப்பட்ட தனது சிறுகுடலை ஒரு துண்டுத் துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு மந்தாவிடம் சிகிச்சைக்காகச் சென்றாள். மந்தாகினியும் அந்தப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளித்து உதவியதால் அவள் உயிர் பிழைத்தாள்.
63 வயதாகும் டாக்டர் மந்தாகினிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளபோதிலும், இன்றும் சமுதாயத்தினாலும், அரசாங்கத்தினாலும் கவனிக்காமல் புறக்கணிக்கப் பட்டுள்ள பழங்குடி மக்களின் மனவலியையும் வேதனைகளையும் தணித்துத் துடைக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டுவருகிறார்.
63 வயதாகும் டாக்டர் மந்தாகினிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளபோதிலும், இன்றும் சமுதாயத்தினாலும், அரசாங்கத்தினாலும் கவனிக்காமல் புறக்கணிக்கப் பட்டுள்ள பழங்குடி மக்களின் மனவலியையும் வேதனைகளையும் தணித்துத் துடைக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டுவருகிறார்.
தங்களின் கல்வித் திட்டங்கள் மூலம் நிறுவப்பட்ட பள்ளிக்கூடங்களில் கல்விகற்று, பின்னர் தங்களின் பழங்குடி சமூகத்துக்கு உதவி செய்வதற்கென்றே திரும்பிவந்துள்ள, அந்தப் பழங்குடியின மாணவ மணிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பதில்தான் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுவதாக மந்தாகினி குறிப்பிடுகிறார்.
இமயமலையில் ருத்ரப் ப்ரயாகிலிருந்து ஜீவநதியாகப் பாயும் கங்கை ஆற்றின் ஒரு உபநதியின் பெயர்தான் மந்தாகினி. அந்தப் பெயரைக் கொண்ட இந்தப் பெண்மணி, பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி புகட்ட விரும்புகிறார். காரணம், ஒரு பெண்ணுக்குக் கல்வியறிவு புகட்டினால் ஒரு குடும்பம் முழுவதற்குமே கல்வியறிவை ஊட்டுவதற்கு அது இணையாகிறது என்கிறார்.
ஒரு தாயாகவும், ஏறத்தாழ ஐந்து லட்சம் பேருக்கு ஓயாமல் ஒழியாமல் மருத்துவ வசதி அளித்துள்ள ஒரு டாக்டராகவும், ஒரு சமூக சேவகியாகவும், கல்வியாளராகவும் இன்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறார் மந்தாகினி ஆம்தே.
தன் கணவருடன் சேர்ந்து, மொனாக்கோ என்ற நாட்டின் தபால் தலையை அலங்கரித்த ஒரே இந்தியப் பெண்மணி டாக்டர் மந்தாகினி ஆம்தேதான். ராமன் மக்சசே விருதுவென்ற மகாராஷ்டிராவின் முதன் முதல் பெண்மணி என்ற முறையில், கோல்டன் மகாராஷ்ட்ரா விருது பெற்ற மந்தாகினி ஆம்தேயின் குடும்பத்தில் டாக்டர்களுக்குப் பஞ்சமேயில்லை. இவருடைய இரண்டு மகன்களும் டாக்டர்கள். அவர்களுடைய மனைவிகளும் மருத்துவர்கள்தான்.
மந்தாகினி - பிரகாஷ் தம்பதியின் தொண்டுகள், பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்த்தன. இவர்களுடைய சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் ராமன் மக்சசே விருது.
“நாங்கள் இதை எதிபார்க்கவில்லை. அதிக ஆரவாரமில்லாமல், ஓசைப்படாமல், விளம்பரம் ஏதுமின்றி சேவை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த 34 ஆண்டுகளாய் தங்களை இந்த சமூகநலத் தொண்டுக்காகவே அர்ப்பணித்துள்ள எங்கள் தொண்டர்களின் சார்பில் இந்த விருதை ஏற்றுக்கொண்டோம்” என்கிறார் மந்தாகினி.
“இந்த விருதுகளின் மிக முக்கிய அம்சம், இவை மூலம் கிடைக்கும் பணம்தான். இந்தப் பணம் அனைத்துமே, பழங்குடி மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள், அந்த இனத்தவர்களுக்கான மருத்துவமனைகள் போன்ற நற்காரியங்களுக்காகவே செலவிடப்படுகின்றன” என்கிறார் அவர்.
ஹேமல்கஸா பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய டாக்டர் பாபா ஆம்தேயின் ஆர்வமும் துடிப்பும்தான் மந்தாகினி - பிரகாஷ் தம்பதி, இப்பணியில் மிகுந்த முனைப்புடன் பணியாற்ற வித்திட்டன. இவர்கள் விருது பெற்ற விவரமும் இவர்களது பணிகளும் மீடியாவில் வந்த பிறகு இப்பகுதிகளுக்குப் பலர் நேரில் சென்றார்கள். அவர்களில் பலரும் இப்பணிக்காக நன்கொடை வழங்கினார்கள்.
ஹேமல்கஸா பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய டாக்டர் பாபா ஆம்தேயின் ஆர்வமும் துடிப்பும்தான் மந்தாகினி - பிரகாஷ் தம்பதி, இப்பணியில் மிகுந்த முனைப்புடன் பணியாற்றவித்திட்டன. இவர்கள் விருது பெற்ற விவரமும் இவர்களது பணிகளும் மீடியாவில் வந்த பிறகு இப்பகுதிகளுக்குப் பலர் நேரில் சென்றார்கள். அவர்களில் பலரும் இப்பணிக்காக நன்கொடை வழங்கினார்கள்.
பழங்குடியினர்களுக்குச் சேவைபுரியவே தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்துக்கொண்ட இளம் தியாகிகளின் தொண்டர்கள் குழு ஒன்றினை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களது மூத்த மகனும் அவர் மனைவியும் கடந்த ஐந்து ஆண்டுகளாய் கிராம மருத்துவமனைகளில்தான் பணியாற்றிவருகிறார்கள்.
“அடிமட்ட நிலையிலான யதார்த்தங்களை, இன்றைய இளம்தலைமுறையினர் நேரில் பார்த்து உணர்ந்திட்டால், அதுவே மக்களுக்குச் சேவைசெய்யும் விருப்பத்தை ஊக்குவிக்கும்” என்பது மந்தாகினியின் உறுதியான கருத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT