Published : 15 Apr 2018 12:51 PM
Last Updated : 15 Apr 2018 12:51 PM

எசப்பாட்டு 31: ஆண்கள் சும்மா இருக்கக் கூடாதா?

 

“இ

வ்ளோ பேசறீங்கல்ல சார்… வேலை பார்க்கிற ஒரு பொண்ணு, வேலை இல்லாத பையனைக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்தத் தயாரான்னு கேட்டுச் சொல்லுங்க பார்ப்போம்”

எதிர்பார்த்தபடியே ஆண்கள் தரப்பிலிருந்து பலத்த கரவொலி எழுந்து இக்கேள்வியை ஆமோதித்தது.

“சோறு பொங்கிப்போடற ஒரு திறனைத் தவிர வேற ஒரு மண்ணும் தெரியாத பொண்ணைக் கல்யாணம் பண்ணி, அவளைப் பாதுகாத்து, வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்து, ஸ்கூட்டர்ல பின்னாடி உட்கார வச்சி வாரம் தவறாம எங்கியாச்சும் கூட்டிட்டுப் போய் அப்பப்பா… இவ்வளவும் செஞ்சாலும் ஆணுக்கு நல்ல பேர் கிடையாது. ஆனா, அவுங்க எதுவுமே செய்ய வேண்டியதில்லை. வயதுக்கு வந்தாச்சுன்னு வீட்டில் உட்கார்ந்துவிட்டால் போதும். ஒரு பையன் தலையிலே கட்டுறவரைக்கும் அப்பா சுமப்பார். அப்புறம் அந்தப் பையன் சுமப்பான். இவுங்க ஜம்பமா உட்கார்ந்த இடத்திலே இருந்துட்டு ஆர்டர் போட்டுட்டு இருக்கலாம். என்ன ஜாலியான வாழ்க்கை. பொறந்தா பொண்ணா பொறக்கணும் சார்.” - இவ்வளவு மனக்குமுறல்களும், ஆரம்பத்தில் கேட்ட ஒற்றைக் கேள்விக்குள் அடங்கியிருக்கின்றன.

உத்தியோகம் ‘புருஷ’ லட்சணமா?

பருவட்டாகப் பார்த்தால் இது நியாயமான கேள்விதானே என்று தோன்றும். வேலையில்லாத பையனை அவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் திருமணம் செய்துகொள்ள எந்தப் பெண்ணும் சம்மதிப்பதில்லைதான். ஆணின் சம்பளத்தில் குடும்பம் நடப்பதைப் போல ஒரு பெண்ணின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தவும் அந்த வீட்டில் ஆண் ‘சும்மா’ இருக்கவும் நம் பெண்களும் நம் குடும்பங்களும் நம் சமூகமும் ஏன் ஒப்புக்கொள்வதில்லை?

சமீபத்தில் என் உறவுக்காரப் பெண் ஒருத்திக்கு ஒரு வரன் வந்தது. அவள், தனியார் பள்ளி ஆசிரியை. பையன், தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக இருந்தான். நல்ல குணமான பையன். நல்ல குடும்பம். வரதட்சிணை கேட்கவில்லை. கல்யாணச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். ஆனாலும் அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று அவள் சொல்லிவிட்டாள்.

ஐ.டி. துறை, பத்திரிகைத் துறை, பல தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் எப்போது வேலை பறிபோகும் என்பது தெரியாது. கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவர் சில காலம் வேலையில்லாமல் இருக்க வேண்டிய சூழல் அவ்வப்போது வந்துவிடுகிறது. அப்போதெல்லாம் மனைவி சம்பளத்தில் குடும்பம் நடக்கத்தான் செய்கிறது. இது பற்றிய குற்றவுணர்வு ஏதும் கணவருக்கு வந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடும் பெண்கள் நடந்துகொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

நெற்றி ரொம்பவும் மேலேறி விட்டது. கண்கள்கூட உள்ளே போய்த்தான் இருக்கின்றன. ஒரு வாரத்துக்கு முன்பு அவன் மனைவியே சொன்னாள்.

“ஏன் இப்படி இருக்கீங்க?”

“எப்படி?”

“கண்ணாடில முகத்தைப் பாருங்க தெரியும். வேலைக்குப் போகலைன்னா இப்படித்தான் இருக்கணுமா?”

இருவரும் பேசாமல் இருப்பார்கள். அவனுக்கு வேலை போய் ஆறு மாதத்துக்குள்தான் இருக்கும். எப்போதும் அவன் நிரந்தரமாக வேலை பார்த்தது இல்லை. எல்லா வேலைகளும் அவன் மெலிந்த திரேகத்துக்கு ஒத்துவருவதில்லை. ஹோட்டலில் பில் போடும் வேலையைத்தான் பெரும்பாலும் பார்த்துவந்தான்.

அவள், கல்யாணமான போதிருந்தே வேலைக்குச் செல்கிறாள். கலர் கலராக வெட்டுத்துணிகள் நிறைந்து கிடக்கும் நீண்ட தாழ்வாரத்தின் கீழ் தையல் மிஷின் ஓடிய படியிருக்கும்.

(எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பரிவானது வீடு’ சிறுகதையிலிருந்து)

எதிர்காலம் குறித்த அச்சம்

15CHBRI_WORKING_WOMEN.2100 

கல்யாணப் பேச்சு தொடங்கும் கட்டத்தில் மாப்பிள்ளை வேலையில் இருக்க வேண்டும் என்பதைத்தான் பெண் விரும்புகிறாள். தன் சம்பளம் போதுமே, அவருக்கு வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று யாரும் கழுத்தை நீட்டுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை இது.

உழைக்கும் வர்க்கப் பெண்களிடம் இந்தப் பிரச்சினை குறைவு. இருவரும் அன்றாடம் வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்ற யதார்த்தம் அவர்களை உந்தித் தள்ளிக்கொண்டு போய்விடுகிறது. அந்தக் குடும்பங்களிலும் இன்று சாராயம் புகுந்து நிலைகுலையச் செய்துவருகிறது. குடிப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகிவருகிறது. அவனுக்கும் சேர்த்து உழைத்துக் கஞ்சி ஊத்தும் பெண்கள் அதிகம். “குடிக்க வேணாம்ணு சொல்லலை. அளவா குடி” என்ற எளிய கோரிக்கையோடு அந்தப் பெண்கள் கணவன்மார்களைப் பராமரிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையை ஆணுரிமைவாதிகள் அணுகுவதைப் போல பெண்களின் குணக்கேட்டுக்கும் ஆண்களின் பெருந்தன்மைக்கும் இருக்கிற வித்தியாசமாகச் சுருக்கிப் பார்ப்பது பார்வையற்றோர் யானையைத் தடவிப் பார்த்த கதையாகத்தான் அமையும்.

அரசின் கள்ள மவுனம்

மேலே குறிப்பிட்ட தனியார் பள்ளி ஆசிரியை, அரசுப் பள்ளி ஆசிரியராக நிரந்தரமான சம்பளத்தில் இருந்திருந்தால் அந்த லேப் டெக்னீசியனை மணக்கச் சம்மதித்திருப்பாள் என்றே நம்புகிறேன். சில பெண்கள் அரசு வேலையில் இருக்கிற மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அடம்பிடிப்பதையும் பார்த்திருக்கிறேன். இங்கு பெண்கள் மனதில் இருக்கும் உணர்வு எதிர்கால வாழ்வுக்கான உத்தரவாதம் பற்றியதுதான். அரசு வேலை என்றால் வயதான காலத்தில் பென்ஷன் வரும் என்பதே இந்த உணர்வின் அடிப்படை. இன்று அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளால் பென்ஷன் என்பதே கேள்விக்குறியாகிவிட்ட பின்னணியில் மனக்குழப்பம் இன்னும் அதிகமாகிறது.

இது ஆண் – பெண் இருவர் மட்டும் சம்பந்தப்பட்ட கதையல்ல. அரசு, சமூகம் என்ற மூன்றாவது கதாபாத்திரத்துக்கு இந்தக் கதையில் முக்கியமான பங்கு இருக்கிறது. உரிய வயதில் வேலை கொடுக்கும் பொறுப்பையும் வயதான காலத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கடமையையும் உதறித் தள்ளுகிற அரசுகள், நம் கதைகளில் வில்லன்களாகி நிற்பதை நாம் அறியவில்லை இதை ஆண், பெண் பிரச்சினையாக மட்டும் பார்த்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அரசு நிம்மதிப் பெருமூச்சுடனும் கள்ளப் புன்னகையுடனும் நம் வாத - பிரதிவாதங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இருவரும் மாற வேண்டும்

shutterstock594838226100

‘பெண் வேலைக்குப் போக - ஆண் வீட்டில் சும்மா இருக்க’ என்ற வாதத்தில் இன்னொரு அபத்தமும் பொதிந்திருக்கிறது. குடும்பத்தின் மிக முக்கியமான கடமையான மனித குல மறுஉற்பத்தி என்னும் கடமை எப்படியும் பெண் மீதுதானே விழும். ஆண் ‘சும்மா’ இருப்பதைப் போலவா பெண் ‘சும்மா’ இருக்கிறாள்?

இவை ஒரு புறம் இருக்க, ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பது போன்ற புழுக்கைப் பழமொழிகளும் பண்பாட்டுக்கூறுகள் பலவும் இக்கதையில் மையச்சரடாக ஊடறுத்து ஓடிக்கொண்டிருப்பது பற்றிய அறியாமையே இது போன்ற அபத்தக் கேள்விகளின் அடிப்படையாக அமைகின்றன.

சமூக நிலைமை இன்று வேலைக்கு உத்தரவாதமற்ற தன்மையில் இருப்பதைப் புரிந்துகொண்டு, பெண்கள் தங்கள் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முன்வரவேண்டியதும் அவசியம். சட்டி பானை கழுவுவது உள்ளிட்ட அனைத்து வகையான ‘இழிதொழில்’ களையும் பெண்களைப் போலவே மகிழ்ச்சியுடனும் தம் கடமை என மனதார ஏற்றும் செய்ய ஆண்கள் தயாராக வேண்டும். பிரசவ காலத்தில் பெண்ணின் தாயாகக் கணவன் மாற வேண்டும். அப்போது கேட்கலாம் இந்தக் கேள்வியை.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x