Published : 15 Apr 2018 12:49 PM
Last Updated : 15 Apr 2018 12:49 PM
மா
ப்பிள்ளை வீட்டார்தான் வீடு தேடி வருவார்கள். ‘எங்க வீட்டுக்கு உங்க வீட்டுப் பெண்ணை, மகாலக்ஷ்மியாக அனுப்பிவைக்க சம்மதமா?’ என்று கேட்பார்கள். ஏற்கெனவே ஜாதகம் பார்த்து, பொருத்தம் அமைந்துவிட்டால் இப்படியொரு வார்த்தையைக் கேட்டு, அடுத்தகட்ட நிகழ்வுகளுக்குள் செல்வதுதான் தேவர் சமூகத்து மக்களின் வழக்கம்.
ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலிருந்தே இருதரப்பிலும் நாயகனும் நாயகியுமாக இருப்பவர்கள் யார் தெரியுமா? மணமக்களின் தாய்மாமாவும் மாமியும்தான்!
பெண்ணின் மாமாவும் மாமியும் இருக்க, மணமகனின் பெற்றோர், பிள்ளையின் மாமாவுடனும் மாமியுடனும் வருவார்கள். நடுநாயகமாக அமர்ந்து பேச்சைத் தொடங்குவார்கள். குடும்பம், சொத்து பத்து, சொந்த பந்தம், படிப்பு, வேலை, சம்பளம், பழக்கவழக்கம் என சகலத்தையும் பற்றிப் பேசுவார்கள்.
சீதனம் குறித்தும் நகைகள் குறித்தும் ஆரம்பத்திலேயே சரிவரப் பேசிவிடுவார்கள். ‘இது வேணும், அதைக் கொடுங்கள்’ என்பதையெல்லாம் தாண்டி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி சீதனம் செய்வார்கள்.
பூவைத்தல்
நிச்சயதார்த்தத்துக்கு முன்னதாக இரண்டு வீட்டு தாய்மாமாக்கள் முன்னிலையில் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்கள் ஆகியவற்றை வைத்துத் திருமணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். ஒப்புக்குத் தாம்பூலம் போலத்தான் இது என்றாலும் பூவைத்தல் என்றே சொல்கிறார்கள்.
நிச்சயதார்த்தப் பெருவிழா, பெண் வீட்டில் நடைபெறுகிறது. அப்போதும் தாய்மாமாக்களும் மாமிகளுமே முக்கிய இடம் வகிக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்ணுக்குப் பட்டுச் சேலை, 21 தட்டுகள் கொண்ட சீர்வரிசை, நகைகள் போன்றவை வழங்கப்படும். அதேபோல் மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் பட்டுவேஷ்டி - சட்டை, தங்கச் சங்கிலி, மோதிரம் போன்றவற்றை வழங்குவார்கள்.
அப்போது பெண்ணுடைய கழுத்தில் அவருடைய தாய்மாமா முதல் மாலையை அணிவிப்பார். அடுத்த மாலை மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருக்கும். அதேபோல் மாப்பிள்ளைக்கு அவருடைய தாய்மாமா மாலை அணிவிப்பார். தேவர் வீட்டு நிச்சயதார்த்தம், கல்யாணத்தைப்போல், ஜாம் ஜாமென்று பிரமாண்டமாக நடக்கிறது.
குலசாமியே காப்பாத்து!
நிச்சயதார்த்தத்தின் போதோ அடுத்தடுத்த நாளிலோ திருமணத் தேதி உறுதி செய்யப்படும். பெண் வீட்டார் சொல்லும் தேதியை உத்தேசித்துதான் திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது. பத்திரிகை அடித்ததும் கையோடு குலசாமி கோயிலுக்குச் சென்று பத்திரிகை, தாலி ஆகியவற்றை வைத்து வழிபடுகிறார்கள். அதேபோல் மாப்பிள்ளை வீட்டாரும் அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்கின்றனர். அதன் பிறகு, முதல் பத்திரிகையை இருதரப்பு தாய்மாமாக்களுக்கு வழங்குகின்றனர்.
பெண்ணாக்குதல்
வழக்கம்போல் திருமணத்துக்கு மூன்று அல்லது ஐந்து நாட்கள் இருக்கும்போது, வீட்டில் பந்தக்கால் நடும் விழா, சடங்கு சாங்கியங்களுடன் நடக்கிறது. அப்போது ‘பெண்ணாக்குதல்’ எனும் சடங்கை தாய்மாமாவும் மாமியும் சேர்ந்து செய்வார்கள். அன்றைக்கான உணவு செலவும் சில ஊர்களில் தாய்மாமாவே ஏற்றுக்கொள்கிறார். சுமங்கலிகள் ஒன்று சேர்ந்து, நவதானியங்கள் இட்டு, பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து நடுவார்கள்.
இதேபோல் மாப்பிள்ளை வீட்டிலும் பந்தக்கால் வைபவம் அந்த வீட்டு சுமங்கலிகளைக் கொண்டு, தாய்மாமா, மாமி, சொந்த பந்தங்கள் முன்னிலையில் நடக்கிறது. அப்போது, மணமகனுக்கு ‘மாப்பிள்ளையாக்குதல்’ எனும் நலங்குச் சடங்கு நடக்கும்.
மணமகளே வா வா...
பெண் வீட்டுச் செலவு, இரு தரப்புச் செலவு என்று திருமணம் செய்வது வழக்கம். திருமணத்துக்கு முதல் நாள், மாப்பிள்ளையின் சகோதரியும் சில உறவினர்களும் பெண்வீட்டுக்குச் சென்று மணமகளை அழைத்து வருவார்கள். அப்போது, நிச்சயதார்த்தத்தின்போது வழங்கிய பட்டுப்புடவையைப் பெண் அணிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல் மாப்பிள்ளையும் நிச்சயதார்த்தத்தின் போது வழங்கிய ஆடையை அணிந்திருக்க, பெண்ணின் சகோதரர் அதாவது மாப்பிள்ளையின் மைத்துனர் வீட்டுக்கு வந்து, வரவேற்று அழைத்துக்கொண்டு மண்டபத்துக்கு வருவார். அப்போது மாப்பிள்ளைக்கு வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதெல்லாம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இந்தத் தருணங்களில் அரிசி, ஒன்பது தேங்காய், பழங்கள், இனிப்பு, வெற்றிலை, பாக்கு போன்றவை பெண்ணுக்கு வழங்கப்படும்.
அந்த ஐந்து பேர்
மணநாளன்று காலை வேளையில் பெண், பெண்ணுடைய அப்பா, அம்மா, மாமா, மாமி ஆகியோர் ஒரு பக்கம் மணமேடையில் இருப்பார்கள். அடுத்ததாக மாப்பிள்ளை, அவருடைய அப்பா, அம்மா, மாமா, மாமி ஆகியோர் அமர்ந்திருக்க, புரோகிதர் தனித்தனியே சில மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார். சடங்கு சாங்கியங்களைச் செய்துகொண்டிருப்பார். அப்போது சந்தன, குங்கும மரியாதையோடு மாப்பிள்ளைக்கு கல்யாண ஆடைகள், செயின், மோதிரம் போன்றவை வழங்கப்படும். அதேபோல் பெண்ணுக்குப் புடவை, நகைகள் முதலானவை வழங்கப்படும். இருதரப்பினருக்கும் சந்தனம் பூசி மரியாதை செய்வார்கள்.
திருப்பூட்டுதல்
மந்திரங்கள் ஒலிக்க, ஹோமப்புகை சூழ்ந்திருக்க, மண்டபம் முழுவதும் உறவினர்களும் நண்பர்களும் நிறைந்திருக்க பெண்ணின் கைப்பிடித்து, மாப்பிள்ளையின் கையில் ஒப்படைத்துத் தாரைவார்ப்பார் பெண்ணுடைய அப்பா. பால் முதலான பஞ்சகவ்யங்களைக் கொண்டு சுத்தப்படுத்துவார் புரோகிதர்.
தாரைவார்ப்புக்குப் பிறகு, கெட்டிமேளம் முழங்க, மாங்கல்ய மந்திரங்களைச் சொல்ல, முப்பத்து முக்கோடி தேவர்களும் சூட்சும வடிவில் வந்து ஆசீர்வதிக்க, எல்லோரும் அட்சதை தூவ, திருப்பூட்டுதல் எனும் மாங்கல்யதாரணம் அற்புதமாக நடந்தேறும்.
பால் பழம் கொடுத்து வரவேற்பு, நகைகள், பரிசுப்பொருட்கள் வழங்குதல், பெரியோரிடம் ஆசி என விழா களைகட்டும்.
வெள்ளிக்கிழமையன்று திருமணம் எனில், அன்றைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்ணை அனுப்பமாட்டார்கள். ‘வூட்டுக்குப் பொறந்த மகாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமை அதுவுமா அனுப்பறதா... வேணாமப்பு’ என்பார்கள். அதை மாப்பிள்ளை வீட்டாரும் ஏற்றுக்கொண்டு, ‘எங்க வீட்டு மகாலக்ஷ்மி அவ. ஒரு ரெண்டு நாளு நல்லா இருந்துட்டு வரட்டும்’ என்று சொல்வார்கள்.
ஏனெனில், பெண் என்பவள் எப்போதுமே குலவிளக்கு. ஒரு வீட்டின் மகாலக்ஷ்மி. வம்சத்தை வாழையடி வாழையாக்கும் மகாசக்தி.
- சுபமஸ்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT