Published : 29 Apr 2018 11:53 AM
Last Updated : 29 Apr 2018 11:53 AM
க
டந்த பத்து நாட்களாக ஒரு வாக்கியம் இரவும் பகலும் துரத்திக்கொண்டே இருக்கிறது. “அவளைக் கொல்லுவதற்கு முன் கடைசியாக இன்னும் ஒரு முறை நான்…” என்ற வாக்கியம் அது. என்னைப் போன்ற இன்னொரு ஆணின் குரல் அது. செய்தித்தாளில் முதன்முதலாக இந்த வாக்கியத்தை வாசித்தபோது மட்டுமல்ல, நினைக்கிறபோதெல்லாம் குற்ற உணர்வில் மனம் சிறுத்துப்போகிறது.
ஆரம்ப விதை எது?
இந்த வரிகளை அவன் சொன்னபோது கதுவா சிறுமி அந்தக் கோயிலின் அறைக்குள் மயங்கிய நிலையில் கிடக்கிறாள். பலரால் பலமுறை வல்லுறவு செய்யப்பட்ட அவளது உடல் ஒரு பழைய துணியைப் போலத் தரையில் விரிந்து கிடக்கிறது. கை, கால்கள் சோர்ந்து நம் மனம் இற்று வீழ்கிறது. ‘இந்த உலகம் உறங்கிக்கொண்டிருக்கையில் இந்தியா விழித்தெழுகிறது’ என்ற பண்டித நேருவின் வாக்கியம் முதலில் சொல்லப்பட்ட அந்தக் கெடு வாக்கியத்தின் பின்னொட்டுப் போல ஏனோ நம் செவிகளில் அறைகிறது. மீண்டும் உடல் சிலிர்த்து நடுங்குகிறது. இந்தியா விழித்தெழுமா?
ஆணாதிக்கத்தின், ஆண் வக்கிரத்தின் சகலவிதமான கூறுகளும் அந்தப் பச்சிளம் உடல் மீது அரங்கேறியுள்ளது. நில உடைமை, மதப் பகைமை, பாலியல் வெறி, பழிவாங்கும் உணர்வு, மனிதப் பிறவிக்கு முந்தைய கட்டத்து உந்துதல்கள், சதிவலை பின்னுதல் என எல்லாம் ஆணுடல்களாக வடிவம் கொண்டு கூத்தாடிய நிலப்பரப்பாக அந்தப் பிஞ்சு உடல் நம் முன் கிடக்கிறது. ஓர் இந்திய ஆணாக நான் அவமானத்தில அமிழ்ந்துபோகிறேன்.
அவர்களை வைத்து எல்லா ஆண்களையும் குற்றம் சொல்ல முடியுமா என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. இது ஒன்றும் அந்தக் கதுவா குற்றாவாளிகள் புத்தம் புதிதாகக் கண்டுபிடித்த குற்றச்செயல்பாடு அல்லவே? இதற்கு ஒரு வரலாறும் வேரும் இருக்கிறதல்லவா?
ஆண் மனதின் வக்கிரம்
2017 நவம்பர் 2 அன்று டெல்லியில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரனால் வல்லுறவு செய்யப்பட்ட செய்தி பெரிய அளவுக்குப் பேசப்படவில்லை. அவனுடைய இரு குழந்தைகளோடு விளையாடுவதற்காகத் தத்தித் தத்தி நடந்துவந்த அச்சிறுமியைத் தன் குழந்தைகள் (4 மற்றும் 2 வயது) முன்னிலையிலேயே வல்லுறவு செய்துள்ளான். டெல்லி மகளிர் ஆணையத் தலைவரான ஸ்வாதி மாலிவால், சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அக்குழந்தையைக் காணச்சென்று மனம் பதற ட்விட்டரில் எழுதிய பிறகே அந்த அவலம் உலகுக்குத் தெரியவந்தது.
2018 ஜனவரி 30-ல் எட்டு மாதப் பெண் குழந்தை 28 வயதான உறவுக்காரப் பையனால் டெல்லியில் வல்லுறவு செய்யப்பட்ட செய்தி வெளியானது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண் குழந்தைகள் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கின்றன. இவை எங்கோ எப்போதோ நடக்கும் தவறுகள் அல்ல. இப்படியான வழக்குகள் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பதிவாகின்றன. காயங்கள், ரத்தம் கொட்டுதல் இல்லாமல் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைப் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகளுக்கும் சொல்லத் தெரியாது. அப்படி வெளிவராத குற்றங்கள் எத்தனையோ, தெரியாது.
பண்படுத்தாதது யார் குற்றம்?
ஐந்தாம் வகுப்புச் சிறுவன் ஒருவன் இரண்டாம் வகுப்புச் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த செய்தியும் இந்தச் செய்திக் குவியலில் வந்து விழுகிறது. நிர்பயா வழக்கிலும் கதுவா சிறுமி வழக்கிலும் சிறார் குற்றவாளிகள் பங்கேற்றுள்ள செய்தியைச் சும்மா கடந்துபோக முடியுமா?
‘இந்தியாவில் ஆண்கள், பெண்களை எப்படிப் பார்க்கப் பழகியிருக்கிறோம்’ என்பதில்தான் எல்லாமே தொடங்குகிறது. நம்மைப் போல ஒரு சக மனிதப் பிறவிதான் பெண் என்ற புரிதல் இல்லை. பெண்ணுடல் மீதான மயக்கம் இயல்புக்கு மீறி ஆண் மனதில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆணின் நுகர்வுக்கான பொருள் என்பதற்கு மேல் பெண் பற்றிய புரிதல் இந்தியாவில் இல்லை. இந்தப் புரிதலின் மீது மத, சாதிய, ஆணாதிக்கக் கருத்துகள், பண்பாடு ஆகியவற்றின் பேரால் தலையில் ஏறியுள்ள கசடுகள் எல்லாம் சேர்ந்து கூடுதலாக மசாலா சேர்த்து அவளை ஒரு பண்டமாகவே ஆக்கிஉள்ளன.
தனிமையும் வெளியே தெரியாது என்ற உத்தரவாதமும் குழந்தைக்குச் சொல்லத் தெரியாது என்ற சாதகமும் ஒருங்கே வாய்த்தால் ஆணின் குற்றமனம் இயங்கத் தொடங்கிவிடுகிறது. தனித்திருக்கும்போதும் யாரும் பார்க்காவிட்டாலும் ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் கடைப் பிடிக்கிற ஆண்களை நம் கல்வி முறையும் குடும்ப அமைப்பும் பண்பாடும் உருவாக்கத் தவறிவிட்டன. வேர் அங்கேதான் இருக்கிறது.
நிர்பயா கொலைக்குப் பின் அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷனும் பாலியல் மற்றும் பாலினச் சமத்துவக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது. நீண்ட நெடிய, அரசியல் உறுதிமிக்க நடவடிக்கைகள் தேவை. பொதுச் சமூகத்தில் மாபெரும் கல்வி-கலாச்சார அசைவியக்கங்கள் பீறிட்டு எழ வேண்டும், சந்தேகத்துக்கு இடமின்றி அமலாகின்ற சட்ட/நிர்வாக ஏற்பாடுகள் வேண்டும்.
அதெல்லாம் செய்யாமல் தூக்குத் தண்டனைச் சட்டத்தையும் ‘நம் மகள்களைப் பாதுகாப்போம்’ என்பது போன்ற பம்மாத்து மார்தட்டல்களையும் மட்டும் வைத்துக்கொண்டு எந்தத் தீர்வையும் காண முடியாது.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT