Published : 08 Apr 2018 09:56 AM
Last Updated : 08 Apr 2018 09:56 AM
தெ
ன்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவரும் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியுமான வின்னி மண்டேலா 81 வயதில் காலமானார். நிறவெறி அடிப்படையில் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றிய வெள்ளையின அரசுக்கு எதிராகத் தைரியமாகப் போராடிய தலைவராகப் போற்றப்பட்டவர் வின்னி. தேசத்தின் தாய் எனவும் அவர் பாராட்டப்படுகிறார். நெல்சன் மண்டேலா சிறையிலிருந்த 27 ஆண்டுகளும் அவருக்கு மட்டுமல்லாமல், அவரது இயக்கத்துக்கும் உத்வேகம் அளித்தார். நெல்சன் மண்டேலா பதவிக்கு வந்த பின்னர் வின்னியின் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மக்களிடையே கடைசிவரை பெரும் புகழ்பெற்றவராகவே அவர் இருந்தார்.
ஈஸ்டர் கேப் மாகாணத்தில் பிறந்த வின்னியின் குழந்தைப் பருவம் கருப்பின வெறுப்பின் நரக வேதனையுடன் கழிந்தது. இளம் வயதிலேயே ஒரு மருத்துவமனையில் சமூகப் பணியாளராகச் சேர்ந்தபோது அவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. கறுப்பின வெறிக்கு எதிராகப் போராடிய இன்னொரு போராளியான பாதிரியார் டெஸ்மான்ட் டூடு, ‘இனிவரும் தலைமுறை சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் வின்னி’ என்று தனது அஞ்சலிக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ‘அவரது வாழ்க்கை, சாத்தியத்தின் நம்பிக்கையும் தோல்வியும் சேர்ந்தது, நம்பிக்கையும் ஏமாற்றமும் பிணைந்தது என்று வின்னி குறித்த ஒரு நாவலை எழுதியுள்ள ஜபுலோ டிபிலி கூறியுள்ளார்.
வேலை விளம்பரங்களிலும் பாகுபாடு
கு
றிப்பிட்ட பாலினத்தவரைலத் தேடி வேலைவாய்ப்பு விளம்பரங்களை அளிப்பதைச் சட்ட விரோத நடைமுறையாகப் பல நாடுகளில் கடைப்பிடிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இணையத்தில் வெளியாகும் எட்டு லட்சம் விளம்பரங்களை ஆராய்ந்தபோது, அப்பட்டமாக நிலவும் பாலியல் பாகுபாடுகளை உலக வங்கி கண்டறிந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு விளம்பரங்களில் ஆண், பெண் சார்ந்த தேர்வு குறிப்பாக உள்ளது. 60 சதவீத விளம்பரங்கள் ஆண்களை மட்டுமே வேலைக்குக் கேட்கின்றன. 40 சதவீதம் பெண்களையே கோருகின்றன. பெண்கள் எல்லாருக்கும் குறைந்த சம்பளமே குறிப்பிடப்படுகிறது. அவர்களுக்கு ஆண் ஊழியர்களைவிட குறைந்தபட்சம் 10 சதவீதம் குறைவாக ஊதியம் தரப்படுகிறது. ஆசிரியர், பிபிஓ, சேவைப் பணி போன்றவற்றுக்குப் பெண்கள் அதிகம் கோரப்படுகின்றனர். பெண்கள் செய்யும் வேலை எதுவென்ற சம்பிரதாயமான மனப்போக்கே இந்த விளம்பரங்களில் வெளிப்படுகிறது. திறன் தேவைப்படாத பணிகளுக்கும் பெண்களே அதிகமாக எதிர்ப்பார்க்கபடுகிறார்கள்.
கூகுள் கொண்டாடிய முதல் பெண் மருத்துவர்
இ
ந்தியாவின் முதல் பெண் மருத்துவரான ஆனந்தி கோபால் ஜோஷியின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் மார்ச் 31 அன்று அவரை கவுரவித்தது. ஆனந்தி ஜோஷி, பென்சில்வேனியா பெண்கள் மருத்துவக் கல்லூரியில் 21 வயதில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் யமுனாவில் 1865-ல் பிறந்த ஆனந்தி, ஒன்பது வயதில் தன்னைவிட வயதில் மிகவும் மூத்த கோபால் ராவ் ஜோஷியை மணந்தார். 14 வயதில் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. பத்து நாட்களிலேயே சரியான மருத்துவமின்றி அந்தக் குழந்தை இறந்தது. இதனால் ஆனந்தி ஜோஷி, மருத்துவப் படிப்பைப் படிப்பதற்கான தூண்டுதலைப் பெற்றார். கணவரது ஆதரவுடன் பள்ளிப் படிப்பை முடித்துத் தனது வளரிளம் பருவத்தில் அமெரிக்கா சென்றார். மருத்துவப் படிப்பை முடித்த கையோடு ஆரிய இந்துக்களிடம் நிலவும் மகப்பேறு முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவரது ஆய்வுத்தாளைப் படித்து விக்டோரியா மகாராணி பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 1886-ல் இந்தியா திரும்பிய ஆனந்தி, உள்ளூர் ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் பிரிவுக்குத் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்றார். மருத்துவப் படிப்பு முடித்த ஒரே ஆண்டில் 22 வயதில் காசநோய் அவரைப் பலிகொண்டது. வெள்ளி கிரகத்தில் உள்ள கிண்ணக்குழி ஒன்றுக்கு (Crater) ஆனந்தியின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொன்னாங்க
இ
ந்தியா இந்து மதத்தவருக்கு மட்டுமே உரியதல்ல. இந்த நாடு எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் சமாதான சகவாழ்வு நடத்துவதற்கானது. இந்துக்கள், முஸ்லிம்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். முஸ்லிம்கள் இந்துக்களை மணம் புரியலாம். இந்து மதத்தைச் சேர்ந்தவரை நான் திருமணம் செய்திருக்கிறேன். என் சகோதரன் ஒரு கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? 2016-ம் ஆண்டைவிட 17 சதவீதம் மத வன்முறைகள் இந்த நாட்டில் அதிகரித்துள்ளன. இதை நாட்டின் குடிமகளாகச் சொல்கிறேன். எங்கள் வாழ்க்கையை நாங்கள் எப்படி வாழ்கிறோம், என்னவாக வாழ்கிறோம் என்பதை நீங்கள் ஏன் தீர்மானிக்க நினைக்கிறீர்கள். வீட்டில் நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பது பற்றி உங்களுக்கு என்ன கவலை?
-குஷ்பு, ஆஜ் தக் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT