Published : 22 Apr 2018 10:19 AM
Last Updated : 22 Apr 2018 10:19 AM

எசப்பாட்டு 32: வாசிக்க வந்த கிராமத்துப் பெண்கள்

 

றிவொளி இயக்கம் என்பது முற்றிலும் பெண்கள் பங்கேற்ற மாபெரும் கலாச்சார இயக்கம். விடுதலைப்போருக்குப் பிறகு லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இயக்கம் இதுதான் என்று அப்போது நாங்கள் மேடைதோறும் முழங்குவோம். பெண்களின் இயக்கம் என்பதால்தானோ என்னவோ தமிழகக் கலாச்சார வரலாற்றின் மிகப் பெரிய இந்நிகழ்வு நம் கூட்டு நினைவுகளில்கூட இன்று இல்லாத அளவுக்கு மறக்கப்பட்டுவிட்டது.

கிராமங்களை நோக்கி...

துடிக்கும் ரத்தம் பேசட்டும்

வெட்டுப்பட்ட கட்டை விரலின்

துடிக்கும் ரத்தம் பேசட்டும்

அக்கட்டை விரலின் ரத்தத்துளிகள்

புத்தக வடிவில் எங்கள் கையில்

இந்தத் துளிகளைச் சென்று விதைப்போம்

சூத்திர பூமியின் தெருக்களிலே….

உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் 90-களில் அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக ‘மக்கள் வாசிப்பு இயக்க’த்தில் மக்களிடம் புத்தகங்களை எடுத்துச் சென்றோம். கட்டுக் கட்டாகப் புத்தகங்களைத் தோள்களில் சுமந்துகொண்டு கிராமங்களுக்குப் பயணமானோம். பெண்கள் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவார்களா? கடன் வாங்கி ஒவ்வொரு புத்தகமும் ஒரு லட்சம் பிரதிகள் என அச்சிட்டுவிட்டோமே என்ற பயம் அடிவயிற்றில் இருந்தது. காலை முதல் இரவுவரை வேலை வேலை என்று வீட்டிலும் வயல்வெளிகளிலும் பீடி சுற்றுவதிலும் தீப்பெட்டி ஒட்டுவதிலும் செங்கல் சூளையிலும் கழிக்கிற பெண்கள், புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்கிவிடுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது. உங்கள் ஒரு நாள் வாழ்க்கையை ஒரு தாளில் எழுதுங்கள் என நாங்கள் கொடுத்த வீட்டுப் பாடத்தை எப்படியோ நேரம் கண்டுபிடித்து எழுதி வந்தார்கள். அதில் வேலையே வாழ்க்கை என அவர்கள் இருப்பது வெளிப்பட்டது.

புத்தகம் என்றவுடன் நூறு பக்கத்துக்குக் குறைவில்லாத, நல்ல தாளில் கெட்டி அட்டையுடன் அச்சிடப்பட்ட ஒரு பொருள்தான் நம் கற்பனையில் தோன்றும். இந்தக் கற்பிதத்தை முதலில் உடைத்தோம். கிராமப்புறப் பெண்களுக்கான புதிய கற்போருக்கான புத்தகம் என்பது பெரிய எழுத்தில் படங்களுடன் அச்சிடப்பட்ட 12 முதல் 16 பக்கங்களுக்குள் முடிகிற ஒன்றாக இருக்க வேண்டும். அதன் விலை ஒரு ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது எனத் தீர்மானித்தோம்.

இப்சனின் ‘பொம்மை வீடு’, ஆண்டன் செகாவின் ‘பச்சோந்தி’, கி.ராஜநாராயணனின் ‘காய்ச்ச மரம்’, மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘உள் மனிதன்’, வேல.ராமமூர்த்தியின் ‘கிறுக்கு சண்முகம்’, கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ புதுமைப்பித்தனின் ‘சங்குத்தேவனின் தர்மம்’ என்று ஒவ்வொரு கதையையும் தனித் தனிப் புத்தகங்களாக அச்சிட்டோம். பத்துத் தலைப்புகளிலான புத்தகங்களோடு தெருக்களில் இறங்கினோம்.

கதையோடு பயணம்

தொண்டர்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் புத்தகங்களோடு தெருக்களில் நின்றபோது கடுகு டப்பாக்களில் கிடந்த காசு வாசலுக்கு வந்தது. அந்த அதிகாலை இயக்கத்தில் ஆண்களே பெரும்பாலும் பங்கேற்றனர். பெண் தொண்டர்களை அதிகாலை நேரத்தில் அணிதிரட்டக் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதையும் மீறி சில பெண்களும் வந்தார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் தெருக்களில் இறங்கிய தொண்டர்கள், கொண்டுபோன புத்தகங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்ததென்று ஒன்பது மணிக்குள் வந்து சேர்ந்தார்கள்.

பகலில் வாசித்து முடிக்காத புத்தகங்களைக் கொண்டுவந்து இரவில் உரக்க வாசித்தார்கள். மௌன வாசிப்பைவிட உரத்த வாசிப்பையே உழைக்கும் பெண்கள் பெருவாரியாகக் கையாண்டனர். தெரு விளக்குகளின் கீழே நடைபெற்ற இந்த வாசிப்பில் இப்சனின் நோரா, “இனியும் இந்தப் பொம்மை வீட்டில் நான் வாழ மாட்டேன். வெளியேறுகிறேன்” என்று வாசல்படி தாண்டித் தெருவில் இறங்கிக்கொண்டிருந்தாள். இங்கிலாந்துப் பெண் நோராவுக்காக எங்கள் கரிசல்பட்டிப் பெண்கள் கண்ணீர் உகுத்தார்கள். கி.ரா.வின் ‘காய்ச்ச மரம்’ கதையில் கடைசிக் காலத்தில் எல்லாச் சொத்தையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு திருச்செந்தூர் கோயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், வந்த ஊர்க்காரர்களிடம், “எங்க பிள்ளைக நல்லாருக்காகளா” என்று கேட்கும் நிம்மாண்டு நாய்க்கருக்காகவும் பேரக்காளுக்காகவும் எழுந்த கேவல்களும் விசும்பல்களும் அந்தக் குளிர்ந்த இரவுக் காற்றைச் சலனப்படுத்தின. ‘பச்சோந்தி’ கதையில் வரும் காவல்துறை அதிகாரியின் கதையைக் கேட்டுச் சனங்கள் சிரித்து உருண்டார்கள்.

தீராத தாகம்

பாமாவின் ஒரு கதையில் குடிகாரக் கணவனிடம் சிக்கி, தினமும் அடிவாங்கிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி ஒரு நாள் துணிச்சலாக முடிவெடுக்கிறாள். தன் நாலு பிள்ளைகளையும் கணவனிடம் விட்டுவிட்டு, “இனிமேல் உன்கூட வாழ முடியாது. வரும்போது நான் மட்டும்தான் வந்தேன். அதே மாதிரி நான் மட்டுமே போகிறேன். உன் பிள்ளைகளை நீ காப்பாத்துவியோ கிணத்திலே தள்ளுவியோ” என்று சொல்லித் தாலியை அறுத்து அவன் மூஞ்சியில் விட்டெறிந்துவிட்டு வெளியேறுகிறாள். ஒரு வகுப்பில் இதைப் பேசியபோதுஅந்தக் கதையின் முடிவைப் பெண்கள் ஏற்கவில்லை. விவாதத்தில் பெண்கள் ஒரே குரலில் சொன்னது: “தாலியை அறுத்துப் போட்டது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அவனே குடிகாரப் பாவிமட்டை. அவனிடம் பச்சை மண்ணுகளை விட்டுட்டு வரலாமா, அது தப்பில்லையா?” என்று சொன்னார்கள். நாம் ஒன்றை முற்போக்கு என்று நினைத்துக்கொண்டிருக்க, மக்களின் கருத்து வேறாக இருந்ததைக் கண்டோம். நடுத்தர வர்க்க ‘முற்போக்கை’, உழைக்கும் பெண்கள் நிராகரித்தார்கள். இதை பாமாவிடம் சொன்னேன். அவுங்க சொன்ன முடிவுதான் சரி என்று சிரித்தார்.

இந்த வாசிப்பு இயக்கத்துக்கு ஆண்களின் ‘பங்களிப்பு’ இல்லாமல் இல்லை. ராத்திரி சாராயத்தை ஏத்திக்கொண்டு வந்து, எட்டி நின்றுகொண்டு இவர்கள் பேசப்பேச, “நோரா.. போனாப் போறா..” என்பது போல வரிக்கு வரி பின்னணி இசை போலப் பேசி சபையைக் கலைத்துவிடுவார்கள். “எனக்குச் சோத்தைப் போட்டு வச்சிட்டுப் பொஸ்தகத்தைத் தொடு” என்று கடமையை நினைவூட்டுவது, “பிள்ளைகள் படிச்சுட்டு தூங்கினப்புறமா நீ படிக்கப் போ. பச்சை மரத்தை விட்டுட்டுப் பட்ட மரத்துக்கு தண்ணி ஊத்துறாய்ங்க அறிவொளிக்காரங்க” என்று கருத்து உதிர்த்துப் பெண்களின் மனஉறுதியைக் குலைப்பது என்று பல வடிவங்களில் ஆண்களும் பங்களித்தார்கள். இவற்றையெல்லாம் தாண்டி லட்சக்கணக்கான புத்தகங்களைக் காசு கொடுத்துப் பெண்கள் வாங்கினார்கள். வாசித்தார்கள், விவாதித்தார்கள். இவையெல்லாம் 90-களில் இந்தத் தமிழ் மண்ணில்தான் நடந்தது. அரைகுறைப் படிப்பாளிகளான பெண்கள், கிராமங்களில் இப்போதும் புத்தக தாகத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கான வடிவத்தில் புத்தகங்களைத் தயாரித்து எடுத்துச் செல்ல யார் இருக்கிறார்கள்?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x