Published : 29 Apr 2018 11:53 AM
Last Updated : 29 Apr 2018 11:53 AM
லூர்தம்மாள் நினைவு நாள்: மே 4
காமராஜர் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்ற அமைச்சரவையில் மொத்தம் ஏழே அமைச்சர்கள்தான் இருந்தனர். அதில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்து பல மாற்றங்களுக்கு வித்திட்ட லூர்தம்மாள், காலம் கொண்டாடத் தவறிய ஆளுமைகளில் ஒருவர். அந்தக் காலகட்டத்தில் சமூகநீதியைக் காப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். மீனவச் சமூகத்தைச் சேர்ந்த அவர், ராஜாஜி அமைச்சரவையில் இடம்பெற்ற ஜோதி வெங்கடாசலத்துக்குப் பிறகு பதவியேற்ற இரண்டாவது பெண் அமைச்சர்.
விடியலை நோக்கிய பயணம்
லூர்தம்மாளின் பூர்விகம், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி. சிறுவயதிலேயே தாயைப் பறிகொடுத்தவர், தந்தை அலெக்சாண்டரின் அரவணைப்பில் வளர்ந்தார். குளச்சலைச் சேர்ந்த அலெக்சாண்டர் மனுவேல் சைமனைத் திருமணம் முடித்தார். கணவரின் வேலை காரணமாகத் திருமணத்துக்குப் பின் சில ஆண்டுகள் ஈரானில் வாழ்ந்துள்ளார். ஐந்து குழந்தைகளைப் பெற்றுப் பரபரப்பான குடும்பச் சூழலுக்குள் இருந்தபோதும் லூர்தம்மாளுக்குச் சமூகத்தின் மீது அக்கறை இருந்தது. அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாகர்கோவில் மாதர் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.
மீனவர்கள் கடற்கரையைத் தாண்டி வெளியே வராத காலத்திலேயே நாகர்கோவில் மாதர் சங்கத்துக்கு வந்து பெண் விடுதலை குறித்து லூர்தம்மாள் பேசியுள்ளார். உள்ளூர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர், செவித்திறன் - மொழித்திறன் அற்றோர் சங்கத்தின் தலைவர் எனப் பல தளங்களிலும் பணியாற்றிய இவர், குமரி மாவட்டத்தின் முதல் பெண் அமைச்சராகவும் மிளிர்ந்தார்.
நேர்மையும் துணிவும்
லூர்தம்மாளின் கணவர் சைமன், ஈரானிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பிறகு அரசியல் ஈர்ப்பால் அன்றைய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் இணைந்தார். அப்போது குமரி மாவட்டம், கேரள ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. 1951, 1954 தேர்தல்களில் வெற்றிபெற்று இருமுறை கேரள சட்டசபையிலும் உறுப்பினராக இருந்தார் சைமன். 1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. 1957-ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனக் கட்சியினருக்கு இந்திராகாந்தி வலியுறுத்தியதன் பேரில் சைமன் அரசியல் களத்திலிருந்து ஒதுங்கினார்; லூர்தம்மாள் அரசியல் களத்துக்கு வந்தார்.
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவரை, அமைச்சராக்கினார் காமராஜர். பின்னால் இருந்து இயக்கும் இன்றைய கால ஆண்கள் சிலரைப் போல் சைமனும் இல்லை, தலையாட்டிப் பொம்மையாக லூர்தம்மாளும் இல்லை. அந்த நேர்மையும் துணிவுமே காமராஜர் அமைச்சரவையில் இடம்பிடிக்கவும் வைத்தது. உள்ளாட்சி மற்றும் மீன்வளத் துறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் ஏராளம்.
லூர்து மீன்கள்
இது குறித்து தெற்கு எழுத்தாளர் இயக்கத் தலைவர் திருத்தமிழ்தேவனார் கூறுகையில், “மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளிக்கெண்டை மீனை லூர்தம்மாள் 1959-ல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தார். புற்களை விரும்பிச் சாப்பிடும் புல் கெண்டையை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தார். கெண்டை ரக மீன் வளர்ப்பைத் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் பரவலாக்கினார்.
அப்போது மீன்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மீன்களுக்கு உணவாக ஜிலேபி மீன்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். ஜிலேபி மீன்கள் அதிக அளவில் குஞ்சு பொரித்துக்கொண்டே இருப்பதால் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இன்றுவரை எங்கள் பகுதியில் ஜிலேபி மீனை லூர்தம்மாள் மீன் என்றே பேச்சுவழக்கில் சொல்கிறோம். அவரது காலத்தில் தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. ராயபுரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டது” என்கிறார்.
சமூக மாற்றங்கள்
லூர்தம்மாள் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஏட்டளவில் மட்டுமே இருந்தன. மாவட்ட ஆட்சிக் குழு மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது. இதனால்தான் மாவட்டங்களில் போடப்படும் திட்டங்கள் கிராமங்கள்வரை போய்ச்சேரவில்லையென அவர் உணர்ந்தார். இதையெல்லாம் சரிசெய்ய உள்ளாட்சி கட்டமைப்பையே மாற்றியமைத்தார். உள்ளாட்சி நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
1958-ல் லூர்தம்மாளின் முயற்சியால் ‘தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்’ உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சிக் குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு கிராமம், ஒன்றியம் என்ற அளவில் பஞ்சாயத்துக்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக்கொள்ள வழிவகை செய்தது. தமிழகத்தின் குக்கிராமங்கள்வரை சாலை அமைப்பதில் அவர் முனைப்பு காட்டினார்.
அடிப்படைத் தேவைகளைத் தாண்டி விவசாயம், கால்நடை, ஊரகத் தொழில்கள், கல்வி, பிற பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய அமைப்பாகக் கிராம பஞ்சாயத்துக்களையும் ஒன்றியங்களையும் மாற்றியமைத்துத் தமிழகக் கிராமப்புற வளர்ச்சிக்கு வித்திட்டார். பஞ்சாயத்துக்கள் வழியே கோழிப் பண்ணை, மீன் வளர்ப்புப் பண்ணை, கால்நடை மருத்துவமனைகள் போன்றவற்றைத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார்.
சென்னை மாநகராட்சி மன்றம் கொடுக்கும் விளம்பரங்கள் இந்தி, தெலுங்கு மொழிகளில்கூட இருக்கலாம் என்னும் நிலை இருந்தது. அந்த நிலையைச் சென்னை மாநகராட்சி திருத்த மசோதா 55-ன் மூலம் நீக்கிய லூர்தம்மாள், விளம்பரங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அப்போதைய கோட்டாறு அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்தது, மீனவ கிராமங்களில் பஞ்சாயத்து நூலகங்கள் அமைத்தது என அவர் அமைச்சராக இருந்த காலத்தில் குமரி மாவட்டத்துக்கு ஏராளமான பயனுள்ள திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார். இந்தியக் குடிநீர் வாரியத்தின் தலைவியாகவும் இருந்தார்.
குமரியில் மண்டைக்காடு கலவரம் வெடித்தபோது, அதில் ஆறு மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் அவர் இல்லை என்றபோதும் கடற்கரைக் கிராமங்களில் பதற்றம் பரவியபோது, புதூர்துறை சகாயமாதா குருசடியின் முன்பு மக்களோடு மக்களாகக் கடற்கரையிலேயே தங்கியிருந்தார்.
பெண்களை வளர்ப்பதே வரம்
லூர்தம்மாளுக்கு ஐந்து மகன்கள். பிலோமினா என்னும் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார். “வீட்ல பெண் குழந்தைகள் இல்லாமல் இருப்பதே குறை, பொண்ணுங்களை வளர்க்குறதே வரம்” எனச் சிலாகிப்பார். அவர் தன் கடைசி காலத்தை சென்னையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில்தான் கழித்துள்ளார். 91 வயதில் அவரது வாழ்க்கை முடிவுக்குவந்தது. ஆனால், அவரால் எழுச்சிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளும் லூர்து மீன்களும் அவர் வாழ்வின் மௌன சாட்சிகளாக நம்மிடையே உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT