Published : 01 Apr 2018 11:18 AM
Last Updated : 01 Apr 2018 11:18 AM
சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது. டாஸ்மாக் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஒக்கி புயல் மரணங்கள் போன்றவை தொடர்பான போராட்டங்களில் இதைக் காண முடிந்தது. அந்த வரிசையில் தற்போது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தையும் பெண்கள் முன்னின்று நடத்திவருகிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாகத் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பெரும் போராட்டக் களமாகத் தூத்துக்குடி மாறியிருக்கிறது.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்கள் 1994 முதல் நடந்துவந்தாலும் தற்போது தன்னெழுச்சியாக வெடித்துள்ள போராட்டத்துக்கு விதை போட்டவர்கள் அ.குமரெட்டியாபுரம் கிராமத்துப் பெண்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகே இருப்பதால் அதன் ஆபத்தை நன்கு உணர்ந்தவர்கள் இந்தப் பெண்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் ஆலையால் ஏற்படும் ஆபத்துகளையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் இறங்கியதைத் தொடர்ந்து கொதித்துப்போன பெண்கள், மாவட்ட நிர்வாகத்தைத்தான் முதலில் நாடினர். அங்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் உண்ணாவிரதம் இருந்து பார்த்தார்கள், அதிலும் பலனில்லை. இதனால், கிராமத்திலேயே அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள். அந்தப் போராட்டம்தான் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பந்தல் போடக்கூட காவல் துறை அனுமதிக்காததால் கிராமத்தின் நடுவே உள்ள வேப்ப மரத்தடியையே போராட்டக்களமாக மாற்றியிருக்கிறார்கள். அங்கு அமர்ந்தபடி போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இது கிராம மக்களின் போராட்டம் எனப் பொதுவாகச் சொன்னாலும், களத்தில் அமர்ந்திருப்பவர்களில் 90 சதவீதத்தினர் பெண்களே.
அவர்களுக்கு ஆதரவாகத் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தூத்துக்குடியில் கடந்த ஏப்ரல் 24 அன்று நடந்த போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், மருத்துவர்கள், கல்லூரிப் பேராசிரியைகள் என ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டக் களத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவர் அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த எஸ்.மாடத்தி (42). “ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையால் எங்கள் பகுதியின் நீர், நிலம், காற்று அனைத்தும் முழுமையாக மாசடைந்துவிட்டன. குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுப்பதைவிட மருந்து வாங்கிக் கொடுக்கவே அதிகமாகச் செலவு செய்யறோம்.
இந்த நிலையில், ஆலை விரிவாக்கம் செய்யும் பகுதி எங்கள் கிராமத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் இருப்பதால் நாங்கள் அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு” என்கிறார் மாடத்தி. “எங்க வாழ்க்கையில் பாதி முடிந்துவிட்டது. எனவே, எங்களைப் பற்றிக் கவலை இல்லை. எங்க குழந்தைகளும் வருங்கால சந்ததியும் ஆரோக்கியமா இருக்கணும். அவங்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலையைத் தர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கு. அதுக்காகத்தான் இரவு பகலா போராடிட்டு இருக்கோம். எந்த அரசியல் சார்பும் இல்லாம இந்தப் போராட்டத்தை நடத்துறோம். அரசியல் கட்சிங்க எங்களுக்கு ஆதரவு தந்தா ஏத்துக்குவோம். வாழ்வாதாரத்தைக் காப்பாத்திக்க நாங்க நடத்துற இந்தப் போராட்டத்துக்கு அரசு ஒரு தீர்வு சொல்லணும். அதுவரைக்கும் எங்க போராட்டம் ஓயாது” என்று உரக்கச் சொல்கிறார் மாடத்தி.
அதே ஊரைச் சேர்ந்த ஏ.காசியம்மாள் (38) கூறும்போது, “நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். தினமும் வேலைக்குப் போனாதான் எங்களுக்குச் சோறு. அந்த நிலையிலதான் இந்தப் போராட்டத்தை நடத்திட்டு வர்றோம். தினமும் காலையில குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிட்டுப் போராட்டக் களத்துக்கு வர்றோம். சாயந்திரம் குழந்தைங்க வர்ற நேரத்துக்கு வீட்டுக்குப் போவோம். அதுக்கப்புறம் வந்து ராத்திரி 9 மணி வரைக்கும் களத்துல இருக்கோம். இரவு முழுவதும் போராட்டக் களத்தில் ஆண்கள் இருப்பாங்க” என்று சொல்லும் காசியம்மாள், மிகவும் துயரமான சூழ்நிலையில்தான் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகக் குறிப்பிடுகிறார். தினமும் வேலைக்குச் செல்லும் சில பெண்கள் நீங்கலாக மற்ற அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்தப் போராட்டத்தை நசுக்க பல்வேறு வகையிலும் முயற்சி நடப்பதாகவும் அவற்றையெல்லாம் முறியடித்துத் தங்கள் போராட்டம் வெற்றிபெறும் எனவும் காசியம்மாள் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ‘வீராங்கனை’ அமைப்பின் அமைப்பாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியையுமான பாத்திமா பாபு ஒருங்கிணைத்துவருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவருகிறார் இவர். “சமீப காலமாகப் போராட்டங்களில் பெண்கள்தான் முன்னால் நிற்கிறார்கள். குறிப்பாக, சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பாதிப்புகளை நேரடியாக அவர்கள்தான் உணர்கிறார்கள்.
ஒரு காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம் குறித்துப் பெண்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதனால் போராட்டக் களத்துக்கு அவர்கள் வரவில்லை. ஆனால், தற்போது பெண்களிடம் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் முன்னால் நிற்கிறார்கள்.
இதுபோன்ற சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களிலும் பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களிலும் எளிதில் வெற்றி கிடைத்துவிடுவதில்லை. ஆனால், ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு நிறைந்த கழிவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து முழுமையான ஈடுபாட்டோடு தொடர்ந்து போராடத் தொடங்கினால் வெற்றி பெற்றுவிடலாம். அந்தக் கோணத்தில்தான் இந்தப் பிரச்சினையைக் கொண்டுசெல்கிறோம். வெற்றியை நோக்கிப் பயணிக்கிறோம். அடுத்த கட்டமாகத் தமிழகம் தழுவிய அளவில் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் பாத்திமா பாபு.
படங்கள்: என். ராஜேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT