Published : 29 Apr 2018 11:45 AM
Last Updated : 29 Apr 2018 11:45 AM
ப
டிப்பைவிட லதாவுக்கு விளையாட்டுதான் பிடித்திருந்தது. குறிப்பாக, வாலிபால் விளையாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, ஷார்ட்ஸ் அணியக் கூடாது என்பது போன்ற சட்டதிட்டங்கள் அமலில் இருந்தபோது, தன் விருப்பத்தைத் துணிச்சலுடன் வீட்டில் தெரிவித்துவிட்டு வாலிபால் விளையாடத் தொடங்கினார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் வாலிபாலே அவருக்கு உலகமாக இருந்தது.
“அந்த விளையாட்டு மூலமா ரயில்வேயில் வேலை கிடைச்சுது. இப்போ சின்னதா என்னால முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கு உதவுறேன்” என்று ரத்தினச் சுருக்கமாகத் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார் லதா சுந்தரம்.
கோயம்புத்தூர் ராம்நகரைச் சேர்ந்த லதாவுக்கு, அவர் நடத்திவருகிற ‘அறம்’ அறக்கட்டளையே அடையாளம். அந்த அளவுக்கு அந்த அமைப்பு மூலம் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வழிகாட்டிவருகிறார். இந்தச் செயல்பாடுகளுக்காக 2016-ல் குடியரசுத்தலைவரிடமிருந்து பெண் சாதனையாளர் விருதைப் பெற்றார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் அங்கீகாரமான ‘நாரிசக்தி அட்வகேட்’ பிரிவுக்கு இந்த ஆண்டுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
தற்காப்பே பெண்காப்பு
பெண்கள் தங்கள் உள்ளுணர்வுக்கு ஏற்றபடி நடந்தால் பிரச்சினைகளிலிருந்து ஓரளவு விலகியிருக்க முடியும் என்கிறார். “முன்னாடி இருந்த பாதுகாப்பு இப்போ இல்லையேங்கற கேள்வி பலருக்கும் இருக்கு. ஒரு பெண்ணுக்கு அந்தப் பெண்தான் பாதுகாப்பு. பெண்களோட உள்ளுணர்வு 99 சதவீதம் சரியா இருக்கும். அதைச் சரியா பயன்படுத்திட்டா போதும். பாதுகாப்பு, வாய்ப்பு எல்லாம் சுலபமா வந்துடும். ஒரு பெண்ணுக்கு எது தேவையோ அதை அவங்களே செலக்ட் பண்ணிக்கணும். இப்படிப் பெண்கள் தாங்களே முடிவெடுக்க வேண்டிய அவசியத்தையும் அதற்கான வழிகாட்டுதலையும் நிறைய பெண்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் எங்க வேலை” என்று சொல்கிறார் லதா.
பயிற்சிகள் பலவிதம்
ஆலோசனை அளவில் மட்டுமே நின்று விடாமல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் தன் அறக்கட்டளை சார்பில் உதவிவருகிறார். ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாகப் பெயர் வைத்துச் செயல்படுத்துகிறார்.
மன அழுத்தப் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகள் விடுபட ‘ஹேப்பி சைல்ட்ஸ்’ திட்டம் உதவுகிறது. 1- 5 வகுப்பு வரையுள்ள குழந்தைகளின் படிப்புக்காகத் திறன்வளர்ப்புப் பயிற்சியோடு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நல்ல தொடுதல், மோசமான தொடுதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
வளரிளம் பெண்களுக்கான ஆலோசனை வகுப்பு, பெண்கள் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள், இரவு வான் நோக்குதலுக்கான ஏரோ அஸ்ட்ரோ கிளப், படிப்பில் பின்தங்கியவர்களுக்கு ‘வெற்றிப்படி’ வகுப்புகள், படித்த பெண்களுக்கான ‘புத்ரி’ தொழில் கூர்நோக்குப் பயிற்சி, ‘ஹேப்பி டேஸ்’ இலவச நாப்கின் விநியோகம், பள்ளி மாணவர்களைச் சமூக நோக்கோடு வளர்த்தெடுக்கும் ‘ஆக்டிவ் சிட்டிசன்’, நகரச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைதல் என இவர் செய்துவரும் பணிகள் அநேகம்.
“பாதிக்கப்பட்டவங்க, பயிற்சி தேவைப்படுறவங்க இங்கே அதிகம். சிசுக் கொலையில் தொடங்கற போராட்டம் கடைசி வரைக்கும் தொடர்ந்துட்டுதான் இருக்கு. கவுன்சலிங் கொடுக்கும்போது பெண் குழந்தைகளோட பிரச்சினைகளைப் பல வடிவத்துல பாக்க முடியும். நிறைய குழந்தைங்க, பெற்றோர்கிட்டயே பாதுகாப்பு இல்லைன்னு எங்ககிட்ட அழுதிருக்காங்க. அதனாலதான் குழந்தைகளுக்குத் தொடுதல் குறித்த புரிதலை ஏற்படுத்தறதோட சுயபாதுகாப்புக்கும் பயிற்சியளிக்கிறோம்.
நாங்களே நாப்கின் தயாரிச்சு, பள்ளி மாணவிகளுக்குக் கட்டணமில்லாம தர்றோம். பெண்கள் ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நிற்கணும். அந்த நோக்கம்தான் இரண்டாயிரம் பேர் கொண்ட இயக்கமா இதை வளர்த்திருக்கு” என்று சொல்கிறார் லதா சுந்தரம்.
“பெண்கள் எல்லா மட்டத்திலேயும் கொண்டாடப்படணும். அதுக்கு என்ன பண்ணணும்? எங்கெல்லாம் தடை இருக்கோ, அதையெல்லாம் தேடித்தேடி உடைக்கணும்” என்று சொல்லும் லதா, அதற்கான முனைப்போடு செயல்பட்டுவருகிறார்.
படங்கள்: ஜெ. மனோகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT