Last Updated : 08 Apr, 2018 09:56 AM

 

Published : 08 Apr 2018 09:56 AM
Last Updated : 08 Apr 2018 09:56 AM

முகம் நூறு: எதையும் வெல்லும் துணிவு!

ந்தக் குறுகிய படிகளில் தவழ்ந்தபடி ஏறுகிறார் ஜெயலட்சுமி. இரக்கமோ பரிதாபமோ தேவைப்படாத உறுதி அவரது கண்களில் தெரிகிறது. முகத்தில் மலர்ச்சியோடும் வார்த்தைகளில் தெளிவோடும் பேசுகிறார். கால்கள் செயலிழந்து, நடக்க முடியாத நிலையிலும் சுயசார்புடன் வாழ்ந்துவருகிறார் ஜெயலட்சுமி. நாமக்கல்லைச் சேர்ந்த இவர், ஃபிளெக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருவதன் மூலம் தன்னம்பிக்கைப் பெண்ணாகத் திகழ்கிறார்.

ஜெயலட்சுமியின் வீட்டில் அவரையும் சேர்த்து ஐந்து பெண் குழந்தைகள். ஜெயலட்சுமியின் தந்தை பூ கட்டும் தொழிலைச் செய்துவந்துள்ளார். அவருக்கு ஐந்து வயதானபோது போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால், கால்கள் இரண்டும் செயலிழந்தன. இதனால் அவருடைய பெற்றோர் உடைந்துபோயினர். ஆனால், தங்கள் மகளுக்கு ஏற்பட்ட குறைபாடு அவரது எதிர்காலத்துக்குத் தடையாக இருக்கக் கூடாது என நினைத்து, காரைக்குடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் ஜெயலட்சுமியைச் சேர்த்துப் படிக்கவைத்தனர்.

“நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என் அப்பா இறந்துட்டாரு. குடும்ப பாரம் முழுசும் என் அம்மா மேல விழுந்தது. அம்மாவும் பூ கட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுல கிடைச்ச வருமானத்தை வச்சிதான் எங்க எல்லாரையும் அவங்க வளர்த்தாங்க” என்று சொல்லும் ஜெயலட்சுமி, குடும்பச் சுமையால் பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்துவிட்டார். தன் அம்மாவுக்கு உதவியாகப் பூ கட்டும் தொழிலைச் செய்துவந்தார்.

வறுமையை விரட்டிய முயற்சி

ஜெயலட்சுமியைத் தொடர்ந்து அவருடைய சகோதரிகளும் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு, அம்மாவுக்கு உதவியாகப் பூ கட்டும் வேலையைச் செய்தனர். ஒரு சகோதரி மட்டும் வறுமைக்கு இடையிலேயும் சிரமப்பட்டுப் படித்து, பட்டப் படிப்பை நிறைவுசெய்தார். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து வேலை செய்தபோதும், சொல்லிக்கொள்ளும்படி வருமானம் கிடைக்கவில்லை. குடும்பத்தை நடத்துவது பெரும்பாடாக இருந்தது. இந்தச் சூழலில்தான் வேறு நல்ல வேலைக்குச் செல்ல ஜெயலட்சுமி முடிவுசெய்தார். தன்னால் நடக்க முடியாது என்பதால் அதற்கு ஏற்ற வேலையைத் தேட ஆரம்பித்ததாக அவர் சொல்கிறார்.

முதலில் தன் வீட்டின் அருகே ஃபிளெக்ஸ் போர்டுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த பின்னர் கணினியில் வடிவமைக்கக் கற்றுக்கொண்டார். அந்தப் பணியில் ஆர்வம் இருந்ததால் ஃபிளெக்ஸ் டிசைனிங் முழுவதையும் நன்கு கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ஜெயலட்சுமி.

“நான் அங்க வேலை செஞ்ச ஏழு வருஷத்துல எல்லா வேலையையும் நல்லா கத்துக்கிட்டேன். நாமளே தனியா தொழில் தொடங்கினா என்னன்னு தோணுச்சு” என்று சொல்லும் ஜெயலட்சுமி, தன் நினைப்பைச் செயல்படுத்துவதில் இறங்கினார். அரசிடமிருந்து கடனுதவி பெறும் வழிமுறை தெரியாததால், வீட்டில் இருந்த நகையை விற்றும் தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியும் தொழில் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் டிசைன் வேலைகளை மட்டும் செய்தவர், தற்போது வங்கிக் கடன் மூலம் புதிய இயந்திரம் வாங்கி ஃபிளெக்ஸ் டிசைன், விசிட்டிங் கார்டு, போஸ்டர், வினைல் போர்டு, லைட்டிங் போர்டு ஆகியவற்றைத் தயாரித்துவருகிறார்.

போராடினால் ஜெயிக்கலாம்

தன்னுடன் பணிபுரிந்த மணிகண்டன் என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். பேனர்களை வடிமைக்கும் பணியை ஜெயலட்சுமி கவனித்துக்கொள்ள, அதை பிரிண்ட் செய்து வாடிக்கையாளர் விரும்பும் இடத்தில் நிறுவும் பணியை ஜெயலட்சுமியின் கணவர் செய்கிறார். பணியின் தரமும் குறித்த தேதியில் பணியை முடித்துக் கொடுக்கும் பொறுப்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஜெயலட்சுமிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துத் தொழிலை விருத்தியடைய வைத்தது.

“ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாவும் பயமாவும் இருந்துச்சு. எது வந்தாலும் சமாளிச்சிடலாம்னு உறுதியா நின்னேன். அப்புறம் எல்லாம் பழகிடுச்சு. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே ஆறு வருஷம் ஓடிப் போச்சு” என்று புன்னகைக்கிறார் ஜெயலட்சுமி.

தற்போது தனது நிறுவனத்தில் இருவர் பணிபுரிவதாகவும் எதிர்காலத்தில் வெவ்வேறு இடங்களில் கிளை தொடங்கி, தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் இருப்பதாகவும் ஜெயலட்சுமி சொல்கிறார். அம்மா பேசுவதை வைத்த கண் வாங்காமல் கவனித்துக்கொண்டிருக்கிறான் ஜெயலட்சுமியின் ஒன்றரை வயது மகன் ஜஸ்வந்த்.

“உடல் குறைபாட்டை மட்டுமே நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா கடைசிவரை அப்படியே கிடக்க வேண்டியதுதான். வாழ்க்கையில எல்லாமே நாம நினைக்கிற மாதிரி நடந்துட்டா, அதுல என்ன சுவாரசியம் இருக்கு? போராடி ஜெயிப்பதுதானே சவால்! உடல் குறைபாடு ஏற்பட்டுப் போச்சேங்குறதை மறந்து நமக்கான அடையாளத்தை நாமே உருவாக்கிக்கணும்” என்று சொல்லும் ஜெயலட்சுமி, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி முன்னேற வழியில்லையே என அவநம்பிக்கையோடு முடங்கிக் கிடக்கும் பலருக்கும் முன்னுதாரணமாகவே திகழ்கிறார்.

படங்கள்:கி. பார்த்திபன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x