Last Updated : 18 Feb, 2018 10:40 AM

 

Published : 18 Feb 2018 10:40 AM
Last Updated : 18 Feb 2018 10:40 AM

கண்ணீரும் புன்னகையும்: பாகிஸ்தானின் முதல் இந்துப் பெண் எம்.பி.

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மேல்சபைக்கு முதன்முறையாக இந்து தலித் பெண்ணான கிருஷ்ணகுமாரி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். பெண்கள் உரிமைக்காகவும் கொத்தடிமை முறையை எதிர்த்தும் போராடிவரும் இவர், சிறுவயதில் குழந்தைத் தொழிலாளியாக விற்கப்பட்டு மீட்கப்பட்டவர். 16 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் கல்வி கற்கத் தொடங்கி சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேல் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் கிருஷ்ணகுமாரி வெற்றிபெற்றால் சிந்த் மாகாணப் பிரதிநிதியாகப் பணிபுரிவார்.

 

மாதவிடாய் விழிப்புணர்வுக் குரல்கள்

கிராமப் பெண்களுக்கும் ஆரோக்கியமாகவும் குறைந்த விலையிலும் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அவரது வெற்றிக் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்தித் திரைப்படம் அக்ஷய் குமார் நடித்த ‘பேட்மேன்’. அந்தப் படத்தின் உள்ளடக்கம் காரணமாக பாகிஸ்தான் தணிக்கை வாரியம் அதைத் திரையிட தடைவிதித்துள்ளது.

இந்த நிலைப்பாட்டை எதிர்த்து பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் girls at dhabas என்ற முகநூல் பக்கத்தில் தங்கள் கருத்துகளைப் பதியத் தொடங்கியுள்ளனர். அந்தப் பக்கத்தில் மாதவிடாய் தொடர்பான அனுபவங்களைப் பகிர்வதற்கும் அவர்கள் ஊக்குவித்துள்ளனர். பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வை அவமதிப்புக்குரியதாக இந்தத் தடை மூலம் மாற்றியுள்ளதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

 

கைவிடும் கணவன்களுக்குத் தண்டனை?

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு மூன்றாயிரம் புகார்கள் வெளிநாட்டில் வேலைசெய்யும் இந்தியர்களின் மனைவிகளிடமிருந்து வந்துள்ளன. உடல்ரீதியான வன்முறை, கணவன் வீட்டில் முறைகேடாக நடத்தப்படுதல், தகவலே இல்லாமல் இருத்தல், பண உதவியின்மை தொடர்பான புகார்கள் அவை. ஏற்கெனவே இதுபோன்ற புகார்கள் தொடர்பாக வெளிநாட்டில் வேலைசெய்யும் இந்தியக் கணவன்களைச் சட்டரீதியாக விசாரிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் கணவனுக்குச் சட்டரீதியாக அறிவிக்கை அனுப்பப்பட்டும் அவர் தரப்பிலிருந்து பதிலளிக்காமல் இருந்தால், அவரைக் குற்றவாளியாக அறிவிப்பதற்கும் அவரது பாஸ்போர்ட்டை ரத்துசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

விளாசித் தள்ளிய ஸ்மிரிதி

தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த பிப்ரவரி 14-ல் நடந்த ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 135 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இரண்டில் வெற்றிபெற்று இந்திய மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியது. முன்னணியில் உள்ளது. இந்திய அணியின் உதவி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அடித்த 55 ரன்களும் அணியின் வெற்றிக்கு உதவின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x