Published : 18 Feb 2018 10:50 AM
Last Updated : 18 Feb 2018 10:50 AM
‘வி
தவிதமாய் மீசை வைத்தோம்/வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்று கவிஞர் கந்தர்வன் கவிதை எழுதினார். வீரத்தை மீசையோடும் மீசையை ஆணோடும் இணைத்து இலக்கியங்களும் வரலாறுகளும் எழுதப்பட்டன. பெண்களுக்கும் வீரத்துக்கும் சம்பந்தமில்லை என ஆண்கள் எழுதிய வரலாறுகள் சொல்கின்றன. அவளுடைய வேலை என்னவென்றால் போர்க்களம் செல்லும் ஆண் மகனுக்கு நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி எடுத்து, ‘புறமுதுகு காட்டாமல் போரிட்டு வா’ என வழியனுப்புவது மட்டும்தான்.
கி.பி.15-ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டின் ஒரு நூறாண்டுப் போரில், பிரான்ஸ் நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து காப்பதற்கான போரில், தானும் பங்கேற்க விரும்பினார் இளம்பெண்ணான ஜோன். பெண் என்பதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் ஆண் வேடமிட்டுப் படையில் சேர்ந்தார். அவருடைய வீரத்தையும் போர்த் திறனையும் கண்டு வியந்தது உலகம்.
போரில் பிரான்ஸ் வென்றது. ஆனால், அவர் ஆண் எனப் பொய் சொல்லிப் படையில் சேர்ந்தார் என்பதற்காக (வேறு 70 குற்றச்சாட்டுகளோடு) திருச்சபை அவரை விசாரித்து மரண தண்டனை விதித்தது. ஜோன், உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். பெண்ணினத்தின் வீரம் செறிந்த வரலாற்றுச் சின்னமாக இன்றைக்கும், ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ நின்று எரிந்துகொண்டிருக்கிறார்.
பிற்காலத்தில் அமெரிக்காவில் பெண்ணிய இயக்கங்கள் பெண்களுக்கான வாக்குரிமை கோரி இயக்கம் நடத்திய நாட்களில் ஊர்வலங்களின் முகப்பில் ஜோன் ஆஃப் ஆர்க்கைப் போல ஆண் வேடம் பூண்ட பெண்கள் குதிரைகளில் வலம்வருவதை ஓர் குறியீடாகக் கொண்டிருந்தன.
தொடரும் சித்திர பிம்பம்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைப் பலரும் அறிவர். கட்டபொம்முவின் கதையில் ஒரு துணைக் கதாபாத்திரமாக வருபவர் வெள்ளையம்மாள். பாதர் வெள்ளை எனப்படுகிற வெள்ளையத்தேவனின் மனைவி. தான் வளர்த்த காளையை அடக்கிய வீரனைக் கரம் பிடித்தவர். அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் நம் மனங்களில் கட்டமைக்கப்படும் பிம்பம் எதுவாக இருக்கிறது? வெள்ளையத்தேவன் போருக்குப் புறப்படும்போது நெற்றித் திலகமிட்டு வழியனுப்பாமல்,
போகாதே போகாதே என் கணவா, நான்
பொல்லாத சொப்பனம் கண்டேனய்யா
பாழும் கிணறு இடியக் கண்டேன்; நம்மள்
மல்லி்கைத் தோப்பும் அழியக் கண்டேன்
குளிக்க மஞ்சள் அரைக்கையிலே
கம்புக்கரி போல் போகக் கண்டேன்
வெள்ளைச் சீலை முக்காடு போட்டு
வெளியிலே நான் போகக்கண்டேன்
(கட்டபொம்மு கதைப்பாடல் - நா.வானமாமலை)
- இப்படித் தலைவிரி கோலமாக அவனை வழிமறித்து ஒப்பாரி வைப்பவளாக மட்டுமே ஒரு சித்திரம் மீண்டும் மீண்டும் வரையப்பட்டது. அவர் ஆண் வேடம் பூண்டு வெள்ளையர் பாசறைக்குள் புகுந்து தன் கணவனைக் கொன்ற வெள்ளைக்காரத் தளபதியைக் கொன்று தன் கூந்தலை முடித்தவளாகக் கட்டபொம்மு கதையில் தடம் பதித்திருந்தாலும் ஒப்பாரி வைக்கும் பிம்பமே ஏற்றப்பட்டு இன்றுவரை நம் மனங்களில் நிற்கிறது. இன்றைய ‘பாகுபலி’ திரைப்படம்வரை இத்தகைய ‘வரைவு’ தொடர்கிறது.
ராணுவக் கோலம் பூண்டு, போர் உடையணிந்து வீரப் பெண்ணாகத் திகழும் தமன்னாவின் போராளிக் கதாபாத்திரத்தை, ஆண் மகன் நெகிழ்த்தி, மென்மையாக்கி நடனம் ஆடவிடுகிறானல்லவா? இந்தச் சித்திரம்தான் ஆணுக்குத் தேவைப்படுகிறது.
நவீன இந்தியாவில் தஞ்சைத் தரணியில் சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக விவசாயக் கூலிகளைச் செங்கொடியின் கீழ் அணி திரட்டிய தலைவர்களில் ஒருவர் மணலூர் மணியம்மாள். இளம் வயதில் விதவைக் கோலம் பூண நேர்ந்த அவர், பொதுவாழ்வில் இறங்கியபோது ஜிப்பா, வேட்டி அணிந்து ஆண் உடையில் வெளியேறினார். சிலம்பம் கற்றுக்கொண்டார்.
கையில் கம்புடன் கிராமம் கிராமமாகச் சென்றார். பண்ணையார்களின் சிம்ம சொப்பனமாக மாறிய அவரை 1953-ல் பண்ணையார்கள் காட்டு மானை ஏவி குத்திக் கொன்றனர். அவருடைய வாழ்க்கை வரலாறு எழுத்தில் வரவில்லை. ஆனால், தஞ்சைப் பகுதி உழைப்பாளி மக்கள் தங்கள் நாட்டுப்புறப் பாடல்களில் வீரம் விளைவித்த நாயகியாக அவரைப் பாடிவைத்தனர்.
கோட்டைக்குள்ளே நாங்க ருந்தோம்
கொடுமையெல்லாம் சகிச்சிருந்தோம்
சாட்டையடி கொண்டிருந்தோம் - நாங்க
சாணிப்பால் குடிச்சிருந்தோம்
கோட்ட சரிஞ்சி விழ
கொடி பிடிச்சி அம்மா வந்தா
சாட்டயடிக்கு முன்னே
சாகசங்க செய்து வந்தா..
மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை வரலாற்றை 1991-ல் நாவல் வடிவில், ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற தலைப்பில் அ.மங்கை எழுதினார். குழுவினர் மணியம்மாளின் வாழ்க்கையை நாடகமாக்கிப் பல இடங்களில் அரங்கேற்றினர். ஜான்சிராணி லட்சுமிபாயும் கிட்டூர் ராணி சென்னம்மாவும்கூட ஆணாக வேடம் பூண்டுதான் போரிட்டனர்.
மேலே குறிப்பிட்ட கதைகளில் எல்லாம் பெண்கள் ஆண் வேடம் பூண்ட பின்னர்தான் வீரத்தைக் காட்ட முடிந்தது. அவர்களை அப்படி இயக்கிய அன்றைய சமூக உளவியல் கவனத்துக்குரியது.
பெண் எப்போதும் வீட்டுக்குள்ளேயும் தெருவிலேயும் ஊருக்குள்ளேயும் பல சனாதன சமயக் கொடுமைகளுக்கும் சமூகப் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகி ஆணாதிக்கச் சட்டகத்துக்குள்ளும் ஒடுக்கப்பட்டிருப்பதால் அவற்றை மீறுவதற்கே போராளியாக மாற வேண்டிய சூழல் இருக்கிறது.
அதையும் தாண்டி, அவள் பொதுவெளிக்கு வந்து தேசிய அளவிலான தலைமைப் பாத்திரம் ஏற்று வரலாற்றில் இடம்பெறுவது மிக அரிதான காரியம்.
எழுதப்பட்ட வரலாற்றில்தான் பெண்ணின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டதேயன்றி, எழுதப்படாத வாய்மொழி இலக்கியத்தில் அவளுக்குரிய நியாயமான இடம் வழங்கப்பட்டே வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.
ஆகவேதான் இந்தியாவில் விளிம்புநிலை மக்களின் வாய்மொழி வரலாற்றுக் குறிப்புகளை வரலாற்றுச் சான்றாகக் கைக்கொள்ள வேண்டும் என முழங்கியபோது ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து பெண்ணியவாதிகளும் அதை வரவேற்றனர். வாய்மொழி இலக்கியங்கள் ஒரு காலகட்டம்வரைதான் கிடைக்கின்றன. அதற்குப் பிறகான வரலாற்றை அவற்றை நேரில் கண்ட வரலாற்றின் பகுதியாக, வாழ்ந்த பெண்களின் வாய்மொழிப் பதிவுகள் மூலம் ஈடுசெய்யலாம்.
மறுக்கப்பட்ட இடம்
எப்பேர்ப்பட்ட பெரிய குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் எழுதப்பட்ட வரலாற்றில் இடம்பிடிப்பது எளிதாக நடந்துவிடவில்லை. கல்வெட்டுகளில் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றமை குறித்து, 15,000 தமிழகக் கல்வெட்டுகளை வைத்து ஆய்வு செய்த லெஸ்லி சி.ஓர், ‘தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள்’ என்ற ஆய்வு நூலில் சொத்துடையவர்களாக இருந்த மேட்டிமை வகுப்புப் பெண்களும் அரசிகளும் கல்வெட்டுகளில் இடம் பிடித்திருப்பதைக் கூறுகிறார். அதுவும்கூட 12, 13-ம் நூற்றாண்டுகளுக்குப் பின் குறையத் தொடங்கி இல்லாமலே போவதாகக் குறிப்பிடுகிறார்.
கீழடி அகழாய்வில் கிடைத்த தங்கக்கட்டிகளில் ‘கோதை’ போன்ற பெண் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்களில் கோட்டோவியங்களும் பெயர்களும் காணக் கிடைக்கின்றன. கி.பி. முதலாம் நூற்றாண்டில் பெண் பெயர்கள் வரலாற்றுச் சின்னங்களில் இடம்பெற்றதைக்கொண்டும் பிற்காலத்தில் அவ்வழக்கு மங்கி மறைவதைக்கொண்டும் பெண்ணுக்கு மதிப்பிருந்த இனக்குழு வாழ்க்கைக் காலம் ஒன்று இருந்ததையும் மையப்பட்ட அதிகாரமும் ஆட்சியும் வலுப்பெற வலுப்பெற அவளுக்கான இடம் மறுக்கப்பட்டு வந்துள்ளதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT