Published : 18 Feb 2018 10:50 AM
Last Updated : 18 Feb 2018 10:50 AM

வான் மண் பெண் 43: பூமிக்காக எழுதும் பேனா!

யற்கையான எழுத்தாற்றல் என்பது வேறு. இயற்கையைப் பற்றி எழுதும் எழுத்தாற்றல் வேறு. முன்னது சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கும் என்றால், பின்னது வெகு சிலருக்கு மட்டுமே வரமாகக் கிடைக்கிறது.

காடு, மலை, கடல் என ஊர் ஊராகச் சுற்றி ஒரு கட்டுரை எழுதிவிடுவது சுலபம். ஆனால், நம் வீட்டைச் சுற்றியும் நகரத்தில் இருக்கும் இடத்திலும் நமக்குத் தென்படுகிற சின்னஞ் சிறிய உயிரினங்களை அவதானித்து, அவற்றைப் பற்றி எழுதுவது மிகப் பெரும் சவால். அந்தச் சவாலை மிகச் சிறப்பாக எதிர்கொண்டவர்களில் ஜானகி லெனினும் ஒருவர்.

காட்டுயிர் ஒளிப்படக்காரர், படத் தொகுப்பாளர், ஆவணப்பட இயக்குநர் எனப் பல முகங்கள் இவருக்கு இருந்தாலும், சூழலியல் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘மை ஹஸ்பண்ட் அண்ட் அதர் அனிமல்ஸ்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய தொடர்தான் இவரது அடையாளம்.

18CHNVK_JANAKI1rightபுத்தகங்கள் அறிமுகப்படுத்திய விலங்குகள்

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். விடுமுறைக் காலத்தில் தாத்தா, பாட்டி வசித்துவந்த கிராமத்துக்குப் போவார். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்கள், கிராமத்தில் பரந்து கிடந்த வயல்வெளிகள் மட்டுமே அவருக்கு இயற்கையுடனான தொடர்பாக இருந்தன. சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம்.

“நான் படித்த நூல்களில் உயிரனங்களைப் பற்றியவையே அதிகம். ஜெரால்ட் டியூரெல், ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் போன்றோரின் புத்தகங்கள் மூலம் உயிரினங்களைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் ஆகியவற்றின் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினேன். நாளடைவில் இவை எனக்குச் சலிப்பூட்டின. மனநிறைவைத் தரக்கூடிய வேறு துறைகளைத் தேடினேன்.

அப்போது பாம்பு இன பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர், தங்கள் கல்வி தொடர்பான ‘புராஜெக்ட்’டுக்குத் தேவையான குறும்படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பி என்னை அணுகினர். நானும் ஏற்றுக்கொண்டேன்.

அந்த நேரத்தில்தான் இந்தத் துறையில் நீண்டகால அனுபவம் உடையவரும் முன்னோடியயுமான ரோமுலஸ் விட்டேகரை (சுருக்கமாக ராம்) சந்தித்தேன். அப்போது அவரும் காட்டுயிர்கள் பற்றிய ஆவணப் படங்கள் தயாரிப்பில் ஈடுபட விரும்பினார். தொலைக்காட்சி ஊடக நிர்வாகிகள் தன்னுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களை ஈர்க்கக்கூடிய குறும்படம் ஒன்றை நான் தொகுத்துத் தர வேண்டும் என விரும்பினார். அப்படித்தான், ‘நேஷனல் ஜியாகராஃபிக்’ சேனலில் எலிகளைப் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கும் பணி எனக்குக் கிடைத்தது” என்கிறார் ஜானகி லெனின்.

சலிப்பை உடைத்த எழுத்து

அந்தப் படம் நிறைவடையும் தருணத்தில் அவர்கள் இருவரும் இணைந்து ‘ட்ராகோ ஃபிலிம்ஸ்’ என்ற ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். அதைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அடுத்த படம் தயாரிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த இடைவெளியில் தென்னிந்தியாவின் பல்வேறு காடுகளுக்கும் அவர்கள் சென்றார்கள். “காடுகளில் நாங்கள் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் யானைகள், பறவைகள், அட்டைகள், கரடிகள், வண்டுகள், தவளைகள் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டேன்.

பயணம் முடிந்து திரும்பியதும் அவற்றின் அன்றாட வாழ்க்கை பற்றி மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சென்னை முதலைப் பண்ணை, பெங்களூருவில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ ஆகியவற்றிலிருந்த நூலகங்களுக்குச் சென்றேன்” என்று சொல்லும் ஜானகி, அடுத்த திரைப்படத் தயாரிப்புக்கான ஒப்பந்தம் கிடைக்கும் முன் தன்னைப் பல வகையிலும் தயார்படுத்திக்கொண்டார்.

நாள் முழுதும் நீண்ட நடைப் பயணம் மேற்கொள்ளவும் பறவைகளின் குரலிருந்து அவற்றின் இனத்தைக் கண்டறியவும் காடுகளில் தங்குவதற்கு முகாம் அமைக்கவும் தேர்ச்சி பெற்றார்.

இப்படிக் காட்டுயிர்கள் பற்றிய ஆவணப் படங்கள் தயாரிப்பில் 10 ஆண்டுகள் ஈடுபட்டிருந்த ஜானகிக்கு அதிலும் சலிப்பு ஏற்பட்டது. “காடுகளில் ஏற்படும் அனுபவங்கள் மகிழ்ச்சியூட்டுபவையாக இருந்தாலும், தொலைக்காட்சி ஊடக நிர்வாகிகள், ஒளிப்பதிவாளர்கள், இதர குழு உறுப்பினர்களோடு ஒப்பந்தங்களைப் பேசி முடிவு செய்வது, எங்களுக்குத் தேவையான சரியான காப்பீட்டைப் பெறுவது போன்ற பல்வேறு பணிகள் எனக்குச் சலிப்பையே உண்டாக்கின.

இதனால், அதிலிருந்து விடுபட நினைத்தேன். படத்தொகுப்பு, தயாரிப்பு தவிர எனக்கிருக்கும் ஒரே திறமை எழுதுவது. எனவே, அதில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினேன்” என்று சொல்லும் ஜானகிக்கு எழுதுவதில் இதுவரை சலிப்பேதும் ஏற்படவில்லை.

18chnvk_janaki2.JPGவேறுபாட்டைப் புரிந்துகொள்ளுதல்

“இயற்கை, காட்டுயிர் ஆகியவற்றின் பாதுகாப்புப் பற்றி எழுதுகிறேன். அதனால் நான் இயற்கைப் பாதுகாவலர் ஆகிவிட முடியாது. பலருக்கும் இந்த வேறுபாடு புரிவதில்லை. ஒரு ராணுவச் செய்தியாளர் என்றால், போர்வீரராக முடியாது. அரசியல் விமர்சகர் என்றால், அரசியல்வாதி அல்ல. விதிவிலக்காக இரண்டையும் செய்யும் பலர் இங்கு இருக்கலாம். ஆனால், நான் அப்படி அல்ல.

இயற்கை அல்லது காட்டுயிர்ப் பாதுகாவலர் என்ற பெயரைப் பெறுவது எளிது. யார் வேண்டுமானாலும் தன்னைப் பாதுகாவலர் எனச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அவர் அந்தத் துறையில் முனைப்புடன் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

அப்படிப் பார்த்தால், என் கணவர் ராம் உண்மையிலேயே காட்டுயிர்ப் பாதுகாவலர். ஊர்வனவற்றின் பாதுகாப்புகாக அவர் தன் சுகங்களைத் தியாகம் செய்கிறார். அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பேரார்வமே உந்து சக்தியாக இருக்கிறது. அதற்கு நானும் ஆதரவாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

இந்தப் பூமி சிறந்த, ஆரோக்கியமான கோளாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்கு எழுத்தின் மூலமாக பங்களிக்க விரும்புகிறேன். இயற்கைப் பாதுகாப்புத் துறையில் நான் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்!” என்று நம்பிக்கையோடு முடிக்கிறார் ஜானகி லெனின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x