Published : 18 Feb 2018 10:38 AM
Last Updated : 18 Feb 2018 10:38 AM

வெல்லும் காதல்: பாகுபாட்டைத் தகர்க்கும் காதல்

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நவீனமாக மாறிக்கொண்டே இருந்தாலும் சாதி மட்டும் பலரது மனதில் அப்படியே இருக்கிறது. தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய பிறகே அதற்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்னும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், சமூகம் கட்டமைத்து வைத்துள்ள சாதி, மதம் எனும் தடைகளைத் தகர்த்தெறிந்து காதல் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு கரம்பிடித்தவர்கள் பலர் நம்மிடையே வெற்றிகரமாக வாழ்ந்துவருகிறார்கள்.

புரிதல்தான் காரணம்

“ஒருவருக்குக் காதல் வர நேரம், காலம் அவசியமில்லை. அதேபோல் சாதியும் மதமும் காதலுக்குப் பொருட்டல்ல” என்று சொல்கிறார். முற்போக்குக் கருத்தோ அரசியல் பின்புலமோ இல்லாத நூர்ஜஹான். 34 ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்டவர் இவர். தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நூலகத்தில்தான் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார்.

shutterstock_585625106

“அவர்தான் முதல்ல காதலைச் சொன்னார். அப்போ அவர் என்ன சாதி, மதம்னு எல்லாம் நான் பார்க்கலை. அவரோட நல்ல குணமும் என் மேல அவர் வைத்திருந்த புரிதலும்தான் என்னைக் கவர்ந்தது. என்னைத் திருமணம் செய்துகொள்ள என் அப்பாவிடம் அவர் கேட்டார். “என் பொண்ணைக் கடல்ல போட்டாலும் போடுவேனே தவிர உனக்குக் கட்டித்தர மாட்டேன்”னு அப்பா சொல்லிட்டார்.

உடனே இவர், “கடல்ல போடுற உங்க பொண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுங்க”ன்னு உரிமையோடு கேட்டார். பல எதிர்ப்புகளுக்குப் பிறகு எங்க கல்யாணம் நடந்தது. திருமணமான புதுசுல சின்ன வாடகை வீட்டுல மாத்து சேலைகூட இல்லாமல் இருந்த நாட்களை நினைச்சா இப்போகூடக் கண்கலங்குது.

ஆனா என் கணவர் மீது இருந்த நம்பிக்கை மட்டும் ஒரு துளிகூடக் குறையலை. அந்த நம்பிக்கைதான் நாங்கள் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த காரணமா இருக்கு” என்கிறார் நூர்ஜஹான்.

சிலர் காதல் திருமணம் செய்துகொண்டாலும் தங்களுடைய பிள்ளைகள் சாதி, மதம் மாறி திருமணம் செய்துகொள்வதை அனுமதிப்பதில்லை. ஆனால், நூர்ஜகான் - அண்ணாமலை தம்பதி, தங்களைப் போலவே தங்களுடைய மகள்கள் ஷகிலா, பானு ஆகியோருக்குச் சாதி, மதம் பாராமல் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

தன் காதல் திருமணம் கைகூட, தன் தந்தையின் பங்களிப்பு முக்கியமானது என்கிறார் நூர்ஜகான், அண்ணாமலை தம்பதியரின் மகளான ஷகிலா. இவரது காதலைப் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் உறவினர்களைச் சமாதானப்படுத்துவது பெரும் சவாலாக இருந்திருக்கிறது.

“நானும் என் கணவர் கிரியும் நீண்டநாள் நண்பர்களாக இருந்து திருமணம் செய்துகொண்டோம். பல எதிர்ப்புகளுக்கு இடையே எங்கள் சீர்திருத்த திருமணத்தைச் சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா தலைமையில் என் அப்பா நடத்திவைத்தார். என் மாமியார் இதுவரை என்னைச் சாமி கும்பிடச் சொல்லியோ இந்து மதப் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்றோ ஒரு நாளும் கட்டாயப்படுத்தியதில்லை. நான் வீதி நாடகங்களில் நடிக்கிறேன்.

இதுபோன்ற விஷயங்களைப் பெரும்பாலான புகுந்த வீடுகளில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை என் கணவர், மாமனார், மாமியார் இவங்களோட ஒத்துழைப்போடு பல வீதி நாடகங்களில் நடிக்கிறேன். சரியான புரிதலோட இருக்கறதாலதான் இதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கு” என்கிறார் ஷகிலா.

காதலுக்கு மொழியில்லை

சென்னை மாநகரம் 2015-ல் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, வட சென்னை திருவொற்றியூர், ஓட்டேரி, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்குத் தன்னார்வலர்களிடமிருந்து பொருட்களைப் பெற்று உதவியவர் சமூகச் செயல்பாட்டாளரான ஹேமாவதி. ஹேமாவின் காதலுக்குச் சாதி, மதம் மட்டுமல்ல; மொழியும் தடையாக இல்லை.

இவருடைய கணவர் ஷினு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். “ஷினுவின் தாய்மொழி மலையாளம். அவங்க கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவு முறை எல்லாம் எனக்குப் புதுசா இருந்தது. குடும்பத்தில் சாதி மாறித் திருமணம் செய்துகொள்வதில் பிரச்சினை இல்லைன்னாலும் வெவ்வேறு பிரச்சினைகள் இருந்தன. என் அம்மாவும் அவங்க அப்பாவும்தான் எங்க திருமணத்தை முன்னெடுத்து நடத்தினாங்க. பொதுவா திருமணத்துக்குப் பிறகு விட்டுக்கொடுத்து வாழணும்னு சொல்லுவாங்க.

ஆனா என்னைப் பொறுத்தவரை கணவன், மனைவி ரெண்டு பேருக்கு இடையில் புரிதல் இருந்தாலே வாழ்க்கையைச் சிறப்பா நடத்த முடியும். பணத்துக்காகவும் மத்தவங்க பேச்சுக்காகவும் சண்டைபோடக் கூடாது என்பதுதான் எங்க தாரக மந்திரம்” என்கிறார் அவர். இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தபோது, ஹேமா மாட்டிறைச்சியோடு நின்றபடி படம் எடுத்து ‘என் உணவு என் உரிமை’ என முகநூலில் வெளியிட்டுயிருந்தார்.

“அந்தப் படம் வெளியிட்டதற்காகத் தெரியாதவங்ககிட்ட இருந்தெல்லாம் மிரட்டல் வந்தது. அப்போ வீட்ல இருந்தவங்க பக்கபலமாக இருந்தாங்க. என் கணவரோட முற்போக்குச் சிந்தனையால் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும் என்னால் சாதிக்க முடியுது” என்கிறார் அவர்.

அச்சத்தைப் போக்குவோம்

தொலைக்காட்சி விவாதங்கள், கருத்தரங்குகள், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் எனப் பரபரப்பாக செயல்பட்டுவருபவர் வழக்கறிஞர் த. ஜீவலட்சுமி, இவர் கவிஞரும்கூட. “இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள மாரியப்பனை நான் திருமணம் செய்துகொண்டேன். முற்போக்குச் சிந்தனை கொண்ட எங்களுக்கே ஆணவக் கொலை குறித்து மனதின் ஒரு மூலையில் பயம் இருக்கத்தான் செய்தது.

18chlrd_jeeva த.ஜீவலட்சுமி, மரியப்பன் right

ஆனால், அதையும் மீறி நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் எங்கள் திருமணம் நடந்தது. குடும்ப உறவுகளில் எங்களைப் பற்றி முகத்துக்கு நேராக யாரும் பேசவில்லை என்றாலும் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கடந்து போவதற்கான மனநிலையைச் சீர்திருத்த திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இருவருக்குமான காதலை எல்லாத் தருணங்களிலும் கொண்டாடுகிறோம்.

எல்லா விஷயங்களிலும் இணைந்தே செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்திவருகிறோம். சாதி மாறிக் காதல் செய்தால் ஆணவக் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. அதற்குச் சமூக மாற்றத்துக்கான இயக்கங்களின் பங்களிப்பு அவசியம்” என்கிறார் ஜீவலட்சுமி.

சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொள்வது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது, சமூக மாற்றத்துக்கான திறவுகோலாகவும் அமையும் என்பதற்கு அதிகரித்துவரும் மதம்,சாதி கடந்து திருமணங்கள் கட்டியம் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x