Published : 07 Jan 2018 10:48 AM
Last Updated : 07 Jan 2018 10:48 AM

வான் மண் பெண் 39: ஒராங் ஊத்தன்களின் மனிதத் தாய்!

னித குலம் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு மிகப்பெரிய நன்றிக் கடன்பட்டிருக்கிறது. காரணம், அங்குதான் மானுடம் தழைத்துப் பின் அங்கிருந்து பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தது என்கிறது நவீன மரபணு அறிவியல். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே மனித குரங்கு பொது மூதாதை ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றியது.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் இறுதியானதாக இருக்கும் மனித குலம், இயற்கை மீது ஆளுகை செலுத்துவதில் முதன்மையாக இருக்கிறது. அவர்களுக்குப் பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு இருக்கிறது. அதனால்தான் உயிரின வகைப்பாட்டியலை அறிமுகப்படுத்திய கரோலஸ் லின்னேயஸ், மனித இனத்தை ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ என்று வரையறுத்தார். அதற்கு ‘விவேகமுள்ள நபர்’ என்று பொருள். ஆனால், நாம் விவேகத்துடன் இருக்கிறோமா?

அந்தக் கேள்விக்கான பதில், பிருட்டே கல்டிகாஸ் மேற்கொண்ட ஒராங் ஊத்தான்கள் பற்றிய ஆய்வில் இருக்கிறது!

குரங்குகளின் ரசிகை

1946 மே 10-ல் ஜெர்மனியில் பிறந்தார் பிருட்டே கல்டிகாஸ். இவருடைய முன்னோர்கள் அன்றைய சோவியத் யூனியனின் பிடியிலிருந்த லித்துவேனியாவைச் சேர்ந்தவர்கள். மரங்களுக்கும் ஆன்மிகத்தன்மை உண்டு எனக் கருதும் ‘ட்ரூயிடிஸம்’ எனும் மத இயக்கம் அந்த நாட்டில் பிரபலம். பிருட்டேவின் குடும்பத்தாரும் அந்த மத இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டுவந்தனர். அதனால் இள வயதிலிருந்தே இயற்கை மீது பிருட்டேவுக்கு இயல்பாகவே ஈர்ப்பு ஏற்பட்டது.

சிறுவயதில் உள்ளூரில் இருந்த நூலகத்துக்குச் சென்றது, இவரது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. அங்கு, ‘கியூரியஸ் ஜார்ஜ்’ என்ற பெயர் கொண்ட, வாழைப்பழம் சாப்பிடும் குரங்கை மையப்படுத்தி வெளிவந்த சிறார் புத்தகங்களை வாங்கிப் படித்தார். அதில் அந்தக் குரங்கு செய்யும் சேட்டைகளில் மயங்கினார். காலம் செல்லச் செல்ல, குரங்குகள் தொடர்பான நிறைய விஷயங்களைப் படிக்கத் தொடங்கினார். அவை பின்னாளில் அவர் ஒராங் ஊத்தன் வகைக் குரங்குகளை ஆய்வு செய்வதற்கு அடித்தளமாக அமைந்தன.

உள்ளிருந்து ஓர் அழைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1965-ல் பட்டப் படிப்புப் படிக்கச் சேர்ந்தார். அங்கு மானுடவியல் துறையைத் தேர்வு செய்தார். தவிர, தொல்லியல், உளவியல் ஆகிய துறைகளையும் தனது விருப்பப் பாடங்களாகத் தேர்வுசெய்து படித்தார். அப்போது ஏற்கெனவே சிம்பன்ஸி குரங்குகளைப் பற்றி ஆராய்ந்துவந்த ஜேன் குடால், கொரில்லாக்களைப் பற்றி ஆராய்ந்து வந்த டயான் ஃபாஸி ஆகியோர் குறித்து அவர் தெரிந்துகொண்டார்.

ஜேன் குடால், டயான் ஃபாஸி ஆகியோர் குரங்கினங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு வழிகாட்டியாகவும் அவர்களின் ஆய்வுக்கு நிதியுதவி செய்பவராகவும் இருந்தவர் லூயி லீக்கி என்ற தொல்லியல் நிபுணர். குரங்கினங்களை ஆராய்வதன் மூலம் மனிதர்களின் தோற்றம், அவர்களிடம் இன்று காணப்படும் சமூகமயமாதல் நடவடிக்கைகள், குடும்ப அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ள முடியும் என அவர் நம்பினார்.

அறிவியல் ரீதியாக மனிதர்களை ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ என்று வரையறுப்பது வழக்கம். அதற்கு அடுத்த கட்டமாக, அதாவது மனிதர்களாகவும் அல்லாத குரங்குகளாகவும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட முன்னோர்களை ‘ஹோமோ ஹபிலிஸ்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இப்படியொரு பிரிவைக் கொண்டுவந்ததே லூயி லீக்கிதான். தான்சானியா நாட்டில் தான் கண்டுபிடித்த மூதாதை எலும்புகளைக்கொண்டு, லீக்கி இந்தப் பிரிவை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒரு முறை பிருட்டே படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகத்துக்கு வந்து உரையாற்றினார் லீக்கி. அப்போது ஒராங் ஊத்தன் குரங்கினத்தைப் பற்றி ஆய்வுசெய்யும் தனது விருப்பத்தை லூயி லீக்கியிடம் பிருட்டே தெரிவித்தார். அவரின் ஆர்வத்தைப் பார்த்த லீக்கி, அதற்குச் சம்மதித்தார். மனிதர்களின் மூதாதையர்கள் ‘பிரைமேட்ஸ்’ பற்றி ஆய்வு செய்துவந்த ஜேன் குடால், டயான் ஃபாஸி, பிருட்டே கல்டிகாஸ் மூவரையும் ‘ட்ரைமேட்ஸ்’ (PRIMATES – TRIMATES) என்று விளையாட்டாக லூயி லீக்கி அழைப்பது வழக்கம்.

பின்னாளில் ஒராங் ஊத்தன் குரங்குகளுடனான தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதியபோது, ‘இந்தக் குரங்கினத்தை ஆய்வுசெய்வது எனக்கு உள்ளிருந்து வந்த அழைப்பு’ என பிருட்டே கல்டிகாஸ் குறிப்பிட்டார்.

காடுகளின் மனிதர்கள்

ஒராங் ஊத்தன் உள்ளிட்ட குரங்கினங்கள் ஆப்பிரிக்காவில் தோன்றியவை என்றாலும் தற்சமயம் இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ காடுகளில் மட்டுமே இவற்றைக் காண முடியும். பலரும் அந்தக் குரங்குகளை ‘ஒராங் உட்டான்’ என்று அழைக்கிறார்கள். அது தவறான உச்சரிப்பு. ‘ஒராங் ஊத்தன்’ என்ற மலாய் மொழிச் சொற்களுக்கு ‘காடுகளின் மனிதர்கள்’ என்று பொருள்.

ஒராங் ஊத்தன்களைப் பற்றி பிருட்டே கல்டிகாஸ் ஆய்வுசெய்யும்வரை அந்தக் குரங்கினத்தைப் பற்றி உலகுக்குத் தெரியவில்லை. 1971-ல் மழைக்காடுகள் நிறைந்திருக்கும் போர்னியோ காடுகளுக்கு ஆய்வு செய்ய சென்றார் பிருட்டே. எடுத்ததுமே காடுகளில் வாழ்ந்து வந்த ஒராங் ஊத்தன்களைப் பற்றி அவர் ஆய்வுசெய்து விடவில்லை. இந்தோனேசியாவில் அந்தக் குரங்குகளை வளர்ப்புப் பிராணிகளாக வளர்த்து வந்தனர். அது சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிந்தும் உயர் நிலை அரசு அதிகாரிகள் பலரும் ஒராங் ஊத்தன்களைத் தங்கள் வீடுகளில் மிகவும் மோசமான சூழலில் கூண்டுக்குள் வைத்து வளர்த்துவந்தனர்.

முதலில் அத்தகைய வளர்ப்புக் குரங்குகளைக் காப்பாற்ற பிருட்டே முடிவு செய்தார். குரங்குகளை வளர்த்துவந்த வீடுகளுக்குச் சென்று அவை காடுகளில் வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னார். சிலர் அவரது கருத்துகளை ஏற்றுக்கொண்டு குரங்குகளை அவரிடம் ஒப்படைத்தனர். அவரது கருத்துகளை ஏற்காதவர்களிடமிருந்து காவல்துறை மூலமாக வலுக்கட்டாயமாகக் குரங்குகள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்படி மீட்கப்பட்ட குரங்குகளில் சில நோய்வாய்ப்பட்டிருந்தன. அவற்றுக்கு மருத்துவ உதவி செய்வது, உணவு ஊட்டுவது என செவிலித் தாயாக இருந்து செயல்பட்டார் பிருட்டே கல்டிகாஸ்.

மரம் பணம் காய்க்காதா?

போர்னியோ காடுகளில் சுமார் 23 ஆண்டுகள் ஒராங் ஊத்தன்களைப் பற்றி ஆய்வுசெய்திருக்கிறார் பிருட்டே கல்டிகாஸ். கொண்டாட்டங்கள் இல்லாத இளமைப் பருவம், விவாகரத்தில் முடிந்த திருமணம், அவ்வப்போது நோய்க்கு ஆளாவது என அந்த ஆய்வுக்காக அவர் இழந்தவை நிறைய. ஆனால், அந்த ஆய்வில் அவர் கற்ற பாடங்கள்தான் இன்று ஒராங் ஊத்தன்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கான கருவிகளாக உள்ளன.

“ஒராங் ஊத்தன்களுக்கு உணவுதான் முதன்மை. அதற்குப் பிறகுதான் அவை இதர குரங்குகளுடன் நெருங்கிப் பழகுகின்றன. அவை எப்போதும் சுயசார்புடையவை. எதற்காகவும் எப்போதும் யாரையும் எதிர்பார்க்காத அவற்றின் குணம்தான், இதர குரங்கினங்களிடமிருந்து அவற்றைத் தனித்துக்காட்டுகிறது. நாம் இழந்த வெகுளித்தனத்தை ஒராங் ஊத்தன்கள் இன்னும் நினைவில் கொண்டிருக்கின்றன” என்பது அவரது ஆய்வுக் கண்டுபிடிப்புகளில் ஒன்று!

அந்த வெகுளித்தனம் இல்லாது போனதால்தான் இன்று மனிதர்கள், மரங்களை வெட்டுகிறார்கள். லாபம் சம்பாதிக்கக் காடுகளை அழிக்கிறார்கள்.

“காடுகள் என்றால் மரம். மரம் என்றால் லாபம். மரத்தில் பணம் காய்க்காது என்று யார் சொன்னது?” எனக் கேள்வி எழுப்பியவர், இன்றுவரையிலும் மழைக்காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் பாமாயில் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணப்பயிர் நடவுகளுக்கு எதிராகவும் இருப்பதன் எதிர்ப்பதன் மூலம் ஒராங் ஊத்தன்களுக்குப் பாதுகாவலாராகத் திகழ்ந்துவருகிறார் பிருட்டே கல்டிகாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x