Published : 07 Jan 2018 10:39 AM
Last Updated : 07 Jan 2018 10:39 AM

எசப்பாட்டு 17: காலம்தோறும் துரத்தும் நெருப்பு!

ஆண் - பெண் உறவு குறித்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆண் ஒருவர் சொன்ன கருத்தால் அதிர்ச்சியடைந்த பெண்ணுரிமைப் போராளி ஓவியா, அதுபற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த ஆண், “காம உணர்வோடு ஆண்கள் அலைகின்ற இரவு நேரங்களில் பெண்கள் ஏன் வெளியே வருகிறீர்கள்?” எனச் சொல்லியிருக்கிறார். பொதுவாக, ராத்திரி நேரங்களில் பெண்கள் வெளியேவரக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக நம் நாட்டில் இருந்துவருகிறது. அதனால்தானோ என்னவோ மகாத்மா காந்தி, “நள்ளிரவில் உடல் முழுக்க நகை அணிந்துகொண்ட இளம் பெண் ஒருத்தி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பத்திரமாக நடந்து செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் பெற்ற நாள்” என்று அறிவித்தார். பொருளாசையும் பெண் மீதான பாலியல் வன்முறையும் இல்லாத நாட்டை காந்தி கனவு கண்டார்.

ராத்திரி நேரத்தில் காம இச்சையுடன் ஆண்கள் அலைவார்கள் என்ற விளக்கம் அதிர்ச்சி அளித்தாலும், எல்லா ஆண்களுக்கும் அது பொருந்தாது என்றாலும், அதில் பகுதி உண்மையும் இருக்கிறது.

கட்டற்ற பாலுறவுக் காலம் தாண்டி மனித குலம் வரலாற்றில் நடந்தபோது, பகலில் பொருள் உற்பத்திக்கான உழைப்பு, இரவில் மனிதகுல மறுஉற்பத்திக்கான இணைதல் எனக் காலப் பிரிவினை செய்துகொண்டிருக்க வேண்டும்.

பெண்ணுக்கு மட்டும் கற்பு நெறியைத் திணித்த சமூகம் ஆணுக்கு அதைக் கட்டாயமாக்காமல் கண்டும் காணாமல் விட்ட இடைவெளியை இன்றுவரை ஆண் மனம் கண் சிமிட்டலுடன் பயன்படுத்திக்கொண்டுவருகிறது. அதில் இரவென்ன பகலென்ன?

எப்போதும் விழித்திருக்கும் ‘ஆண்’

மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் இன்று உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவர் சேட்டைகள் அரங்கேறிய காலம் இரவல்லவே? பட்டப் பகலில் பணி நேரத்தில்தானே? கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் எல்லாம் ‘ஆண்’ விழித்துக்கொள்வதால்தானே, “கொஞ்சம் தள்ளி நிற்கக் கூடாதா, ஏன் சார் இப்படி இடிச்சிக்கிட்டு நிக்கறீங்க? கண்டக்டர் கொஞ்சம் பஸ்ஸை நிறுத்துங்க..” என்ற பெண் குரல்கள் கேட்டபடி இருக்கின்றன? அது இரவா பகலா என்றில்லாமல் ஒலிக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால் ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் பகல் நேரத்திலேயே இக்குரல்கள் அதிகம் கேட்கும்.

ஒருமுறை அரசுப் பேருந்தில் நீண்ட பயணம் செய்ய பதிவுசெய்து மூன்றாவது வரிசையில் சீட் கிடைத்து ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தேன். இரண்டாவது வரிசை பெண்களுக்கு என்று அப்போது ஒதுக்கீடு இருந்தது. பெண்களுக்கான அந்த இரண்டாவது வரிசையின் ஜன்னல் ஓர இருக்கைக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருக்கும் ஒரு கை போகிற அளவுக்கான இடைவெளியைத் தகரத்தைப் பற்றவைத்து அடைத்திருந்தார்கள். மற்ற இருக்கைகளில் அந்த இடைவெளி இயல்பாக இருந்தது. ஒரு கணம் என் உடல் முழுதாக அதிர்ந்தது. ஓர் ஆணாக அந்தப் பின் இருக்கையில் அமர்ந்திருக்க மிகக் கேவலமாக உணர்ந்தேன். சீட்டை மாற்றிக்கேட்டு வேறு இருக்கையில் போய் அமர்ந்தேன். அந்த அடைப்பு ஒரு நெடிய வரலாற்றை என் மனக்கண்ணில் வரைந்து காட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்கள் மனச்செவியில் ஒலித்தன.

எதுதான் ஆணின் பாலுறுப்பாக இயங்குகிறது என்ற கேள்வி மனதில் எழுந்தது. பஸ்ஸில் கை, வேறு சந்தர்ப்பங்களில் முன் சீட்டுக்குக் கீழே நீளும் கால், நெரிசல் நேரங்களில் முதுகும் முழங்கையும் மூக்கும் என எல்லா உறுப்புகளுமே பாலுறவு உறுப்புக்களாகிப் பணியாற்றத் தொடங்கிவிடுகின்றன. ஆண்கள் எல்லோரும் இப்படியல்ல. ஆனால், பொதுவெளியில் ஒரே ஒருவர் இப்படி இருந்தாலே சூழலை நாசம் செய்துவிட முடியும். ஒரு பெண்ணையேனும் இயல்பாக இயங்கவிடாமல் செய்துவிட முடியும். அவள் மனதை வாழ்நாள் முழுமைக்குமாகக் காயப்படுத்திவிட முடியும். ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிட முடியும்.

பெண்ணைச் சிதைக்கும் வன்மம்

சென்னையில் ஒருமுறை நண்பர் குடும்பத்துடன் கடற்கரைக்குப் போயிருந்தோம். நண்பரின் இணையர், கல்லூரிப் பேராசிரியர். அவரது அறிவாற்றலும் ஆங்கிலப் புலமையும் எப்போதும் நான் வியந்து நோக்குபவை. நாங்கள் கடற்கரையை விட்டுச் சாலைக்கு வந்ததும் வரிசையில் நின்ற வண்டியை எடுக்க நண்பர் சென்றார். நான் குனிந்து என் செருப்புகளில் ஒட்டியிருந்த மணலை உதறிச் சுத்தம் செய்துகொண்டிருந்தேன். பேராசிரியை தன் குழந்தையைத் தோளில் வைத்தபடி நின்றுகொண்டிருந்தார். அப்போது எங்களை பைக்கில் கடந்துசென்ற ஒருவன், “பாப்பா கையிலே பாப்பா” என்ற மாதிரி ஏதோ சொன்னான். சரியாகக் காதில் விழவில்லை. ‘ஏய் நில்லு’ என்று நான் குரல் கொடுப்பதைக் கேட்க வண்டி நிற்கவில்லை. பேராசிரியை சட்டென உடைந்துவிட்டார். கண்களில் கண்ணீர் ததும்ப குழந்தையுடன் நடக்கத் தொடங்கினார். சிரிப்பும் பேச்சுமாகக் கடந்த அந்த மாலைப்பொழுதின் மனநிறைவைச் சிதைக்க ஒருவனால் முடிந்தது. ஒரு பெண்ணைப் பார்த்ததுமே ‘மூடு’ வந்துவிடுகிறதா ஆணுக்கு? பல காலம் கடந்துவிட்டபோதும் அந்தப் பேராசிரியரின் கண்ணீர் இன்றும் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

காமத்தை என்ன செய்வது?

என் செல்லமான மகள்களில் (நண்பரின் மகள்) ஒருத்திக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்துவைக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது, நண்பர் காலமாகிவிட்டபடியால். நல்ல பையன், நல்ல சம்பளம். பீடி, சிகரெட், மது என எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. ஆனால், எப்போது ‘மூடு’ வரும் என்று சொல்ல முடியாத அளவுக்குத் திளைக்கிற ஆளாக அந்த மாப்பிள்ளை இருந்திருக்கிறான். சமாளிக்க முடியாத கட்டத்தில் அவள் பேசத் தொடங்கினாள். எதிர்ப்புக் காட்டியிருக்கிறாள். பையன் வீட்டார் அவளைத்தான் திருத்த முயன்றார்கள். அவளுடைய அம்மாவிடம் எல்லாவற்றையும் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னிடம் சொல்லி அழுதாள். “எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கிறது பெரியப்பா.. அப்போதுகூட அவர் கதவைச் சாத்திவிட்டு…”

பெண்ணை உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வைதான் மையம் என்று நாம் முடிவுரை எழுதிவிடலாம் எளிதாக. ஆனால், இதை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்?

ஆண் மனதின் அரசியல் உணர்வு பத்திரிகைகள், விவாதங்கள், தொலைக்காட்சிகள் மூலமாகச் செதுக்கப்பட்டுச் சீர்படுத்தப்படுகிறது. அவரவர் துறை சார்ந்த, தொழில் சார்ந்த அறிவும் உணர்வும் பயிற்சிகள் மூலம் சீர்பட்டுச் செழுமை பெறுகின்றன. பொருளாதாரம் சார்ந்த அறிவும்கூடச் செதுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், ஆணின் காமம் சார் உணர்வும் அறிவும் ஆரோக்கியமாகப் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டுச் சீர்செய்யப்படாமல் இருட்டுக்குள் புதர் மண்டிய காடாக வளர்ந்தும் உறைந்தும் கிடக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமானாலும் அது ‘விழித்துக்’கொள்ளும் அபாய நிலையில் நீடிக்கிறது. ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் சில சேனல்கள் கிடைக்காமல் திருகிக்கொண்டும் ரிமோட்டில் மாற்றிக்கொண்டும் சலித்திருக்கிறோம். ஆணின் காம சேனல் மட்டும் எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் ‘பக்’ கெனப் பற்றிக்கொள்கிறதே, இது சரியா? பொதுத்தளங்களில் போட்டுடைத்துப் பேசிச் சீர்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்லவா?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு:tamizh53@gmail.com

 

 

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகிகளே,

எப்போதும் பெண்களைத் துரத்தும் இந்த நெருப்பை என்ன செய்வது? இதில் உங்கள் அனுபவம் என்ன, கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x