Published : 11 Feb 2018 11:26 AM
Last Updated : 11 Feb 2018 11:26 AM
ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் வலுவான பெண் ஒருவர் இருப்பது போலவே ஆணுடைய நேசத்தால் சரித்திரத்தில் இடம்பெற்ற பெண்களின் கதை இது. மரணம், கல்வியின்மை ஆகியவற்றைத் தாண்டி எழுத்து, அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய இவர்களின் வாழ்க்கைக்குப் பின்னால் அவர்களிடம் நேசத்துடன் இருந்த ஆண்களின் கனவும் காதலும் தூண்டுதலும் இருந்துள்ளன.
சமூகத்தின் மீது பரந்த நேசம்
ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலும் நேசமும் எத்தனை ஆழமாக இருப்பினும் அது சம்பந்தப்பட்ட இருவரை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் சாவித்ரிபாய் புலே, ஜோதிபா புலே இருவரும் வேறுவிதமான காதலர்களாக இருந்திருக்க வேண்டும். சாவித்ரி பாய், ஜோதிபாவை மணந்தபோது அவருக்கு ஒன்பது வயது. பெண் கல்விக்காகப் போராடிய ஜோதிபா முதலில் தன் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக தனது மனைவிக்கு கல்வி கற்பித்தார். அந்தக் கல்விதான் சாவித்ரியை ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் போராளியாக மாற்றியது.
குடும்பத்தாலும் சமூகத்தாலும் தொடர்ந்து புறக்கணிப்புக்கும் அவமதிப்புக்கும் உள்ளானாலும் அவர்கள் சேர்ந்து போராடினார்கள். புனேயில் உள்ள பிடேவாடாவில் 1848-ல் அவர்கள் உருவாக்கிய பள்ளிதான் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளி. சாவித்ரி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அந்தப் பிராந்தியத்தில் தனது வாழ்நாளில் 18 பள்ளிகளை இவர் உருவாக்கினார். பெண்கள், தலித் பிள்ளைகள் ஆகியோரின் கல்விக்கு எதிராக அவர் நடத்திய பள்ளியின் மேல் ‘சாதி இந்துக்கள்’ சாணியடித்த சம்பவங்களும் உண்டு.
சாவித்ரிபாய் புலே, மாற்றுச் சேலை ஒன்றுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார், அவ்வளவுதான். பெண் சிசுக்கொலை, பால்ய விவாகம் ஆகிய நடைமுறைகளுக்கு எதிராகப் போராடிய சாவித்ரிபாய் புலே, கணவரின் மரணத்துக்குப் பிறகு தனது இறுதிக் காலம்வரை தன் சேவையைத் தொடர்ந்தார்.
நெருப்பிலிருந்து பிறந்த கிளாரிந்தா
பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் பிரதாப சிம்மனின் குரு பண்டித ராவின் பேத்தி கோகிலா. அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகத்திலிருந்து இறந்துபோன கணவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியிருந்தால் இன்று அறியப்படாமலேயே போயிருக்கும். பிறந்த அன்றே பெற்றோரை இழந்தவர் கோகிலா. தாத்தாவால் வளர்க்கப்பட்டு முதியவர் ஒருவருக்கு பால்ய விவாகம் செய்து கொடுக்கப்பட்டார். இருபது வயதில் அந்தக் கணவரும் இறந்துபோனார்.
சொத்துப் பிரச்சினையை முன்னிட்டும் குல வழக்கப்படியும் அவரை வற்புறுத்தி உடன்கட்டை ஏற்ற உறவினர்கள் முயன்றனர். இதைக் கேள்விப்பட்ட ஆங்கிலேயத் தளபதி லிட்டில்டன், கோகிலா சிதையிலேறும் சமயத்தில் அவரைக் குதிரையில் வந்து காப்பாற்றிச் சென்று சிகிச்சையளித்தார். வீடு திரும்பினால் கொல்லப்படுவதற்கு வாய்ப்பிருந்த கோகிலாவைத் தளபதி லிட்டில்டன் தனது பங்களாவிலேயே பாதுகாத்து ஆங்கிலக் கல்விக்கும் ஏற்பாடு செய்தார். நேசம் மலர்ந்து, திருமணமும் செய்துகொண்டார். தென் தமிழ்நாட்டில் முதன்முறையாகக் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர் இவர்தான். கோகிலா, ராயல் கிளாரிந்தாள் ஆனார்.
திருநெல்வேலியில் அவர் ஆற்றிய சமயப் பணியும் மக்கள் பணியும்தான் அவரை சரித்திர நாயகியாக மாற்றின. பாளையங்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கிணறு ஒன்றை வெட்டினார். அந்தக் கிணற்றை மக்கள் ‘பாப்பாத்திக் கிணறு’ என்று அழைக்கின்றனர். அவர் தன் சேமிப்பில் உருவாக்கிய தேவாலயம் இன்றும் அவர் பெயரில் பாதுகாக்கப்படுகிறது. கிளாரிந்தாவுக்கும் தளபதி லிட்டில்டனுக்கும் மிடையிலான நேச உறவை வைத்து எழுத்தாளர் அ. மாதவையா எழுதிப் புகழ்பெற்ற ஆங்கில நாவல் ‘கிளாரிந்தா’.
தமிழில் எழுதவைத்த துணைவர்
தமிழில் சாதி இந்துக்கள், மேட்டுக் குடியினர் வாழ்க்கையே நாவல்களாக எழுதப்பட்ட காலத்தில் 1964-ல் நாஞ்சில் நாட்டில் பனைவிளை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ‘புத்தம் வீடு’ என்னும் முன்னோடி படைப்பை எழுதியவர் ஹெப்சிபா ஜேசுதாசன். பள்ளியிலேயே ஆங்கிலத்தில் சிறந்து விளங்கிய ஹெப்சிபா, ஆங்கில இலக்கியப் பேராசிரியராகவும் ஆனார்.
அவரது கணவரும் தமிழறிஞருமான பேராசிரியர் ஜேசுதாசன், ஹெப்சிபாவைத் தமிழ் இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் ஆற்றுப்படுத்தியவர். செய்யும் தொழில் சார்ந்து தாழ்வாகப் பார்க்கப்பட்ட பனையேறும் தொழிலாளர்களின் நிலையைத் தனது சுய அனுபவத்தின் அடிப்படையில் நாவலாக எழுதினார். அந்த நாவலின் கைப்பிரதியை எழுத்தாளர்கள் மௌனியும் சுந்தர ராமசாமியும் படித்துத் தமிழில் புதிய வகை எழுத்தாளுமையின் வருகையை உணர்ந்து உற்சாகப்படுத்தினர்.
இவர் அடுத்து எழுதிய ‘டாக்டர் செல்லப்பா’, ‘அநாதை’, ‘மா-னீ ’ நாவல்களும் முக்கியமானவை. தமிழ் இலக்கிய வரலாற்றைச் சொல்லும் நான்கு தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் தமிழுக்கு இவர் என்றைக்குமாக ஆற்றிய பங்களிப்பு.
நோபலை வென்ற காதல்
கதிரியக்க ஆய்வுக்காகவும் ரேடியம், பொலோனியம் தனிமங்களின் கண்டுபிடிப்புக்காகவும் உலகப் புகழ்பெற்றவர்கள் மேரி க்யூரி - பியரி க்யூரி தம்பதி. மேரி க்யூரியைக் காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னரே பியரி க்யூரி இயற்பியல் உலகில் க்வார்ட்ஸ் பேலன்ஸ் கண்டுபிடிப்புக்காகப் புகழ்பெற்றிருந்தார். 1903-ல் இந்தத் தம்பதி ஹென்றி பெக்யூரலுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். மேரிக்கும் பியரிக்குமான காதலும் திருமணமும் ஒரு விஞ்ஞானப் பாரம்பரியத்தை உருவாக்கக் காரணமாக அமைந்தது. அவர்களுடைய பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் விஞ்ஞானிகளாகத் திகழ்வதற்கு இருவரின் காதல் வாழ்வு அமைந்தது.
மேரியைப் பார்த்துப் பழகி ஓராண்டுக்குள் பியரி க்யூரி அவரிடம் திருமணத்துக்கான ஒப்புதலைக் கேட்டார். அப்போது மேரி க்யூரி, தான் ஒரு பெண் என்பதால் க்ரகாவ் பல்கலைக்கழகத்தில் இடம் மறுக்கப்பட்டதையடுத்து, தாயகமான போலந்துக்குத் திரும்ப நினைத்திருந்தார். ஆனால் பியரி அவரை வற்புறுத்தி பாரிசிலேயே தங்கச்செய்து திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார். திருமணத்துக்கான பிரத்யேக உடையை வாங்கினால் அதற்குப் பிறகு அதை அணிய முடியாது என்று மறுத்த மேரி க்யூரி ஆய்வகத்தில் பணிபுரிவதற்கு ஏற்ற கருநீல உடையையே திருமண உடையாகத் தேர்ந்து அணிந்துகொண்டது காதலுக்கும் அவர்கள் போஷித்த விஞ்ஞானத்துக்கும் சாலப் பொருந்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT