Published : 25 Feb 2018 12:10 PM
Last Updated : 25 Feb 2018 12:10 PM

வட்டத்துக்கு வெளியே: எல்லாம் கடந்த காதல்!

காதல் என்பது உடல் சார்ந்தது அல்ல. காதல் அழகையோ அறிவையோ தோற்றத்தையோ பார்த்தும் வருவதில்லை என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆண்-பெண் காதலைக் கொண்டாடும் இலக்கியங்கள், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் போன்றவர்களுக்கிடையே ஏற்படும் காதலையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் இலைமறை காயாகவே பதிவுசெய்துள்ளன. எப்படிச் சாதியையும் மதத்தையும் வென்று சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வையைக் காதல் மாற்றியமைத்ததோ அதேபோன்று சமீப காலத்தில் பாலின வேறுபாடற்ற காதல் குறித்த சமூகத்தின் பார்வையையும் அது மாற்றியமைக்க ஆரம்பித்துள்ளது.

உலக அளவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான உரிமைகளும் அவர்களுக்கான வாழ்க்கை முறையும் மேம்பட்டுவருகின்றன. ஆனால், நம் நாட்டில் இன்றும் திருநங்கைகள், திருநம்பிகள், தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்துப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேதான் அவர்கள் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையை வடிவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தொடரும் பயணம்

அப்படியான பாதை அமைத்தவர்களில் முக்கியமானவர் பரதநாட்டியக் கலைஞரான திருநங்கை பத்மினி பிரகாஷ். இவர், இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர். கோவை மாவட்டத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றிவரும் இவர், பொதிகைத் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கணவர் பிரகாஷ், யு.கே.ஜி. படிக்கும் மகன் ஜெய்ஸ்ரீதர் என அவரது வாழ்க்கை அழகானது; எளிமையானது. 13 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் திருமண வாழ்க்கையில் அன்பு கொஞ்சமும் குறையவே இல்லை என்கிறார் பத்மினி.

“என் கணவர் பிரகாஷ் என் உறவுக்காரர்தான். பள்ளி வயதிலேயே நாங்கள் நல்ல நண்பர்கள். எனக்குள் இருந்த பெண்தன்மை பள்ளி நாட்களில் நளினத்துடன் வெளிப்பட ஆரம்பித்தது. அதிர்ச்சியடைந்த என் குடும்பத்தினர் என்னிடம் ஏற்படும் மாறுதல்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் என்னை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். நான் எப்படியோ அங்கிருந்து வெளியேறினேன். வெளியுலக வாழ்க்கை அப்படியொன்றும் எளிதாக இல்லை.

அது மிகுந்த கஷ்டத்துடனும் துயரத்துடனும்தான் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சில ஆண்டுகள் கழித்து கோவை வந்தபோது பிரகாஷை மீண்டும் சந்தித்தேன். அவர் என் மீது வைத்திருந்த அன்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உணர்ந்த நான் நெகிழ்ந்துபோனேன். என் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் மலரத் தொடங்கியது. பிரகாஷ்தான் என்னிடம் முதலில் காதலைச் சொன்னார். மூன்று ஆண்டுகள் காதலித்துப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டோம். இதுவரை எங்களுக்குள் எந்த மனஸ்தாபம் வந்ததில்லை.

திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக குடும்பத்தை இழந்த நான், எனக்காக ஒரு குடும்பத்தை உருவாக்கியுள்ளேன். நான் பணிபுரியும் தொலைக்காட்சி நிலையத்தாரும் என் வீட்டைச் சுற்றியுள்ளவர்களும் எங்களுக்கு அருமையான நண்பர்கள். எங்கள் வாழ்க்கை தற்போது குழந்தை ஜெய்யைச் சுற்றிதான் உள்ளது” என்கிறார் பத்மினி.

பல தடைகளைக் கடந்து இந்நிலைக்கு வந்துள்ள பத்மினி பிரகாஷ், 2016-ல் நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். ஆனால், தற்போதுவரை தனக்குப் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை என்கிறார் பத்மினி. “எல்லோரையும் போலவே எங்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். பல திறமைகள் இருந்தும் எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக எனக்கு இன்னும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. பாலினத்தைக் கடந்து தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்” என்ற அவரது வார்த்தைகளில் இருக்கும் நியாயத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

மாயாவில் இருந்து ராஜீவர்

ஹரியாணா மாநிலத்தில், கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் மாயா. ஆனால், நடை, உடை, பாவனைகளில் சிறுவயதிலிருந்தே ஆணைப் போலவே செயல்படுவார். பள்ளித் தோழி சிவாங்கி மீது அளவற்ற அன்பு வைத்த மாயா, பின்னாளில் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பால்மாற்று அறுவை சிகிச்சை (sex reassignment surgery) செய்துகொண்டார்.

“சிறுவயதிலிருந்தே என்னை நான் ஒரு ஆணாகத்தான் உணர்ந்தேன். ப்ளஸ் டூ படித்தபோது என் பள்ளித் தோழியான சிவாங்கி மீது காதல் ஏற்பட்டது. ஆனால், எங்கள் குடும்பம் ஒரே பாலினத்தவர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதுதான் அறுவை சிகிச்சை செய்ய நினைத்தேன். சிவாங்கியின் ஒத்துழைப்பாலும் அன்பாலும்தான் என்னால் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகக் கடந்துவர முடிந்தது.

தற்போது இரு வீட்டாரின் ஒப்புதலுடன் எங்களின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறோம்” என சிவாங்கியின் கைகளைப் பிடித்தபடியே சொல்கிறார் மாயா (எ) ராஜீவர்.

பேசித்தான் ஆக வேண்டும்

சென்னையில் அனிமேஷன் துறையில் பணியாற்றிவரும் மோகன்குமார், தன்பால் ஈர்ப்பாளர். தன்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைக்காகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். “பொதுவாகத் தன்பாலின ஈர்ப்பாளர்களால் தங்களுடைய பாலியல் தேர்வு குறித்துப் பொதுவெளியில் பேச முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருப்பது சமூக வலைத்தளங்கள்தாம். நாங்கள் நினைக்கும் விஷயங்களை அவற்றில்தான் மனம்விட்டு வெளிப்படுத்த முடிகிறது. என் காதலரைக்கூட முகநூலில்தான் சந்தித்தேன்.

நான் வெளிப்படையாகத் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைக்கான கருத்துகளை வெளிப்படுத்தி வந்தேன். அதனால் தான் நாங்கள் இணைந்தோம். தற்போதுதான் நாம் இதைப் பற்றி ஓரளவு வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளோம். இப்போதும் பேசவில்லை என்றால் இனி எப்போதும் பேச முடியாது. நாங்களும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்ற மனநிலை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்” என்கிறார் மோகன்குமார்.

திருநங்கைகளின் உரிமைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் திருநங்கை அகாய் பத்மாஷலி, தன் நீண்டகால நண்பரான வாசுவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இவர்களைப் போன்றோரின் உரிமைப் போராட்டங்கள் சமூகத்தின் பார்வையை வெகுவாக மாற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x