Published : 11 Feb 2024 08:25 AM
Last Updated : 11 Feb 2024 08:25 AM
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக்குள் பூனைக்குட்டி வந்துவிட்டது. பிறந்து சில நாள்களே ஆன குட்டி என்பதால் தாயைத் தேடிப் பரிதவித்தது. நான் அதைத் தாயிடம் ஒப்படைப்பதற்காகத் தூக்கியபோது என் விரலைக் கடித்துவிட்டது. அதன் பற்கள் மிகக் கூர்மையாக இருந்ததால் சதை கிழிந்து ரத்தம் வந்தது. பூனை, நாய் என எது கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவரும் பூனை கடித்த இடத்தைச் சுத்தம் செய்து மருந்து பூசிவிட்டு ரேபிஸ் தடுப்பூசியை 0, 3, 7, 14, 28 என்கிற நாள் கணக்கில் ஐந்து தவணையாகத் தவறாமல் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி முதல் தவணை ஊசியைச் செவிலி ஒருவர் செலுத்தினார்.
நான்காம் தவணை ஊசியைச் செலுத்திக் கொள்ள மருந்தகத்தில் இருந்து ஊசியையும் மருந்தையும் வாங்கிக் கொண்டு அதே மருத்துவ மனைக்குச் சென்றேன். எனக்கு ஊசி பயம் என்பதால் எப்போதும் கண்களை இறுக மூடிக்கொள்வேன். அன்றைக்கு வந்த செவிலி நீண்ட நேரமாக மருந்தை ஊசிக்குள் செலுத்தப் போராடிக் கொண்டிருந்ததால் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகும், அவரால் மருந்தை ஊசியினுள் இழுக்க முடியவில்லை. பிறகு வெற்று ஊசியைக் கையால் மறைத்தபடி எனக்குச் செலுத்த வந்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
மருந்து நிரப்பப்படாத வெற்று ஊசியைச் செலுத்தினால், காற்றுக்குமிழிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து சிலநேரம் மரணம்கூட நேரும் என்று நான் படித்திருந்தேன். அதனால், “எத்தனை மி.லி. மருந்தை எடுத்தீர்கள்?” என்று அந்தச் செவிலியைக் கேட்டேன். “10 மி.லி.” என்றார் அவர். மருந்து நிரப்பப்பட்ட ஊசியைக் காட்டச் சொன்னேன். உடனே மறுபுறம் திரும்பி எதையோ தேடினார். மருந்து இருந்த குப்பியை எடுத்துக்கொண்டு சட்டென்று அந்த அறையைவிட்டு வெளியேறினார்.
சில நிமிடங்கள் கழித்து மருந்து நிரப்பப்பட்ட ஊசியோடு வந்தார். வெளியே சென்று சக செவிலியின் உதவியோடு ஊசியில் மருந்தை நிரப்பிக்கொண்டு வந்திருப்பார்போல. அதைப் பற்றிக் கேட்டபோது சரியாகப் பதில் சொல்லவில்லை. பிறகு நான் மருத்துவரிடம் புகார் செய்தேன். வேறொரு செவிலி வந்து ஊசியைச் செலுத்தினார். இனி இதுபோன்ற தவறுகள் நிகழாதபடி பார்த்துக்கொள்வதாகவும் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் அந்த மருத்துவமனையின் நிர்வாகி கேட்டுக்கொண்டார்.
வீடு திரும்பிய பிறகும் எனக்குப் பதற்றம் குறையவே இல்லை. மருத்துவர்களையும் செவிலியரையும் நம்பித்தான் நாம் மருத்துவ மனைக்குச் செல்கிறோம். அவர்கள் தரும் மருந்து, மாத்திரைகளைக் கண்ணை மூடிக்கொண்டு விழுங்குகிறோம். இந்தச் செவிலியைப் போன்ற சிலரால் நமக்கு அனைவர் மீதுமே அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. குறைந்தபட்சம் நம் கண்ணுக்குத் தெரிகிற விஷயங்களிலாவது விழிப்போடு இருப்போம் என்று என் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தச் சம்பவத்தின் வாயிலாக அறிவுறுத்தினேன்.
- சோபிதா, சென்னை.
நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT