Published : 18 Feb 2018 10:42 AM
Last Updated : 18 Feb 2018 10:42 AM
பெண்கள் பீர் குடிக்கத் தொடங்கியிருப்பது பயத்தை ஏற்படுத்துவதாக கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் கடந்த வாரம் நடைபெற்ற மாநில இளைஞர் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார். மனோகரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாகப் பல பெண்கள் ட்விட்டரில் #GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துகளையும் பீர் குடிக்கும் படங்களையும் அதிக அளவில் பகிர்ந்தனர்.
அதனால் அந்த ஹேஷ்டேக் வைரலானது. கோவா முதல்வர் தெரிவித்த கருத்து ஆணாதிக்கக் கருத்து என்றும், மது அருந்துவதில் பாலின பேதம் எதற்கு என்றும் பல பெண்கள் சமூக ஊடங்களில் பதிவிட்டனர்.
இந்த எதிர்ப்பலையைத் தொடர்ந்து மனோகர் பரிக்கர், “பெண்கள் மது அருந்துவது எனக்குக் கவலையளிப்பதாகத்தான் கருத்து தெரிவித்திருந்தேன். பயமுறுத்துவதாகச் சொல்லவில்லை. யாரையும் மது அருந்த வேண்டாம் என்று சொல்லவில்லை. என் கருத்து திரித்து வெளியிடப்பட்டுவிட்டது” என தெரிவித்திருக்கிறார்.
புடவை அணியத் தெரியுமா?
ஹார்வார்டு இந்திய மாநாட்டில் பிப்ரவரி 11 அன்று பேசிய பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி, “புடவை அணியத் தெரியாத இந்திய இளம்பெண்கள் வெட்கப்பட வேண்டும்” என்று விமர்சனம் செய்திருந்தார். “புடவை என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அதை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது” என்றும் அவர் சொல்லியிருந்தார்.
அவரது இந்த விமர்சனத்துக்குச் சமூக ஊடகங்களில் பெரும்பாலான பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சிக்கு எந்த உரிமையும் இல்லை; அவரது கருத்து முற்றிலும் பெண்களுக்கு எதிரானது என்றும் அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பல பெண்கள் ட்விட்டரில் பதிவுசெய்தனர். சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வலுக்க, தன் கருத்துக்காக சப்யசாச்சி மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT