Published : 18 Feb 2018 10:42 AM
Last Updated : 18 Feb 2018 10:42 AM
சென்னையில் நடந்த ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் இறுதி நாளில் சூபி இசை, நாமசங்கீர்த்தனம், பசுமையைக் காப்பாற்றும் செய்தியை உரக்கச் சொன்ன நவீன நாட்டியம் எனப் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும் ராமாயணக் கதாபாத்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட ‘மறதியானா’ நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இந்த நாடகத்தை எழுதி, இயக்கி நடித்தார் நடனக் கலைஞர் மதுஸ்ரீ. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத்தை பாகீரதியும் வெரோனிகாவும் தமிழ்ப்படுத்தினார்கள். தேவிகாவின் பின்னணிக் குரலும் அகிலாவின் பறை இசையும் நாடகத்தின் முக்கியத் தருணங்களில் கைகொடுத்தன. ஊரூர் ஆல்காட் குப்பத்தின் குழந்தைகளும் எண்ணூரைச் சேர்ந்த குழந்தைகளும் ராமாயணக் காப்பியத்தின் தாடகைக்கு ஆதரவாக ‘மறதியானா’ நாடகத்தின் வழியாகக் குரலெழுப்பினர்.
குழந்தைகள், “ராமாவ தெரியுமா... உங்களுக்கு ராமாவ தெரியுமா?” என்று பாடியபடி கதை சொல்ல ஆரம்பித்தனர். விசுவாமித்திரரின் யாகத்தைக் காப்பாற்றுவதற்காக அவருடன் வரும் ராமர், அவர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல் என ஆரம்ப கதையைக் குழந்தைகள் நகர்த்தினர். தாடகை எப்படிப்பட்ட பெண், பார்வதியின் பக்தையான அவளுடைய சிறப்புகள் என்னென்ன என்பதை நாட்டியத்தின் மூலமாகவும் வசனங்களின் மூலமாகவும் கண் முன் கொண்டுவந்தார் தாடகையாக நடித்த பாகீரதி.
வால்மீகி ராமாயணத்தில் யாகத்தை அழிக்கும் அரக்கியாக தாடகை சித்தரிக்கப்பட்டு ராமரால் கொல்லப்படுவாள். மலையாளக் கவிஞரான வயலார் ராமவர்மா எழுதிய தாடகா ராமாயணக் கவிதையை அடியொட்டி இந்த ‘மறதியானா’ நாடகத்தை எழுதியதாகச் சொல்கிறார் மதுஸ்ரீ.
வயலார் எழுதிய ராமாயணத்தில் தாடகா எனப்படும் தாடகை, தென்னாட்டின் திராவிட இளவரசி. பார்வதியின் பக்தையான அவள், கோயிலுக்குச் செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் வந்துகொண்டிருக்கும் ஆரிய இளவரசனான ராமரின் மீதான காதலைத் தெரிவிப்பாள். ஆனால், அவளது கோரிக்கைகளை விசுவாமித்திரர் மறுப்பார். அவளை அரக்கி என இழித்துப் பேசி, ராமனை அவள் மீது அம்பெய்திக் கொல்லச் சொல்வார். அவ்வாறே ராமனால் கொல்லவும்படுவாள். இந்தச் சம்பவங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும் தன் பக்தையான தாடகைக்கு நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என பார்வதி குற்ற உணர்வால் தவிப்பாள்.
“புராணக் கதைகளில் நமக்குக் காட்டப்படும் பாத்திரப் படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களையும் பலர் படைத்திருக்கின்றனர். அதற்கு வயலாரின் தாடகை ஓர் உதாரணம். அதனால்தான் பார்வதியின் வழியாகத் தாடகை பாத்திரத்தின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் இந்த நாடகத்தை அரங்கேற்றினோம்” என்கின்றனர் மதுஸ்ரீயும் பாகீரதியும்.
நாடகத்தின் இறுதியாகக் குழந்தைகள், “தாடகையைத் தெரியுமா… உங்களுக்குத் தாடகையைத் தெரியமா…” எனப் பாடியது முத்தாய்ப்பாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT