Last Updated : 25 Feb, 2018 12:11 PM

 

Published : 25 Feb 2018 12:11 PM
Last Updated : 25 Feb 2018 12:11 PM

மகளிர் கால்பந்து: புது வரலாறு படைத்த தமிழகப் பெண்கள்

ஐம்பது ஆண்டுகளாக விளையாடிவரும் தமிழக ஆண்கள் கால்பந்தாட்ட அணி, தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையை இதுவரை வென்றதில்லை. 23 ஆண்டுகளாகத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுவரும் மகளிர் கால்பந்தாட்ட அணி, இதற்கு முன்வரை அரையிறுதிவரை மட்டுமே சென்று திரும்பியிருக்கிறது.

தொடரும் இந்தச் சோக வரலாறுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் கோப்பை மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் தமிழக மகளிர் கால்பந்து அணியினர். முதன்முறையாகக் கோப்பையைப் பெற்று தமிழகத்துக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் இந்தக் கால்பந்து மங்கைகள்.

23-வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிஷாவில் உள்ள கட்டக் நகரில் ஜனவரி 28-ல் தொடங்கி பிப்ரவரி 14 வரை நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக மகளிர் அணி தொடக்கம் முதலே அமர்க்களப்படுத்தியது. லீக் சுற்றில் சிக்கிம், உத்தரகாண்ட் அணிகளைப் பந்தாடி தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது. காலிறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் ஒடிஷாவை எதிர்கொண்டது.

பலமான அணிகளில் ஒன்றான ஒடிஷாவைத் துவம்சம் செய்து 2-0 என்ற கோல் கணக்கில் விரட்டினார்கள் தமிழகப் பெண்கள். அரையிறுதியில் தமிழக அணி, பலம் மிக்க மேற்குவங்க அணியை எதிர்கொண்டது. இந்த அணியை அநாயசமாக எதிர்கொண்டவர்கள், 4-1 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தை ஊதித் தள்ளினார்கள்.

முக்கால் கிணறு தாண்டிய மகளிர் அணி, முழுக் கிணறையும் தாண்டுவார்களா என்ற கேள்வியே இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு பலரது மனங்களிலும் எதிரொலித்தது. காரணம், தமிழக மகளிர் அணி எதிர்கொண்டது அசுர பலம் மிக்க மணிப்பூர் அணியை. தேசியக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்த அணி 18 முறை கோப்பையை வென்றிருக்கிறது.

இறுதிப் போட்டியைச் சந்தித்த அனுபவம் இல்லாத தமிழக அணியை மணிப்பூர் அணி எளிதாக மண்ணைக் கவ்வச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டியில் நடந்த கதை வேறு.

முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிற்பாதியில் மணிப்பூர் வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அணி இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றதால், நம் பெண்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மணிப்பூர் அணி 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பரபரப்பூட்டியது.

ஆட்டம் முடியும் தறுவாயில் மணிப்பூர் வீராங்கனைகள் குழுவாக ஈடுபட்டு கோல் அடிக்கப் பகீரத முயற்சி எடுத்தனர். ஆனால், அந்த முயற்சி அனைத்தையும் தமிழக வீராங்கனைகள் தகர்த்தனர். இதனால் ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றுக் கால்பந்து ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது தமிழக மகளிர் அணி.

பயிற்சியால் கிடைத்த வெற்றி

இந்த வெற்றியின் மூலம் சீனியர் மகளிர் அணி தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியிருக்கிறது தமிழகம். இந்தத் தொடரில் தமிழக வீராங்கனைகள் 25 கோல்களை அடித்து அசத்தினார்கள். இதில் 10 கோல்களை அடித்து சாதனை படைத்தார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்துமதி.

25chbri_football team இந்துமதி right

அவரே சாம்பியன்ஷிப் போட்டியின் ஆட்ட நாயகியாகத் தேர்வானார். பி.காம். படித்துள்ள இவர், சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.

“தொடர் தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நாட்கள் சென்னையில் கடுமையாகப் பயிற்சி செய்தோம். பயிற்சிக்காக ஆண்கள் விடுதி அணியினருடன் மோதி நாங்கள் தயாரானோம். எங்களுடைய கடுமையான பயிற்சியும் முந்தைய தொடர்களில் கிடைத்த அனுபவமும்தான் எங்களுக்குக் கைகொடுத்தன.

மணிப்பூர் அணியில் உள்ளவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் இணைந்து விளையாடியிருக்கிறோம். அதனால் அவர்களின் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து அதற்கேற்ப எங்கள் திட்டமிடலை அமைத்துக்கொண்டோம். இதுதான் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது” என்கிறார் இந்துமதி.

மிகுந்த உடல் உழைப்புகொண்ட கால்பந்தாட்டத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போவதால், பல இளம் பெண்களும் தற்போது கால்பந்து விளையாட ஆர்வம் காட்டுவதில்லை என்ற வேதனையையும் மகிழ்ச்சிக்கு இடையே இந்துமதி பகிர்ந்துகொண்டார்.

இந்தத் தொடரில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள்; சாதாரணக் குடும்பப் பின்னணி உள்ளவர்கள். தங்களுடைய ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச அனுபவம்பெற்ற மணிப்பூர் அணியை மண்ணைக் கவ்வவைத்துத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x