Last Updated : 04 Feb, 2018 11:57 AM

 

Published : 04 Feb 2018 11:57 AM
Last Updated : 04 Feb 2018 11:57 AM

வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண்

 

மெரிக்க அமெண்டாவைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்தது இசையின் மீதான ஈர்ப்பு. கர்னாடக சங்கீதம், சினிமா இசை ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்து, அதைப் புத்தகமாகக் கொண்டுவருகிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமெண்டா வைண்ட்மென். தெள்ளுத் தமிழில் தங்கு தடையின்றிப் பேசுபவரைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் அதிகம்.

‘‘இசையின் வரலாறு, அதன் கலாச்சாரம் குறித்துப் பாடம் நடத்திட்டிருக்கேன். சின்ன வயசுலயே வெஸ்டர்ன் வயலின் வாசிப்பேன். அப்படிக் கத்துக்கிட்டதால இந்தியன் மியூஸிக் மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுச்சு. குறிப்பா, கர்னாடக சங்கீதத்தின் மேல. அதைக் கேட்கக் கேட்க என்னவோ பண்ணுச்சு. 93-ல் காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப சென்னைக்கு வந்தேன். இங்கே வயலின் கத்துக்கிட்டேன். என்னோட குரு, துவாரம் மங்கைத்தாயார். துவாரம் வெங்கட்சாமி நாயுடுவோட மகள்’’ எந்த யோசனையும் செய்யாமல் மளமளவெனப் பேசுகிறார்.

“சென்னைக்கு வந்தப்ப தமிழ் சினிமா பார்த்தேன். அப்ப வந்த பல படங்களோடு பழைய படங்களையும் பார்த்தேன். அப்படித்தான் தமிழ் சினிமாப் பாடல்கள் எனக்கு அறிமுகமாச்சு. குறிப்பா, பழைய பாடல்களும் அந்த மெட்டுகளும் குரல்களும் இத்தனை வருஷமா கேட்காம விட்டுட்டோமேனு ஏங்க வச்சுச்சு. அப்படிக் கேட்கும்போது டிஎம்எஸ்-ன் குரல் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. அமெரிக்காவுக்கு வந்திருந்தப்ப அவரை நான் பாத்தேன். அப்ப அவர் யாருன்னே தெரியாது எனக்கு. சென்னைல அவரைச் சந்திச்சப்பதான் இதை உணர்ந்தேன்’’ என்று சொல்கிறார்.

 

டிஎம்எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி காலத்துக்கும் முன்னதாகத் தொடங்கி, எஸ்.பி.பி., ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோருடன் தற்போதைய பாடகர், பாடகிகள் இசையமைப்பாளர்கள்வரை பலரைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து, அதைப் புத்தகமாகவும் அமெண்டா எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ் இசையைப் புரிந்துகொள்வதற்காகவே மதுரையில் தமிழ் மொழியை கற்றுக்கொண்டார். இது தமிழ் சினிமா இசையைக் கேட்கவும் ரசிக்கவும் பயன்படுவதாகச் சொல்கிறார்.

 

‘Brought To Life By The Voice’ என்ற தலைப்பில் தான் எழுதிவரும் புத்தகத்தில் தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக அமெண்டா சொல்கிறார்.

“அமெரிக்காவில் பாப் மாதிரியான இசை உண்டு. ஆனால், சினிமாப் பாடல்களோட தாக்கம் இங்கே அதிகம். எங்கே வேணும்னாலும் கேட்க முடியுது. தெருவுல, வண்டி ஓட்டிக்கிட்டுப் போகும்போது, விழாக்கள்னு சினிமாப் பாட்டுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அங்கே சினிமாவுல இசை இருக்கும். பாட்டு கிடையாது. இங்கே சினிமாவும் முக்கியமான விஷயம். சினிமாவுக்கு ஒரு பவர் இருக்கு.

இங்கே சினிமாவுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கு. ஆனால், அங்கே அப்படியில்லை. அங்கே சினிமாவுல இருக்கறவங்க பெரும்பாலும் அரசியலுக்கு வரமாட்டாங்க. ஆனா இங்கே சினிமாவும் அரசியலும் சேர்ந்தேதான் இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் அமெண்டா.

அமெண்டாவின் வீடியோ பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.

 ''பாட்டும் நானே பாவமும் நானே!'' - அசத்தலாய் தமிழ் பேசும் அமெரிக்க அமெண்டா ''பாட்டும் நானே பாவமும் நானே!'' - அசத்தலாய் தமிழ் பேசும் அமெரிக்க அமெண்டா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x