Published : 25 Feb 2018 12:11 PM
Last Updated : 25 Feb 2018 12:11 PM
இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகவேகமாகக் குறையும் நிலையில் உள்ளது. இதில் குஜராத் மாநிலம் அபாயகரமான நிலையில் 53 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் ஆண்களுக்கு 907 ஆக இருந்த பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், சமீபத்திய கணக்கெடுப்பில் 854 ஆகக் குறைந்துள்ளது.
நிதி ஆயோக் அமைப்பு நடத்திய இந்த ஆய்வு முடிவுகளில் பெண் சிசுக்கொலை குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தையடுத்து ஹரியாணா 35 புள்ளிகள் பெற்று இரண்டாம் நிலையில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ள மாநிலங்களாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகியவை உள்ளன.
ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் கே. பொன்மணிதேவி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக அளித்துள்ளார். தற்போது 80 வயதாகும் பொன்மணிதேவி 1964-ல் ஆசிரியையாகப் பணியைத் தொடங்கினார்.
கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ள மொடச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து 1996-ல் ஓய்வு பெற்றார். 2006-ம் ஆண்டு தனக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தைப் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் விடுதி ஒன்றைக் கட்டுவதற்காகக் கொடையாக அளித்தார்.
அதோடு அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2 லட்சம் ரூபாயை அளித்தார். தற்போது அவர் அளித்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய்.
சவுதியில் பெண்கள் தொழில் தொடங்கலாம்
கணவர் அல்லது ஆண் உறவினரின் அனுமதியின்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்குவதற்கு நெடுங்காலமாக இருந்த தடையை அந்நாட்டு அரசு சமீபத்தில் நீக்கியுள்ளது. சவுதி அரேபியாவில் தனியார் துறையினரின் முதலீட்டை அதிகப்படுத்தவும் பெண்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் சவுதி அரேபிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அத்துடன் விமான நிலையங்களிலும் எல்லைப் பாதுகாப்புச் சாவடிகளிலும் சவுதி அரசு முதன்முறையாக 140 பணியிடங்களுக்குப் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமதுபின் சல்மானின் முயற்சியால்தான் பெண்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்படிச் சொன்னாங்க
நீங்கள் மேலும் மேலும் வெற்றிகளை அடையும்போது பாலினரீதியான தடை மறையத் தொடங்குகிறது. நீங்கள் வெற்றிகளை நிகழ்த்தத் தொடங்கும்போது, நீங்கள் வளரத் தொடங்கும்போதிருந்த நம்பகத்தன்மை தொடர்பான சவால்கள் மறைந்துபோகின்றன.
- கிரண் மஜும்தார், இந்தியத் தொழிலதிபர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT