Published : 14 Jan 2024 09:09 AM
Last Updated : 14 Jan 2024 09:09 AM
என் அக்கா 2006இல் பிரசவத்துக்காகத் தாய் வீட்டிற்கு வந்தபோது ‘பொன்னியின் செல்வன்’ படித்துக்கொண்டே இருப்பார். அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதான் இருக்கிறதோ என நினைப்பேன். கட்டை கட்டையாக ஐந்து பாகங்கள். நான்கு வருடங்கள் கழித்து சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல நேர்ந்தது. அங்கே 300 அரங்குகளுக்கு மேலே இருந்தன. சுற்றிச் சுற்றிப் பார்த்ததில் எங்கே பார்த்தாலும் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் மட்டும் இருப்பதுபோல் தோன்றியது. வேறு எந்தப் புத்தகத்தின் மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. என் அக்கா அதை லயித்துப் படித்தது என்னுள் அப்படியே பதிந்திருந்ததுதான் காரணம். அதுதான் 800 ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கவும் வைத்தது.
அக்கா படித்த அதே கட்டையான ஐந்து பாகங்களும் இப்போது என்னிடமும் உள்ளன. புத்தகத்தைச் சுற்றியிருந்த கண்ணாடித் தாளைப் பிரித்தேன். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். ஒரு படம்கூட இல்லை. வெறும் எழுத்துக்கள் மட்டுமே இருந்தன. இதை எப்படிப் படிப்பது என்று நான் மலைத்துவிட்டேன். எடுப்பேன் படிப்பேன் புரியாது.. பிடிக்காது.. தூக்கம் தூக்கமாக வரும். பத்துப் பக்கம் படிக்கும் முன் 800 ரூபாய் வீண் என நினைத்து மிகவும் வருந்தியதுண்டு. ஆனால், பத்து, பதினைந்து, இருபது எனக் கடந்தபோது என்னை அறியாமல் மூழ்கிப்போனேன். ஐந்து பாகங்களும் விரைவில் முடிந்துபோயின. அற்புதமான படைப்பு. அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் குந்தவையும் சேந்தன் அமுதனும் இன்னும் என் நினைவில் வந்து போகிறார்கள்.
அதைத் தொடர்ந்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை என அடுத்தடுத்துப் படிக்கும் ஆர்வம் எழுந்தது. ‘சிறுவர் மணி’யில் வரும் சின்னஞ்சிறு கதைகளைக்கூடப் படிக்காமல் படம் மட்டுமே பார்த்து வந்த நான், புத்தக வாசிப்புக்குள் மூழ்கியது என் அக்காவின் மூலம்தான். கல்கியில் ஆரம்பித்த என் வாசிப்பு ஆர்வம் சாண்டில்யன், எஸ். ராமகிருஷ்ணன், ராபின் சர்மா என வளர்ந்துகொண்டே இருக்கிறது.
- அகிலா பாலன், சிவகங்கை.
புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT