Published : 24 Aug 2014 09:08 AM
Last Updated : 24 Aug 2014 09:08 AM
தன் 5 வயது மகன் சப்வே சர்ஃப் என்ற மொபைல் விளையாட்டில் ஒரு லட்சம் பாயிண்ட்டைத் தாண்டியதைப் பெருமிதத்துடன் தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் அப்டேட் செய்திருந்தார் ஓர் அம்மா. ஸ்மார்ட் போன், ஐபேட், டாப்லெட் இதில் ஏதாவது ஒன்றை, இன்றைய இரண்டு வயதுக் குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டுப் பொருளாகவே நாம் பார்க்க முடிகிறது. தம் குழந்தையை அதிபுத்திசாலியாக வளர்க்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் இதைப் பெருமையாகவே எண்ணத் தொடங்கிவிட்டனர்.
இடையூறு தவிர்க்க இதுவா வழி?
போன் மற்றும் டாப்லெட்களில் விளையாடும் கேம்கள் பெரும்பாலும் இண்டெர்நெட்டிலிருந்து டவுன்லோடு செய்யப்பட்டவையாகவே இருக்கும். இதனால் பலமுறை நம்மை அறியாமலே நம் போனில் உள்ள விவரங்கள் நெட்டில் போவதற்கான சாத்தியம் அதிகம். அதே சமயம் இது போன்ற கேம்களை விளையாடிக் கொண்டிருக்கும்போது நடுவில் வேறு சில இணையப் பக்கங்கள் பற்றிய விளம்பரங்கள் வருவது வழக்கம். விளையாட்டு சுவாரசியத்தில் அதை கிளிக் செய்துவிட்டால் அது நம்மைத் தேவையில்லாத இடத்துக்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. பெரியவர்களுக்கே இதைத் தவிர்க்க முடியாதபோது குழந்தைகள் தம்மை அறியாமல் வேண்டாத வலைத்தளங்களுக்குச் சென்றுவிடலாம்.
தங்கள் பணியில் குழந்தையின் இடையூறைத் தவிர்க்கஅவர்கள் கையில் போனைத் திணித்துவிட்டுக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.
சமூக வலைதளங்களில் குழந்தைகள்
சிறுவர்கள் பலரும் சுமார் 8 வயதிலிருந்தே ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்களில் சேர்ந்துவிடுகின்றனர். போலியான பிறந்த வருடத்தைப் பதிவுசெய்து புனைபெயரில் சுலபமாக நுழைய முடிவதால் குழந்தைகள் பலருக்கும் சாட் மற்றும் சமூக வலைகளில் அக்கவுண்ட் இருப்பது பல பெற்றோர்களுக்கே தெரியாத ரகசியம். தங்களுக்குத் தெரிந்த, தெரியாத நண்பர்களுடன் சாட் செய்வது, புகைப்படத்தை ஷேர் செய்வது என்று பின்விளைவு பற்றி அறியாத பிஞ்சுகள் பல, இணைய வலையில் சிக்கிக்கொண்டு மீள முடியாது தவிக்கும் உதாரணங்கள் ஏராளம். குழந்தையின் போட்டோவைத் தவறாகப் பயன்படுத்துதல், குழந்தையின் விவரங்களைத் தெரிந்துகொண்டு கடத்திவைத்து மிரட்டுதல், வேறு நோக்கத்துக்காகப் பெற்றோர் பற்றிய விவரங்களை அறிதல் என்று இணையத்தின் மூலம் திருட்டுக் கும்பல் பல உலகமெங்கும் உலா வருவது அவ்வப்போது செய்தியாக வெளிவந்துகொண்டும் இருக்கிறது.
ஆபத்தான ஆப்ஸ்
ஸ்மார்ட் போன், டேப்லெட்களில் சுலபமாக பிரவுஸ் செய்ய ஆப்ஸ் டவுன்லோடு செய்வது அவசியம். லட்சக்கணக்கான இலவசமான ஆப்ஸ் பற்றி விவரம் அறியாத குழந்தைகள் அவற்றை டவுன்லோடு செய்து உபயோகப்படுத்தத் தொடங்குகின்றனர். போன், ஐபேட் மூலம் இதனை உபயோகப்படுத்தும்போது ஒருவர் எந்த இடத்திலிருந்து இதைச் செய்கிறார் என்று இணையதளத்தில் பதிவாகிவிடுகிறது. இந்த விவரம் பதியாமல் இருக்க பிளாக் செய்ய முடியும் என்றாலும் சிறுவர்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறிவிடுவர். இதுவே பின்னர் பெரும் ஆபத்துகளை வரவழைத்துவிடும்.
ஆஸ்க்.எஃப்எம் (ask.fm)
தெரிந்த, தெரியாத நபர்களிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்டுப் பதில் பெற முடியும் சாட் சைட் இது.
கிக் (kik)
இது 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக உள்ள சாட் ஆப்ஸ் என்று சொல்லப்பட்டாலும் அதற்குக் கீழ் உள்ள குழந்தைகளும் இதை அதிகம் உபயோகப்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும் இதில் குழந்தைகளுக்குத் தேவையில்லாத பாலியல் படங்களைப் பரிமாற்றிக்கொள்வது கூடுதல் ஆபத்து.
ஸ்னாப்சாட் (snapchat) மற்றும் போக் (Poke)
குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படும் இவை போட்டோக்கள் பரிமாறிக்கொள்ள வகை செய்கிறது. சில நொடிகள் மட்டுமே இணையத்தில் இருந்துவிட்டு மறைந்துவிடும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் உண்மையில் அந்த போட்டோக்கள் இணையத்தின் சர்வர்களில் சேவ் செய்யப்பட்டுவிடுவது அவர்களுக்குத் தெரிவதில்லை. பார்ப்பவர்களும் அதை சேவ் செய்துகொள்ள முடிகிறது.
17 வயதுக்கு மேல் உள்ளவர்களை அனுமதிக்கும் இந்த ஆப்ஸ்கள், இளைஞர்களுக்கும்கூடப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றே சொல்ல வேண்டும்.
கண்காணிப்பு அவசியம்
குழந்தைகளை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது பெற்றோரின் கடமை. நாம் நேரில் ஒருவரிடம் பேசத் தயங்கும், பகிர்ந்துகொள்ள முடியாத எந்தத் தகவலையும் இணையத்திலும் பகிரக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.
குழந்தையுடன் அமர்ந்து அவ்வப் போது அவர்கள் உபயோகிக்கும் ஆப்ஸ் என்னென்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டறிந்து, அவர்கள் இல்லாதபோது போன், டேப்லெட்டை அலசுவது ஒரு தாயின் முக்கிய வேலை.
வயதுக்குத் தேவை இல்லாத ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய இயலாத வண்ணம் பிளாக் செய்யலாம். முக்கியமாக போட்டோ, வசிக்கும் இடம் பற்றிய தகவலைப் பகிர முடியாதபடி கட்டுப்படுத்த செட்டிங்க்ஸில் மாற்றம் செய்வது நல்லது. முடிந்தவரை குழந்தைகளைத் தனியாக இண்டெர்நெட் பார்க்க அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆன்லைனில் எவரேனும் தவறாகவோ, அத்துமீறியோ செயல்பட்டால் அதைப் பற்றி உடனடியாகத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.
இத்தனை ஆபத்து நிறைந்த இணையம் தேவையே இல்லை என்றும் கண்மூடித்தனமாக நிறுத்தக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். குழந்தைகள் அருகில் நிழல்போல் இருந்து அன்புடன் அறிவுரை கூறினாலே அவர்களும் தங்கள் செயலில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT