Published : 14 Jan 2018 11:04 AM
Last Updated : 14 Jan 2018 11:04 AM

கொண்டாட்டம்: கடல் தாய்க்கு ஒரு பொங்கல்!

மனித இனம் தோன்றிய காலம் முதல் உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண்களைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்துவருகிறது. வளமையின் வலிமையின் அடையாளமாகப் பெண்களைத் தமிழர்கள் பழங்காலம் முதல் பாவித்துவந்தனர். அதனால் அவர்களின் நாட்டார் வழிபாட்டில் முதல் வழிபாட்டுக்குரிய கடவுளாகப் பெண் விளங்குகிறாள். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் அதிகம் உள்ளன.

அனைத்து மனித உயிர்களுக்கும் தாயாகவும் என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. நதிகள், நாடுகள் ஆகியவை பெண்களின் பெயரால் வழங்கப்பட்டுவருவதும் பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.

சப்த கன்னியர் வழிபாடு

வளமை வழிபாடான ஏழு கன்னியர் எனப்படும் சப்த கன்னியர் வழிபாடு, உழவுத்தொழில் செழிக்க, செல்வம் பெருக, குழந்தைகள் நோயின்றி வளர, தொழில் சிறக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. இந்த வழிபாடு தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஊர்களில் வெவ்வேறு வடிவங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள்.

ராமநாதபுரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவச் சமுதாயத்தினர் ஒவ்வோர் ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு சிறுமிகளைத் தேர்வுசெய்கிறார்கள்.

பொங்கல் அன்று ஊரில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தபின்பு, குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமிகளுடன் கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள். பின்பு அந்தச் சிறுமிகள் கடலிலும் குளத்திலும் நீராடுகின்றனர். கோயில் முன்பு அமைக்கப்பட்ட வேப்பிலைத் தோரணம் எதிரில், பெரியவர்களின் உதவியோடு பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பொங்கியதும் குலவையிடுகிறார்கள். பொங்கல் தயாரானதும் அந்தப் பானைகளைக் கோயில் முன் வைத்துவிட்டு, அந்த ஊரில் உள்ள முனியய்யா கோயிலுக்கு ஆண்கள் மட்டும் சென்று வழிபடுகிறார்கள். அதன்பின் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரகச் செம்புகளோடு, ஏழு வாழையிலைகளில் பொங்கலை வைத்து அம்மனுக்குப் படைக்கிறார்கள்.

கடலில் விடப்படும் பாய்மரப் படகு

தென்னம்பாளையில் அழகிய வண்ணம் பூசப்பட்டுத் தயாரிக்கப்பட்ட சிறிய பாய்மரப் படகின் உள்ளே பூஜைப் பொருட்களோடு இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றித் திரியிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள். கிராமத் தலைவரிடம் அந்தப் பாய்மரப் படகைக் கோயில் பூசாரி எடுத்துத் தருகிறார். அவர் அதைக் கைகளில் ஏந்திக்கொண்டு முன் செல்ல, சப்த கன்னியர்களான சிறுமிகள் கரகச் செம்பைத் தலையில் ஏந்திப் பின் செல்கிறார்கள். மேளதாளத்துடன் கடலை நோக்கிச் செல்லும் அவர்கள் கழுத்தளவு தண்ணீர் உள்ள இடத்துக்குச் சென்று பாய்மரப் படகை கடலில் விட்டுவிட்டு, கரகச் செம்பில் உள்ள மஞ்சள் கலந்த பாலைக் கடலில் கொட்டி வழிபடுகிறார்கள்.

பாய்மரக் கப்பல் கடலில் காற்று அடிக்கும் திசையில் அடித்து ஆழ்கடல் பகுதிக்குச் சென்று படகில் உள்ள பூசைப்பொருட்களைக் கடல் தாயிடம் கொண்டு சேர்ப்பதாக மீனவ மக்கள் நம்புகிறார்கள். தலைமுறை தலைமுறையாக நடைபெறும் இவ்விழாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூஜைப்பொருட்களோடு ஒரு கிராம் தங்கமும் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

விவசாயப் பெருமக்களால் உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருக்கும் சூரியனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், மோர்ப்பண்ணை மீனவர்களால் தங்கள் வாழ்வை வளமாக்கும் கடல் தாய்க்கு நன்றி செலுத்தி வணங்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x